ரூத் 2:4-17

ரூத் 2:4-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள். பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான். அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை. அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான். அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு. அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான். அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள். அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது. உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள். பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள். அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம்பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான். அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.

ரூத் 2:4-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வயலுக்கு வந்துசேர்ந்தான். அவன் அறுவடை செய்கிறவர்களிடம், “யெகோவா உங்களோடிருப்பாராக!” என வாழ்த்தினான். அவர்களும், “யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக” என வாழ்த்தினார்கள். பின் போவாஸ் அறுவடை செய்கிறவர்களைக் கண்காணிப்பவனிடம், “அந்த இளம்பெண் யாரைச் சேர்ந்தவள்?” என கேட்டான். அந்த கண்காணி போவஸிடம், “இவள் நகோமியுடன் மோவாப் நாட்டிலிருந்து வந்த மோவாபியப் பெண்; அவள் என்னிடம், ‘அறுவடை செய்கிறவர்களின் பின்னால் அரிக்கட்டுகளில் இருந்து சிந்துகிற கதிர்களைப் பொறுக்க தயவுசெய்து அனுமதியும்’ என்று கேட்டுக்கொண்டாள். காலை தொடங்கி இப்பொழுதுவரை வயலில் தொடர்ந்து வேலைசெய்தாள்; இப்பொழுதுதான் சிறிது நேரம் இளைப்பாற குடிசைக்குள் வந்தாள்” என்றான். அப்பொழுது போவாஸ் ரூத்திடம், “என் மகளே, எனக்குச் செவிகொடு. கதிர் பொறுக்குவதற்கு நீ வேறு வயலுக்குப் போகவேண்டாம். என் பணிப்பெண்களுடன் இங்கேயே இரு. மனிதர் அறுவடை செய்கிற வயலை நீ கவனித்து, பணிப்பெண்களுடனே பின்தொடர்ந்து நீயும் போ; உன்னை யாரும் தொடக்கூடாது என்று என் வேலைக்காரருக்குச் சொல்லியிருக்கிறேன். உனக்குத் தாகம் உண்டானால் என் வேலைக்காரர் நிரப்பியிருக்கும் குடங்களிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடி” என்றான். அதைக்கேட்ட அவள் பணிந்து விழுந்து வணங்கி, “நான் அந்நிய நாட்டவளாயிருந்தும் எனக்கு இவ்வளவு தயவு காட்டுகிறீர்களே!” என்று வியப்புடன் சொன்னாள். அதற்கு போவாஸ், “உன் கணவன் இறந்தபின் நீ உன் மாமியார் நகோமிக்குச் செய்ததெல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். உன் தாய் தகப்பனையும், நீ பிறந்த உன் நாட்டையும் விட்டு, முன் பின் அறியாத மக்கள் மத்தியில் வசிக்க வந்ததையும் நான் கேள்விப்பட்டேன். நீ செய்த எல்லாவற்றிற்கும் ஏற்ற பலனை யெகோவா உனக்குக் கொடுப்பாராக. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் சிறகுகளில் அடைக்கலம் புகும்படி வந்த உனக்கு, அவரிடமிருந்து நிறைவான வெகுமதி கிடைப்பதாக” என்றான். அப்பொழுது அவள், “ஐயா! உங்களுடைய கண்களில் தொடர்ந்து எனக்குத் தயை கிடைக்கவேண்டும். நான் உங்களுடைய பணிப்பெண்களுக்குக்கூட சமனானவள் அல்ல. அப்படியிருந்தும் நீங்கள் எனக்கு கருணைகாட்டி, உங்கள் அடியாளாகிய என்னுடன் தயவாய்ப் பேசினீர்களே!” என்றாள். சாப்பாட்டு வேளையில் போவாஸ் அவளிடம், “நீ இங்கே வா! இந்த அப்பத்தில் எடுத்துச் சாப்பிடு. இந்தத் திராட்சைப் பழச்சாறில் அப்பத்தைத் தொட்டுக்கொள்” என்றான். அறுவடை செய்கிறவர்களுடன் உட்கார்ந்தபோது, அவன் அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் திருப்தியாக சாப்பிட்டபின் அதில் கொஞ்சம் அவளிடத்தில் மீதியிருந்தது. அவள் மறுபடியும் கதிர் பொறுக்க எழுந்தபோது, போவாஸ் தன் பணியாட்களிடம், “அவள் அரிக்கட்டுகளுக்கிடையில் பொறுக்கினாலும் அவளைத் தடுக்கவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படி கட்டுகளிலிலிருந்து சில கதிர்களை வேண்டுமென்றே சிந்தவிடுங்கள்; அவளை அதட்டாதிருங்கள்” என்று அவர்களுக்கு உத்தரவிட்டான். இவ்வாறு மாலைவரை வயலில் ரூத் கதிர் பொறுக்கினாள். அவள் பொறுக்கிய கதிர்களைத் தட்டி அடித்துச் சேர்த்தபோது ஏறக்குறைய ஒரு எப்பா வாற்கோதுமை இருந்தது.

