ரோமர் 11:7-12

ரோமர் 11:7-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகையால் என்ன? இஸ்ரயேலர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தேடியதை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களில் இறைவன் தெரிந்துகொண்ட சிலரே அதைப் பெற்றுக்கொண்டார்கள். மற்றவர்களோ மனம் கடினப்பட்டவர்கள் ஆனார்கள். இது வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “இறைவன் அவர்களுக்கு ஒரு மந்தமுள்ள ஆவியைக் கொடுத்தார். இதனால் இன்றுவரை அவர்கள் தங்களுடைய கண்களினால் காணமுடியாதவர்களாயும், காதுகளால் கேட்க முடியாதவர்களாயும் இருக்கிறார்கள்.” தாவீது இவர்களைக்குறித்து: “அவர்களுடைய விருந்துகள், அவர்களுக்குக் கண்ணியாகவும், பொறியாகவும், தடுமாறும் கல்லாகவும், தங்களுக்குரிய தண்டனையாகவும் இருக்கட்டும். அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும், அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும்” என்கிறான். நான் மீண்டும் கேட்கின்றேன்: இஸ்ரயேலர் விழுந்துபோவதற்காக இடறினார்களா? இல்லவே இல்லை, இஸ்ரயேலர்களுடைய மீறுதலினாலேயே, யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு வந்தது. இதைக்கண்டு இஸ்ரயேலர்கள் பொறாமைப்பட்டு இரட்சிப்பைத் தேடவேண்டுமென்பதே, இறைவனுடைய நோக்கமாயிருந்தது. இஸ்ரயேலர்களுடைய மீறுதல் உலகத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொடுத்ததே; அவர்களுடைய இழப்பு யூதரல்லாத மக்களுக்கு ஆசீர்வாதமாயிற்று என்றால், அவர்கள் எல்லோரும் மீட்படைந்தால் இன்னும் எவ்வளவு பெரிதான ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.

ரோமர் 11:7-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றைய நாள்வரை கடினப்பட்டிருக்கிறார்கள். தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது. அன்றியும், “அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்; பார்க்காதபடிக்கு அவர்களுடைய கண்கள் இருள் அடையட்டும்; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும்” என்று தாவீதும் சொல்லியிருக்கிறான். இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அவர்களுடைய தவறு உலகத்திற்கு செல்வமும், அவர்களுடைய குறைவு யூதரல்லாத மக்களுக்கு செல்வமாகவும் இருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும்.

ரோமர் 11:7-12 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்படியானால் நடந்தது இதுதான். இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கேற்ற நீதிமான்களாக முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் தோல்வியுற்றனர். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதிமான்களாகச் செயல்புரிகிறார்கள். மற்றவர்களோ முரடர்களாகவும், தேவனுடைய வார்த்தைகளைக் கவனிக்க மறுப்பவர்களாகவும் உள்ளனர். “மக்களின் உணர்ச்சியை தேவன் மறக்கச் செய்தார்” என்றும் அதனால், “தேவன் அவர்களின் கண்களை மூடினார்.” “அதனால் அவர்களால் உண்மையைப் பார்க்க முடியவில்லை. தேவன் அவர்களின் காதுகளை மூடினார். அதனால் அவர்களால் உண்மையாகக் கேட்க முடியவில்லை. இது இன்றும் தொடர்கிறது.” என்றும் எழுதப்பட்டிருக்கிறது. “அவர்களின் சொந்த விருந்துகளே அவர்கள் வலையாகவும், கண்ணியாகவும் ஆகட்டும். அவர்கள் விழுந்து தண்டிக்கப்படட்டும். உண்மையைக் காண இயலாதபடி அவர்களின் கண்கள் மூடிப் போகட்டும். அவர்கள் என்றென்றைக்கும் துன்பத்தில் இருக்கட்டும்” என்று தாவீது கூறியிருக்கிறார். “யூதர்கள் அழிந்துபோகிற அளவுக்கா தடுக்கிவிழுந்தார்கள்?” என்று கேட்கிறேன். இல்லை. அவர்களின் தவறுகள் மற்ற யூதர் அல்லாதவர்களுக்கு இரட்சிப்பாயிற்று. இதனால் யூதர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. யூதர்களின் தவறு உலகத்துக்கு அதிக ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது. அவர்களின் குறைவு யூதரல்லாதவர்களுக்கு அதிக ஆசீர்வாதமாய் ஆயிற்று. யூதர்கள் தேவனுக்கேற்றவர்களாக ஆகும்வரை இன்னும் எவ்வளவு ஆசீர்வாதங்கள் வரும் எனக் கற்பனை செய்யுங்கள்.

ரோமர் 11:7-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள். கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது; காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான். இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்