ரோமர் 11:7-12

ரோமர் 11:7-12 TCV

ஆகையால் என்ன? இஸ்ரயேலர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தேடியதை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களில் இறைவன் தெரிந்துகொண்ட சிலரே அதைப் பெற்றுக்கொண்டார்கள். மற்றவர்களோ மனம் கடினப்பட்டவர்கள் ஆனார்கள். இது வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “இறைவன் அவர்களுக்கு ஒரு மந்தமுள்ள ஆவியைக் கொடுத்தார். இதனால் இன்றுவரை அவர்கள் தங்களுடைய கண்களினால் காணமுடியாதவர்களாயும், காதுகளால் கேட்க முடியாதவர்களாயும் இருக்கிறார்கள்.” தாவீது இவர்களைக்குறித்து: “அவர்களுடைய விருந்துகள், அவர்களுக்குக் கண்ணியாகவும், பொறியாகவும், தடுமாறும் கல்லாகவும், தங்களுக்குரிய தண்டனையாகவும் இருக்கட்டும். அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும், அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும்” என்கிறான். நான் மீண்டும் கேட்கின்றேன்: இஸ்ரயேலர் விழுந்துபோவதற்காக இடறினார்களா? இல்லவே இல்லை, இஸ்ரயேலர்களுடைய மீறுதலினாலேயே, யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு வந்தது. இதைக்கண்டு இஸ்ரயேலர்கள் பொறாமைப்பட்டு இரட்சிப்பைத் தேடவேண்டுமென்பதே, இறைவனுடைய நோக்கமாயிருந்தது. இஸ்ரயேலர்களுடைய மீறுதல் உலகத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொடுத்ததே; அவர்களுடைய இழப்பு யூதரல்லாத மக்களுக்கு ஆசீர்வாதமாயிற்று என்றால், அவர்கள் எல்லோரும் மீட்படைந்தால் இன்னும் எவ்வளவு பெரிதான ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.