ரூத் 2:4-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: யெகோவா உங்களோடு இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள். பின்பு போவாஸ் அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான். அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் மறுமொழியாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடு வந்த மோவாபியப் பெண்பிள்ளை. அறுக்கிறவர்களின் பின்னே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடம் கேட்டுக்கொண்டாள்; காலை துவங்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரம்தான் ஆனது என்றான். அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறு வயலுக்கு போகாமலும், இந்த இடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு இரு. அவர்கள் அறுப்பு அறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பின்னே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களிடத்திற்குப் போய், வேலைக்காரர்கள் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான். அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நிய தேசத்தைச் சேர்ந்தவளாக இருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயவு கிடைத்தது என்றாள். அதற்கு போவாஸ் மறுமொழியாக: உன் கணவன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், நீ பிறந்த தேசத்தையும் விட்டு, இதற்கு முன்னே நீ அறியாத மக்களிடம் வந்ததும் எல்லாம் எனக்கு விபரமாகத் தெரிவிக்கப்பட்டது. உன் செயல்களுக்குத் தகுந்த பலனைக் யெகோவா உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய சிறகுகளின்கீழ் அடைக்கலமாக வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமமாக இல்லாவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளாகிய என்னோடு தயவாகப் பேசினீரே என்றாள். பின்பு போவாஸ் சாப்பாட்டு நேரத்தில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்தைப் சாப்பிட, புளிப்பான திராட்சை ரசத்திலே உன் அப்பத் துண்டுகளைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பு அறுக்கிறவர்களின் அருகில் உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீதியானதை வைத்துக்கொண்டாள். அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஒன்றும் சொல்லவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படி அவளுக்காக அரிகளிலே சிலவற்றைச் சிந்திவிடுங்கள், அவளை அதட்டாமல் இருங்கள் என்று கட்டளையிட்டான். அப்படியே அவள் மாலைநேரம்வரைக்கும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துமுடிக்கும்போது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமையாக இருந்தது.

