“நாங்கள் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்த கிளைகள் முறித்துப்போடப்பட்டன” என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான், ஆனால் அவர்கள் விசுவாசிக்காததினால்தான் முறித்துப்போடப்பட்டார்கள். நீங்களோ விசுவாசிக்கிறதினால் மட்டுமே இன்னும் நிலைத்து நிற்கிறீர்கள். எனவே நீங்கள் பெருமைகொள்ள வேண்டாம், பயபக்தியாயிருங்கள். ஏனெனில் இறைவன் இயற்கையாய் வளர்ந்த நல்ல ஒலிவமரத்தின் இயல்பான கிளைகளையே முறித்துப்போட்டாரே. அப்படியானால் ஒட்டப்பட்ட கிளையான உங்களை அவர் எப்படித் தப்பவிடுவார். ஆகவே இறைவனுடைய தயவையும் கண்டிப்பையும் குறித்து யோசித்துப் பாருங்கள்: கீழ்ப்படியாமையினால் விழுந்துபோனவர்களோடு அவர் கண்டிப்பாய் இருக்கிறார்; உங்களுக்கோ தயவு காட்டுகிறார். நீங்கள் தொடர்ந்து அவருடைய தயவைப் பெறும் விதத்தில் நடக்காவிட்டால், அவர் உங்களையும் வெட்டிப்போடுவார். இஸ்ரயேலர்களும் தங்களுடைய அவிசுவாசத்தில் தொடர்ந்து நிற்காமல், அதை விட்டுவிட்டால், அவர்கள் மீண்டும் கிளைகளாக ஒட்டப்படுவார்கள். அவர்களைத் திரும்பவும் ஒட்டிவைக்க இறைவன் வல்லவராக இருக்கிறார். அதற்கும் மேலாக இயற்கையாய் வளர்ந்த ஒரு காட்டு ஒலிவமரத்திலிருந்து நீங்கள் வெட்டியெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட நல்ல ஒலிவ மரத்தில் இயற்கைக்கு மாறாக ஒட்டப்பட்டீர்கள். அப்படியானால் இயற்கையாகவே கிளைகளாய் இருக்கும் இஸ்ரயேலர்கள், தங்களது சொந்த ஒலிவ மரத்தோடு எவ்வளவு சுலபமாய் ஒட்டிவைக்கப்படுவார்கள். பிரியமானவர்களே, நீங்கள் உங்களை அறிவாளிகள் என்று தற்பெருமை கொள்ளாதபடி, இந்த இரகசியத்தின் உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இஸ்ரயேலர்கள் இப்பொழுது பெரும்பாலும் கடினத்தன்மை உடையவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் யூதரல்லாத மக்களைச் சேர்ந்த முழு எண்ணிக்கையினரும் இரட்சிப்புக்கு உள்ளாகும் வரைக்குமே அப்படி கடினப்பட்டிருப்பார்கள். இவ்விதமாய் எழுதியிருக்கிறபடி எல்லா இஸ்ரயேலரும் இரட்சிக்கப்படுவார்கள்: “மீட்கிறவர் சீயோனிலிருந்து வருவார்; அவர் யாக்கோபின் சந்ததிகளிலிருந்து, இறைவனை மறுதலிக்கும் தன்மையை நீக்கிப்போடுவார். நான் அவர்களுடைய பாவங்களை நீக்கிப்போடும்போது, இதுவே நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை.” நற்செய்தியைப் பொறுத்தவரையில், இஸ்ரயேலர்கள் இப்பொழுது உங்கள் நிமித்தமாக பகைவராய் இருக்கிறார்கள். ஆனால் தெரிந்துகொள்ளுதலைப் பொறுத்தவரையில், அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி இறைவன் இன்னும் அவர்களில் அன்பாயிருக்கிறார். இறைவன் கொடுக்கும் வரங்களையும் அழைப்பையும் அவர் ஒருபோதும் எடுத்துவிடமாட்டார். முன்பு நீங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, இஸ்ரயேலரின் கீழ்ப்படியாமையின் பலனாய் இரக்கம் பெற்றிருக்கிறீர்கள். அதுபோலவே இஸ்ரயேலரும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். இறைவன் உங்களுக்குக் காண்பித்த இரக்கத்தின் பலனாய், அவர்களும் இரக்கம் பெறுவார்கள். ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார். ஆ, இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் நிறைவு எவ்வளவு ஆழமானது! அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறியமுடியாதவை, அவருடைய வழிமுறைகளோ விளங்கிக்கொள்ள முடியாதவை. “கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?” “இறைவன் தனக்குப் பலனைக் கொடுக்கும்படி யார் முன்னதாகவே இறைவனுக்குக் கொடுத்திருக்கிறான்?” எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் ரோமர் 11
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ரோமர் 11:19-36
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்