ரோமர் 11:19-36
ரோமர் 11:19-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“நாங்கள் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்த கிளைகள் முறித்துப்போடப்பட்டன” என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான், ஆனால் அவர்கள் விசுவாசிக்காததினால்தான் முறித்துப்போடப்பட்டார்கள். நீங்களோ விசுவாசிக்கிறதினால் மட்டுமே இன்னும் நிலைத்து நிற்கிறீர்கள். எனவே நீங்கள் பெருமைகொள்ள வேண்டாம், பயபக்தியாயிருங்கள். ஏனெனில் இறைவன் இயற்கையாய் வளர்ந்த நல்ல ஒலிவமரத்தின் இயல்பான கிளைகளையே முறித்துப்போட்டாரே. அப்படியானால் ஒட்டப்பட்ட கிளையான உங்களை அவர் எப்படித் தப்பவிடுவார். ஆகவே இறைவனுடைய தயவையும் கண்டிப்பையும் குறித்து யோசித்துப் பாருங்கள்: கீழ்ப்படியாமையினால் விழுந்துபோனவர்களோடு அவர் கண்டிப்பாய் இருக்கிறார்; உங்களுக்கோ தயவு காட்டுகிறார். நீங்கள் தொடர்ந்து அவருடைய தயவைப் பெறும் விதத்தில் நடக்காவிட்டால், அவர் உங்களையும் வெட்டிப்போடுவார். இஸ்ரயேலர்களும் தங்களுடைய அவிசுவாசத்தில் தொடர்ந்து நிற்காமல், அதை விட்டுவிட்டால், அவர்கள் மீண்டும் கிளைகளாக ஒட்டப்படுவார்கள். அவர்களைத் திரும்பவும் ஒட்டிவைக்க இறைவன் வல்லவராக இருக்கிறார். அதற்கும் மேலாக இயற்கையாய் வளர்ந்த ஒரு காட்டு ஒலிவமரத்திலிருந்து நீங்கள் வெட்டியெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட நல்ல ஒலிவ மரத்தில் இயற்கைக்கு மாறாக ஒட்டப்பட்டீர்கள். அப்படியானால் இயற்கையாகவே கிளைகளாய் இருக்கும் இஸ்ரயேலர்கள், தங்களது சொந்த ஒலிவ மரத்தோடு எவ்வளவு சுலபமாய் ஒட்டிவைக்கப்படுவார்கள். பிரியமானவர்களே, நீங்கள் உங்களை அறிவாளிகள் என்று தற்பெருமை கொள்ளாதபடி, இந்த இரகசியத்தின் உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இஸ்ரயேலர்கள் இப்பொழுது பெரும்பாலும் கடினத்தன்மை உடையவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் யூதரல்லாத மக்களைச் சேர்ந்த முழு எண்ணிக்கையினரும் இரட்சிப்புக்கு உள்ளாகும் வரைக்குமே அப்படி கடினப்பட்டிருப்பார்கள். இவ்விதமாய் எழுதியிருக்கிறபடி எல்லா இஸ்ரயேலரும் இரட்சிக்கப்படுவார்கள்: “மீட்கிறவர் சீயோனிலிருந்து வருவார்; அவர் யாக்கோபின் சந்ததிகளிலிருந்து, இறைவனை மறுதலிக்கும் தன்மையை நீக்கிப்போடுவார். நான் அவர்களுடைய பாவங்களை நீக்கிப்போடும்போது, இதுவே நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை.” நற்செய்தியைப் பொறுத்தவரையில், இஸ்ரயேலர்கள் இப்பொழுது உங்கள் நிமித்தமாக பகைவராய் இருக்கிறார்கள். ஆனால் தெரிந்துகொள்ளுதலைப் பொறுத்தவரையில், அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி இறைவன் இன்னும் அவர்களில் அன்பாயிருக்கிறார். இறைவன் கொடுக்கும் வரங்களையும் அழைப்பையும் அவர் ஒருபோதும் எடுத்துவிடமாட்டார். முன்பு நீங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, இஸ்ரயேலரின் கீழ்ப்படியாமையின் பலனாய் இரக்கம் பெற்றிருக்கிறீர்கள். அதுபோலவே இஸ்ரயேலரும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். இறைவன் உங்களுக்குக் காண்பித்த இரக்கத்தின் பலனாய், அவர்களும் இரக்கம் பெறுவார்கள். ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார். ஆ, இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் நிறைவு எவ்வளவு ஆழமானது! அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறியமுடியாதவை, அவருடைய வழிமுறைகளோ விளங்கிக்கொள்ள முடியாதவை. “கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?” “இறைவன் தனக்குப் பலனைக் கொடுக்கும்படி யார் முன்னதாகவே இறைவனுக்குக் கொடுத்திருக்கிறான்?” எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
ரோமர் 11:19-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது என்று சொல்லுகிறாயே. நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாக இல்லாமல் பயந்திரு. சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாமல் இருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாக இரு. எனவே, தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடம் கண்டிப்பையும், உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருந்தால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைக்காவிட்டால் நீயும் வெட்டப்பட்டுப் போவாய். அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மீண்டும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராக இருக்கிறாரே. சுபாவத்தின்படி காட்டு ஒலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு எதிராக நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்; அது என்னவென்றால், யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும். இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். “மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்; நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை” என்றும் எழுதியிருக்கிறது. நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. எனவே, நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல, அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள். எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்! “கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்? தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ரோமர் 11:19-36 பரிசுத்த பைபிள் (TAERV)
