ரோமர் 2:1-12

ரோமர் 2:1-12 TCV

மற்றவர்களை நியாயந்தீர்க்கிறவனே, நீ சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் எந்தக் காரியங்களில் நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயோ, அதே காரியங்களை நீ செய்கிறபடியால், நீ உன்னையே குற்றவாளியெனத் தீர்ப்புச் செய்கிறாய். இப்படி நடக்கிறவர்களுக்கு விரோதமான இறைவனுடைய நியாயத்தீர்ப்பு, சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே நீ ஒரு அற்ப மனிதனாயிருந்தும், நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயே. அதே காரியங்களை நீயே செய்யும்போது, இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்புவாய் என்று நினைக்கிறாயா? அல்லது, இறைவனுடைய தயவு உன்னை மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது என்று உணராமல், அவருடைய தயவு, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றின் நிறைவை ஏளனம் பண்ணுகிறாயா? நீயோ உன் பிடிவாதத்தினாலும், மனந்திரும்பாத இருதயத்தினாலும், இறைவனின் கோபத்தை அவருடைய கோபத்தின் நாளுக்கென குவித்துக்கொண்டு வருகிறாய். அந்த நாளிலே அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பு வெளிப்படும். இறைவன், “ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பவே பலன் கொடுப்பார்.” நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். ஆனால் சுயநலக்காரருக்கும், சத்தியத்தை புறக்கணித்துத் தீமையைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கோபமும், உக்கிரகோபமுமே இருக்கும். தீமைசெய்கிற ஒவ்வொரு மனிதருக்கும் பிரச்சனையும் துன்பமுமே இருக்கும்: அது முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும்; ஆனால், நன்மை செய்கிற ஒவ்வொருவருக்கும் மகிமையும், கனமும், சமாதானமும் இருக்கும். அதுவும் முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும். ஏனென்றால், இறைவன் பாரபட்சம் காட்டுவதில்லை. யூத சட்டத்தை அறியாதவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்திற்குப் புறம்பாகவே அழிவார்கள். யூத சட்டத்திற்கு உட்பட்டவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

ரோமர் 2:1-12 க்கான வீடியோ