ரூத் 2:15-20
ரூத் 2:15-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவள் மறுபடியும் கதிர் பொறுக்க எழுந்தபோது, போவாஸ் தன் பணியாட்களிடம், “அவள் அரிக்கட்டுகளுக்கிடையில் பொறுக்கினாலும் அவளைத் தடுக்கவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படி கட்டுகளிலிலிருந்து சில கதிர்களை வேண்டுமென்றே சிந்தவிடுங்கள்; அவளை அதட்டாதிருங்கள்” என்று அவர்களுக்கு உத்தரவிட்டான். இவ்வாறு மாலைவரை வயலில் ரூத் கதிர் பொறுக்கினாள். அவள் பொறுக்கிய கதிர்களைத் தட்டி அடித்துச் சேர்த்தபோது ஏறக்குறைய ஒரு எப்பா வாற்கோதுமை இருந்தது. ரூத் அதை எடுத்துக்கொண்டு பட்டணத்திற்குத் திரும்பிப்போனதும் அவள் சேர்த்த தானியம் அதிகமாயிருப்பதை அவளுடைய மாமியார் கண்டாள். அத்துடன் ரூத் தான் திருப்தியாகச் சாப்பிட்டு, மீந்திருந்ததில் கொண்டுவந்ததைத் தன் மாமியிடம் கொடுத்தாள். அதைக்கண்ட ரூத்தின் மாமியார் அவளிடம், “எங்கே நீ இன்று கதிர் பொறுக்கினாய்? எங்கே வேலைசெய்தாய்? உன்னில் அக்கறைகாட்டிய அந்த மனிதன் ஆசீர்வதிக்கப்படுவானாக” என்றாள். அப்பொழுது ரூத் தன் மாமியாரிடம், தான் யாருடைய வயலில் வேலைசெய்தேன் என்பதைப் பற்றிச் சொன்னாள். “இன்று நான் வேலைசெய்த வயலின் உரிமையாளனின் பெயர் போவாஸ்” என்றும் சொன்னாள். நகோமி, “யெகோவா அவனை ஆசீர்வதிப்பாராக!” என்று சொல்லி தன் மருமகளிடம், “அவர் உயிரோடிருக்கிறவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் தயைகாட்டுவதை இன்னும் நிறுத்தவில்லை” என்றாள். மேலும் நகோமி, “அந்த மனிதன் எங்கள் நெருங்கிய உறவினன்; அவன் நம்மை மீட்கும் உரிமையுள்ள உறவினரில் ஒருவன்” என்றாள்.
ரூத் 2:15-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஒன்றும் சொல்லவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படி அவளுக்காக அரிகளிலே சிலவற்றைச் சிந்திவிடுங்கள், அவளை அதட்டாமல் இருங்கள் என்று கட்டளையிட்டான். அப்படியே அவள் மாலைநேரம்வரைக்கும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துமுடிக்கும்போது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமையாக இருந்தது. அவள் அதை எடுத்துக்கொண்டு ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமியார் பார்த்தாள்; தான் திருப்தியாகச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள். அப்பொழுது அவளுடைய மாமியார்: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எந்த இடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடம் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமியாருக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரனுடைய பெயர் போவாஸ் என்றாள். அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற யெகோவாவாலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற பங்காளிகளில் ஒருவனுமாக இருக்கிறான் என்றாள்.
ரூத் 2:15-20 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு அவள் எழுந்து தன் வேலைக்குத் திரும்பிப் போனாள். பின்னர் போவாஸ் தன் வேலைக்காரர்களிடம், “அவள் அறுத்த கட்டுகளின் நடுவே இருக்கும் தானியங்களையுங்கூடச் சேகரித்துக்கொள்ளட்டும். அவளைத் தடுக்க வேண்டாம். அவளுக்கு எளிதாக இருக்கும்படி, அறுக்கும்போதே சில தானியக் கதிர்களை விட்டுச் செல்லுங்கள். அவள் அவற்றை சேகரித்துக்கொள்ளட்டும். சேகரிக்கும் வேலையை நிறுத்தும்படி சொல்ல வேண்டாம்” என்றான். ரூத் மாலைவரை வயல்களில் வேலை செய்தாள். பிறகு அவள் தான் பொறுக்கியதை தட்டி அடித்துப் புடைத்தாள். அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது. ரூத் அதனை எடுத்துக்கொண்டு நகரத்துக்குள் போய் தன் மாமியாரிடம் அவற்றைக் காட்டினாள். அத்துடன் தன்னிடம் மீதியிருந்த மதிய உணவையும் அவளுக்குக் கொடுத்தாள். அவளது மாமியாரோ அவளிடம், “நீ இந்த தானியத்தை எங்கே சேகரித்தாய்? எங்கே வேலை செய்தாய்? உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றாள். ரூத் அவளிடம் தான் யாரோடு வேலை செய்தாள் என்பதைக் கூறினாள். அவள், “இன்றைக்கு நான் வேலைசெய்த வயல்காரனின் பெயர் போவாஸ்” என்றாள். நகோமி தன் மருமகளிடம், “கர்த்தர் அவனை ஆசீர்வதிக்கட்டும்! உயிருடன் இருப்பவர்களுக்கும், மரித்துப்போனவர்களுக்கும் தொடர்ந்து தன் கருணையை அவரே காட்டி வருகிறார்” என்றாள். அத்துடன் “போவாஸ் நமது உறவினர்களில் ஒருவன், போவாஸ் நமது பாதுகாவலர்களிலும் ஒருவன்” என்றாள்.
ரூத் 2:15-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம்பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான். அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது. அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள். அப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள். அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்.