“நான் ஒட்டவைக்கப்படுவதற்காகவே அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.” அது உண்மை. ஆனால் விசுவாசம் இல்லாததால்தான் அக்கிளைகள் முறிக்கப்பட்டன. உனது விசுவாசத்தினால்தான் நீ அந்த மரத்தின் ஒரு பகுதியானாய். இதற்காகப் பெருமைப்படாதே, பயப்படு. உண்மையான கிளைகளை மரத்தோடு நிலைத்திருக்க தேவன் அனுமதிக்கவில்லை என்றால் நீ விசுவாசம் இழந்துவிட்டால் உன்னையும் இணைந்து இருக்க அனுமதிக்கமாட்டார். தேவன் இரக்கமுடையவர் எனினும் பயங்கரமானவரும் கூட என்பதை அறிந்துகொள். தன்னைப் பின்பற்றுவதை நிறுத்துகின்ற மக்களை அவர் தண்டிக்கிறார். நீங்கள் அவரைப் பின்பற்றினால் அவர் உங்களிடம் அன்போடு இருப்பார். நீங்கள் அவரைப் பின்பற்றுவதை நிறுத்தினால் மரத்திலிருந்து வெட்டியெறியப்படுவீர்கள். மீண்டும் யூதர்கள் தேவன் மீது விசுவாசம் வைக்கத் தொடங்கினால் தேவன் மீண்டும் அவர்களை ஏற்றுக்கொள்வார். அவர்கள் துவக்கத்தில் எப்படியிருந்தார்களோ அப்படி அவர்களை தேவன் உருவாக்குவார். காட்டுமரக் கிளைகள் ஒரு ஒலிவ மரத்தின் கிளையாக ஒட்டி வளர்வது இயற்கையன்று, யூதரல்லாதவர்களாகிய நீங்கள் காட்டு ஒலிவ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகளைப் போன்றவர்கள். இப்பொழுது நல்ல ஒலிவ மரத்தோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள். யூதர்களோ நல்ல ஒலிவமரத்தில் வளர்ந்த கிளைகளைப் போன்றவர்கள். எனவே, நிச்சயமாக அவர்கள் தங்கள் சொந்த மரத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்வார்கள். சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த இரகசிய உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த உண்மையானது உங்களுக்குப் புரியாததைப் புரிந்துகொள்ள உதவும். “இஸ்ரவேலின் ஒரு பகுதியினருக்குக் கடின இதயம் உண்டாயிருக்கும். குறிப்பிட்ட யூதரல்லாதவர்கள் தேவனிடம் சேர்ந்த பின்பு இது மாறும் என்பதுதான் அந்த உண்மை. இவ்வாறு இஸ்ரவேலர்கள் அனைவரும் காப்பாற்றப்படுவர். “மீட்பர் சீயோனிலிருந்து வருவார். யாக்கோபின் குடும்பத்திலிருந்து தீமைகளை அகற்றுவார். நான் அவர்களது பாவங்களை விலக்கும் போது நான் இந்த உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்” என்று எழுதப்பட்டிருக்கிறது. தேவனுடைய நற்செய்தியை யூதர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதனால் அவர்கள் தேவனுடைய எதிரிகள் ஆயினர். இது யூதரல்லாதவர்களுக்கு உதவியாய் ஆயிற்று. ஆனால் யூதர்கள் அனைவரும் இப்பொழுது தேவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாய் இருப்பதால் அவர் அவர்களைப் பெரிதும் நேசிக்கிறார். அவர்களின் தந்தைகளுக்குக் கொடுத்த வாக்கின்படி தேவன் அவர்களை நேசிக்கிறார். தேவன் தனது கிருபையையும் அழைப்பையும் எப்பொழுதும் மாற்றிக்கொள்ளமாட்டார். ஒருமுறை நீங்கள் தேவனுக்குப் பணிய மறுத்தீர்கள். ஆனால் இப்பொழுது இரக்கத்தைப் பெற்றீர்கள். யூதர்கள் பணிய மறுத்ததே இதற்குக் காரணம். தேவன் உங்களிடம் இரக்கம் காட்டுவதால் யூதர்கள் இப்பொழுது தேவனுக்குப் பணிய மறுக்கிறார்கள். எனினும் எதிர்காலத்தில் உங்களைப் போல் அவர்களும் இரக்கத்தைப் பெறுவார்கள். அனைத்து மக்களும் தேவனுக்குப் பணிய மறுத்திருக்கின்றனர். தேவன் பணியாதவர்களை ஓரிடத்தில் சேர்த்தார். எனவே, அவர் அனைவர் மீதும் இரக்கம் கொள்ள முடியும். ஆமாம். தேவனுடைய செல்வம் மிகவும் பெருமை மிக்கது. அவரது அறிவுக்கும் ஞானத்துக்கும் எல்லை இல்லை. தேவன் தீர்மானிப்பதை ஒருவராலும் விளக்க முடியாது. தேவனுடைய வழிகளை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. “கர்த்தரின் மனதை அறிந்தவன் யார்? தேவனுக்கு அறிவுரைகளைத் தரத் தகுந்தவர் யார்?” “தேவனுக்கு யாரேனும் எதையேனும் கொடுத்ததுண்டா? மற்றவர்க்கு எதையும் தேவன் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆமாம். தேவனே அனைத்தையும் உருவாக்கினார். தேவனாலும், தேவனுக்காகவும் தொடர்ச்சியாய் எல்லாம் இயங்குகின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ரோமர் 11:19-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராயிருக்கிறாரே. சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும்; நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது. சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக் குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள். தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல, அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.