ரூத் 2:4-17 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு போவாஸ் பெத்லெகேமிலிருந்து வயலுக்கு வந்தான். அவன் வேலைக்காரர்களை வாழ்த்தி, “கர்த்தர் உங்களோடு இருக்கட்டும்” என்று கூறினான். அதற்கு வேலைக்காரர்களும், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என்றனர். பிறகு, போவாஸ் தனது வேலைக்காரர்களிடம், “அந்தப் பெண் யார்?” என்று கேட்டான். வேலைக்காரன் அதற்கு, “அவள் மோவாபிய பெண். அவள் மலைநாடான மோவாபிலிருந்து நகோமியோடு வந்திருக்கிறாள். அவள் அதிகாலையில் என்னிடம் வந்து, வேலைக்காரர்களின் பின்னால் போய், சிதறும் தானியங்களை எடுத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டாள். இதுவரை இங்கேயே இருக்கிறாள். அவளது குடிசையும் இங்கேதான் இருக்கிறது” என்றான். பிறகு போவாஸ் ரூத்திடம், “பெண்ணே கவனி, நீ என் வயலிலேயே தங்கியிருந்து சிதறும் தானியங்களை எல்லாம் சேகரித்து உனக்காக எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்களின் வயலுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து பெண் வேலைக்காரர்களின் பின்னால் போ. அவர்கள் எந்த வயலுக்குப் போகிறார்கள் என்பதைப் பார்த்திருந்து, அவர்களைப் பின்தொடர்ந்து செல். உனக்குத் தொந்தரவு செய்யாதபடி இங்குள்ள இளைஞர்களை எச்சரித்திருக்கிறேன். உனக்குத் தாகமாக இருக்கும்போது, எனது ஆட்கள் குடிக்கும் ஜாடியில் இருந்தே நீயும் தண்ணீரை எடுத்துக் குடிக்கலாம்” என்றான். ரூத் தரையில் பணிந்து வணங்கினாள். அவள் போவாஸிடம், “என்னைப் பொருட்படுத்தி கவனித்ததுபற்றி ஆச்சரியப்படுகிறேன். நான் அந்நிய தேசத்தாளாயிருந்தும் என் மீது கருணை காட்டுகிறீர்” என்றாள். போவாஸ் அவளுக்குப் பதிலாக, “நீ உன் மாமியாரான நகோமிக்குச் செய்துவரும் உதவியைப் பற்றி, நானும் அறிந்துள்ளேன். உன் கணவன் மரித்தப் பிறகும் நீ அவளுக்கு உதவி வருகிறாய். நீ உனது தந்தை, தாய், உறவினர், நாடு அனைத்தையும் விட்டு, விட்டு இங்கே வந்திருக்கிறாய். இங்குள்ள எவரையும் உனக்குத் தெரியாது. எனினும் நீ நகோமியோடு இங்கே வந்துவிட்டாய். நீ செய்த நல்ல செயல்களுக்கெல்லாம் கர்த்தர் உனக்கு நன்மைச் செய்வார். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் உனக்கு முழுமையான பலனைத் தருவார். அவரிடம் பாதுகாப்புக்காக வந்திருக்கிறாய். அவர் உன்னைப் பாதுகாப்பார்” என்றான். பிறகு ரூத், “நீங்கள் என்னிடம் மிகுந்த கருணையோடு இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண வேலைக்காரி. நான் உங்கள் வேலைக்காரிகளுள் ஒருத்திக்குக்கூட சமமானவள் அல்ல. ஆனால் நீங்கள் என்னிடம் கருணையான வார்த்தைகளைக் கூறி ஆறுதலடையச் செய்துள்ளீர்கள்” என்றாள். மதிய உணவு நேரத்தில், போவாஸ், “இங்கே வா! எங்களிடம் இருக்கும் அப்பத்தில், நீயும் கொஞ்சம் சாப்பிடு. உன் அப்பத்தை இந்த காடியிலே தோய்த்துக் கொள்” என்று ரூத்திடம் சொன்னான். எனவே ரூத் வேலைக்காரர்களோடு உட்கார்ந்தாள். போவாஸ் அவளுக்குக் கொஞ்சம் வறுத்த கோதுமையைக் கொடுத்தான். அவள் வயிறு நிறைய சாப்பிட்டாள். எனினும் உணவு மிஞ்சியது. பிறகு அவள் எழுந்து தன் வேலைக்குத் திரும்பிப் போனாள். பின்னர் போவாஸ் தன் வேலைக்காரர்களிடம், “அவள் அறுத்த கட்டுகளின் நடுவே இருக்கும் தானியங்களையுங்கூடச் சேகரித்துக்கொள்ளட்டும். அவளைத் தடுக்க வேண்டாம். அவளுக்கு எளிதாக இருக்கும்படி, அறுக்கும்போதே சில தானியக் கதிர்களை விட்டுச் செல்லுங்கள். அவள் அவற்றை சேகரித்துக்கொள்ளட்டும். சேகரிக்கும் வேலையை நிறுத்தும்படி சொல்ல வேண்டாம்” என்றான். ரூத் மாலைவரை வயல்களில் வேலை செய்தாள். பிறகு அவள் தான் பொறுக்கியதை தட்டி அடித்துப் புடைத்தாள். அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது.