ரூத்தின் சரித்திரம் 2:15-20

ரூத்தின் சரித்திரம் 2:15-20 TAERV

பிறகு அவள் எழுந்து தன் வேலைக்குத் திரும்பிப் போனாள். பின்னர் போவாஸ் தன் வேலைக்காரர்களிடம், “அவள் அறுத்த கட்டுகளின் நடுவே இருக்கும் தானியங்களையுங்கூடச் சேகரித்துக்கொள்ளட்டும். அவளைத் தடுக்க வேண்டாம். அவளுக்கு எளிதாக இருக்கும்படி, அறுக்கும்போதே சில தானியக் கதிர்களை விட்டுச் செல்லுங்கள். அவள் அவற்றை சேகரித்துக்கொள்ளட்டும். சேகரிக்கும் வேலையை நிறுத்தும்படி சொல்ல வேண்டாம்” என்றான். ரூத் மாலைவரை வயல்களில் வேலை செய்தாள். பிறகு அவள் தான் பொறுக்கியதை தட்டி அடித்துப் புடைத்தாள். அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது. ரூத் அதனை எடுத்துக்கொண்டு நகரத்துக்குள் போய் தன் மாமியாரிடம் அவற்றைக் காட்டினாள். அத்துடன் தன்னிடம் மீதியிருந்த மதிய உணவையும் அவளுக்குக் கொடுத்தாள். அவளது மாமியாரோ அவளிடம், “நீ இந்த தானியத்தை எங்கே சேகரித்தாய்? எங்கே வேலை செய்தாய்? உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றாள். ரூத் அவளிடம் தான் யாரோடு வேலை செய்தாள் என்பதைக் கூறினாள். அவள், “இன்றைக்கு நான் வேலைசெய்த வயல்காரனின் பெயர் போவாஸ்” என்றாள். நகோமி தன் மருமகளிடம், “கர்த்தர் அவனை ஆசீர்வதிக்கட்டும்! உயிருடன் இருப்பவர்களுக்கும், மரித்துப்போனவர்களுக்கும் தொடர்ந்து தன் கருணையை அவரே காட்டி வருகிறார்” என்றாள். அத்துடன் “போவாஸ் நமது உறவினர்களில் ஒருவன், போவாஸ் நமது பாதுகாவலர்களிலும் ஒருவன்” என்றாள்.