ரோமர் 2:1-12
ரோமர் 2:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். தேவனிடத்தில் பட்சபாதமில்லை. எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.
ரோமர் 2:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மற்றவர்களை நியாயந்தீர்க்கிறவனே, நீ சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் எந்தக் காரியங்களில் நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயோ, அதே காரியங்களை நீ செய்கிறபடியால், நீ உன்னையே குற்றவாளியெனத் தீர்ப்புச் செய்கிறாய். இப்படி நடக்கிறவர்களுக்கு விரோதமான இறைவனுடைய நியாயத்தீர்ப்பு, சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே நீ ஒரு அற்ப மனிதனாயிருந்தும், நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயே. அதே காரியங்களை நீயே செய்யும்போது, இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்புவாய் என்று நினைக்கிறாயா? அல்லது, இறைவனுடைய தயவு உன்னை மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது என்று உணராமல், அவருடைய தயவு, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றின் நிறைவை ஏளனம் பண்ணுகிறாயா? நீயோ உன் பிடிவாதத்தினாலும், மனந்திரும்பாத இருதயத்தினாலும், இறைவனின் கோபத்தை அவருடைய கோபத்தின் நாளுக்கென குவித்துக்கொண்டு வருகிறாய். அந்த நாளிலே அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பு வெளிப்படும். இறைவன், “ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பவே பலன் கொடுப்பார்.” நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். ஆனால் சுயநலக்காரருக்கும், சத்தியத்தை புறக்கணித்துத் தீமையைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கோபமும், உக்கிரகோபமுமே இருக்கும். தீமைசெய்கிற ஒவ்வொரு மனிதருக்கும் பிரச்சனையும் துன்பமுமே இருக்கும்: அது முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும்; ஆனால், நன்மை செய்கிற ஒவ்வொருவருக்கும் மகிமையும், கனமும், சமாதானமும் இருக்கும். அதுவும் முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும். ஏனென்றால், இறைவன் பாரபட்சம் காட்டுவதில்லை. யூத சட்டத்தை அறியாதவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்திற்குப் புறம்பாகவே அழிவார்கள். யூத சட்டத்திற்கு உட்பட்டவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
ரோமர் 2:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ? அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார். சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும். முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும். முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும். தேவனிடம் பட்சபாதம் இல்லை. எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள்.
ரோமர் 2:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும். இத்தகையவர்களுக்கு தேவன் தீர்ப்பளிப்பார். அவரது தீர்ப்பு நீதியாய் இருக்கும். அத்தவறான செயல்களைச் செய்பவர்களுக்கு நீயும் தீர்ப்பளிக்கிறாய். ஆனால் அதே தவறுகளை நீயும் செய்கிறாய். தேவனுடைய தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா? தேவன் உன்னிடம் மிகக் கருணையோடும் பொறுமையாகவும் இருக்கிறார். அவரிடம் திரும்பி வருவாய் எனக் காத்திருக்கிறார். ஆனால் அவரது கருணையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். ஏனென்றால் உன் இதயத்தையும் வாழ்வையும் நல் வழியில் திருப்பும் அவரது நோக்கத்தை நீ உணர்ந்துகொள்ளவில்லை. நீ கடினமாகவும் உறுதியாகவும் இருக்கிறாய். நீ மாற மறுக்கிறாய். உன் தண்டனையை மிகுதிப்படுத்துகிறாய். தேவனுடைய கோபம் வெளிப்படும் நாளில் நீ தண்டனையைப் பெறுவாய். அன்று மக்கள் தேவனுடைய சரியான தீர்ப்பினை அறிந்துகொள்வர். ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கேற்றபடி அவனுக்கு தேவன் நற்பலனோ, தண்டனையோ கொடுப்பார். சிலர் தேவனுடைய மகிமைக்காகவும், கனத்துக்காகவும், என்றும் அழிவற்ற வாழ்வுக்காகவும் வாழ்கிறார்கள். நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இத்தகு வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நித்திய வாழ்வை தேவன் தருகிறார். மற்றவர்களோ சுய நலவாதிகளாகி, உண்மையைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். அவர்கள் பாவத்தின் வழி நடப்பவர்கள். இவர்களுக்கு தேவன் தண்டனையையும், கோபாக்கினையையும் வழங்குவார். முதலில் யூதர்களுக்கும் பின்பு யூதர் அல்லாதவர்களுக்கும், தீங்கு செய்கிற எவருக்கும் தேவன் துயரமும், துன்பமும் கொடுப்பார். முதலில் யூதர்களிலும் பின்பு யூதர் அல்லாதவர்களிலும் நன்மை செய்கிற எவருக்கும் தேவன் மகிமையையும், கனத்தையும், சமாதானத்தையும் தருவார். தேவன் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமாகவே தீர்ப்பளிப்பார். தேவனுடைய சட்டத்தை அறிந்தவர்களானாலும், அதைப்பற்றிக் கேள்விப்பட்டிராத மக்களாயினும் பாவம் செய்யும்போது ஒத்த நிலை உடையவர்ளாக ஆகிறார்கள். சட்ட அறிவு அற்றவர்களாகவும், பாவிகளாகவும் இருப்பவர்கள் கைவிடப்படுவார்கள். அதேபோல், சட்டம் தெரிந்தும் பாவம் செய்தவர்கள் அதே சட்டத்தின்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள்.