ரூத் 4:1-12

ரூத் 4:1-12 TCV

இதற்கிடையில் போவாஸ், பட்டண வாசலுக்குச் சென்று அங்கே உட்கார்ந்தான். அப்பொழுது போவாஸ் முன்பு குறிப்பிட்ட அந்த மீட்கும் உரிமையுடைய உறவினன் அவ்வழியே வந்தான். போவாஸ் அவனிடம், “என் நண்பனே இங்கே வந்து உட்காரு” என்றான். அவனும் அங்குபோய் உட்கார்ந்தான். போவாஸ் பட்டணத்து முதியவர்களில் பத்துபேரை கூட்டிக்கொண்டுவந்து, “இங்கே உட்காருங்கள்” என்றான். அவர்களும் உட்கார்ந்தார்கள். அப்பொழுது போவாஸ் மீட்கும் உரிமையுடைய அந்த உறவினனிடம், “எலிமெலேக் என்னும் நம் சகோதரனுக்குச் சொந்தமான நிலத்துண்டை, மோவாபிலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள். இதை நான் உன் கவனத்திற்குக் கொண்டுவருவது நல்லது என நினைத்தேன். எனவே இங்கு அமர்ந்திருப்பவர்களின் முன்னிலையிலும், என் மக்களின் முதியவர்களின் முன்னிலையிலும் நீ அதை வாங்க வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன். நீ அதை மீட்டுக்கொள்ள விரும்பினால் மீட்டுக்கொள். உனக்கு விருப்பமில்லையென்றால் நான் அறியும்படி எனக்குச் சொல். இதை மீட்கும் உரிமை உன்னைத்தவிர வேறொருவனுக்கும் இல்லை; உனக்கடுத்ததாக எனக்கே உரிமையுண்டு. நான் அதை மீட்பேன்” என்றான். அதற்கு அவன், “நான் அவ்வயலை மீட்டுக்கொள்கிறேன்” என்றான். அப்பொழுது போவாஸ், “நீ நகோமியிடமிருந்து அந்த நிலத்தை வாங்கும் அந்த நாளிலே, இறந்துபோனவனின் மனைவி ரூத் என்னும் மோவாபிய பெண்ணையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு இறந்த உன் உறவினன் பெயரையும், அவனுடைய உடைமையையும் பராமரிக்க வேண்டும்” என்றான். அதற்கு அந்த மீட்கும் உரிமையுடைய உறவினன், “அப்படியாயின் அந்நிலத்தை என்னால் மீட்டுக்கொள்ள முடியாது. அப்படி மீட்டுக்கொண்டால், நான் என் சொந்த உடைமையை இழக்க நேரிடலாம். நீயே அதை வாங்கி மீட்டுக்கொள். என்னால் அதை மீட்கமுடியாது” என்றான். இஸ்ரயேலில் முற்காலத்திலிருந்து வரும் வழக்கப்படி, மீட்கிறதிலும், சொத்துரிமையை மாற்றுகிறதிலும் அதை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக ஒருவன் தன் செருப்பைக் கழற்றி மற்றவனுக்குக் கொடுப்பான். இதுவே இஸ்ரயேலில் சொத்து மாற்றங்களைச் சட்டபூர்வமாக்கும் முறைமையாயிருந்தது. எனவே மீட்கும் உரிமையுடைய உறவினன் போவாஸிடம், “நீயே அதை வாங்கிக்கொள்” என்று சொல்லி தன் செருப்பைக் கழற்றிப் போட்டான். அப்பொழுது போவாஸ் அங்கிருந்த பெரியோரையும், மக்கள் எல்லோரையும் பார்த்துச் சொன்னதாவது, “இன்று நான் எலிமெலேக்கிற்கும் அவன் பிள்ளைகளான கிலியோன், மக்லோன் ஆகியவர்களுக்கும் உரிய உடைமைகள் யாவற்றையும் நகோமியிடமிருந்து வாங்கிவிட்டேன் என்பதற்கு, நீங்கள் எல்லோரும் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்றான். “மக்லோனின் மனைவியாயிருந்த ரூத் என்னும் மோவாபிய பெண்ணையும் நான் என் மனைவியாக, எனக்கு உரிமையாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு இறந்தவனுடைய பெயரை அவனுடைய சொத்துடன் அழியாமல் பராமரிப்பேன். இவ்விதமாக அவனுடைய பெயர் குடும்பத்தின் மத்தியிலிருந்தோ, அல்லது பட்டணத்தின் பதிவேடுகளிலிருந்தோ அழிந்துபோகாதிருக்கும். இதற்கு இன்று நீங்கள் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்றான். அப்பொழுது முதியவர்களும், பட்டண வாயிலிலிருந்த மற்றெல்லோரும் அவனிடம் சொன்னதாவது: “ஆம்! நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். உன் வீட்டிற்கு மனைவியாக வரப்போகிற இப்பெண்ணை யெகோவா, இஸ்ரயேலின் வீட்டைக் கட்டியெழுப்பிய ராகேலைப்போலவும், லேயாளைப்போலவும் ஆக்குவாராக! எப்பிராத்தில் செல்வந்தனாயிருந்து, பெத்லெகேமிலே பெயர் பெற்றிருப்பாயாக. இந்த இளம்பெண் வழியாக யெகோவா உனக்குக் கொடுக்கவிருக்கும் சந்ததியினரால் உன் குடும்பம் தாமார் யூதாவுக்குப் பெற்றெடுத்த பேரேஸின் குடும்பத்தைப்போல் இருப்பதாக!” என வாழ்த்தினார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரூத் 4:1-12