ரூத்தின் சரித்திரம் 2:4-17

ரூத்தின் சரித்திரம் 2:4-17 TAERV

பிறகு போவாஸ் பெத்லெகேமிலிருந்து வயலுக்கு வந்தான். அவன் வேலைக்காரர்களை வாழ்த்தி, “கர்த்தர் உங்களோடு இருக்கட்டும்” என்று கூறினான். அதற்கு வேலைக்காரர்களும், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என்றனர். பிறகு, போவாஸ் தனது வேலைக்காரர்களிடம், “அந்தப் பெண் யார்?” என்று கேட்டான். வேலைக்காரன் அதற்கு, “அவள் மோவாபிய பெண். அவள் மலைநாடான மோவாபிலிருந்து நகோமியோடு வந்திருக்கிறாள். அவள் அதிகாலையில் என்னிடம் வந்து, வேலைக்காரர்களின் பின்னால் போய், சிதறும் தானியங்களை எடுத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டாள். இதுவரை இங்கேயே இருக்கிறாள். அவளது குடிசையும் இங்கேதான் இருக்கிறது” என்றான். பிறகு போவாஸ் ரூத்திடம், “பெண்ணே கவனி, நீ என் வயலிலேயே தங்கியிருந்து சிதறும் தானியங்களை எல்லாம் சேகரித்து உனக்காக எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்களின் வயலுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து பெண் வேலைக்காரர்களின் பின்னால் போ. அவர்கள் எந்த வயலுக்குப் போகிறார்கள் என்பதைப் பார்த்திருந்து, அவர்களைப் பின்தொடர்ந்து செல். உனக்குத் தொந்தரவு செய்யாதபடி இங்குள்ள இளைஞர்களை எச்சரித்திருக்கிறேன். உனக்குத் தாகமாக இருக்கும்போது, எனது ஆட்கள் குடிக்கும் ஜாடியில் இருந்தே நீயும் தண்ணீரை எடுத்துக் குடிக்கலாம்” என்றான். ரூத் தரையில் பணிந்து வணங்கினாள். அவள் போவாஸிடம், “என்னைப் பொருட்படுத்தி கவனித்ததுபற்றி ஆச்சரியப்படுகிறேன். நான் அந்நிய தேசத்தாளாயிருந்தும் என் மீது கருணை காட்டுகிறீர்” என்றாள். போவாஸ் அவளுக்குப் பதிலாக, “நீ உன் மாமியாரான நகோமிக்குச் செய்துவரும் உதவியைப் பற்றி, நானும் அறிந்துள்ளேன். உன் கணவன் மரித்தப் பிறகும் நீ அவளுக்கு உதவி வருகிறாய். நீ உனது தந்தை, தாய், உறவினர், நாடு அனைத்தையும் விட்டு, விட்டு இங்கே வந்திருக்கிறாய். இங்குள்ள எவரையும் உனக்குத் தெரியாது. எனினும் நீ நகோமியோடு இங்கே வந்துவிட்டாய். நீ செய்த நல்ல செயல்களுக்கெல்லாம் கர்த்தர் உனக்கு நன்மைச் செய்வார். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் உனக்கு முழுமையான பலனைத் தருவார். அவரிடம் பாதுகாப்புக்காக வந்திருக்கிறாய். அவர் உன்னைப் பாதுகாப்பார்” என்றான். பிறகு ரூத், “நீங்கள் என்னிடம் மிகுந்த கருணையோடு இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண வேலைக்காரி. நான் உங்கள் வேலைக்காரிகளுள் ஒருத்திக்குக்கூட சமமானவள் அல்ல. ஆனால் நீங்கள் என்னிடம் கருணையான வார்த்தைகளைக் கூறி ஆறுதலடையச் செய்துள்ளீர்கள்” என்றாள். மதிய உணவு நேரத்தில், போவாஸ், “இங்கே வா! எங்களிடம் இருக்கும் அப்பத்தில், நீயும் கொஞ்சம் சாப்பிடு. உன் அப்பத்தை இந்த காடியிலே தோய்த்துக் கொள்” என்று ரூத்திடம் சொன்னான். எனவே ரூத் வேலைக்காரர்களோடு உட்கார்ந்தாள். போவாஸ் அவளுக்குக் கொஞ்சம் வறுத்த கோதுமையைக் கொடுத்தான். அவள் வயிறு நிறைய சாப்பிட்டாள். எனினும் உணவு மிஞ்சியது. பிறகு அவள் எழுந்து தன் வேலைக்குத் திரும்பிப் போனாள். பின்னர் போவாஸ் தன் வேலைக்காரர்களிடம், “அவள் அறுத்த கட்டுகளின் நடுவே இருக்கும் தானியங்களையுங்கூடச் சேகரித்துக்கொள்ளட்டும். அவளைத் தடுக்க வேண்டாம். அவளுக்கு எளிதாக இருக்கும்படி, அறுக்கும்போதே சில தானியக் கதிர்களை விட்டுச் செல்லுங்கள். அவள் அவற்றை சேகரித்துக்கொள்ளட்டும். சேகரிக்கும் வேலையை நிறுத்தும்படி சொல்ல வேண்டாம்” என்றான். ரூத் மாலைவரை வயல்களில் வேலை செய்தாள். பிறகு அவள் தான் பொறுக்கியதை தட்டி அடித்துப் புடைத்தாள். அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது.

ரூத்தின் சரித்திரம் 2:4-17 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்