ரோமர் 11:1-18

ரோமர் 11:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்படியானால் இறைவன் தன்னுடைய மக்களைப் புறக்கணித்துவிட்டாரா என்று நான் கேட்கிறேன். இல்லவே இல்லை! நானும் இஸ்ரயேலைச் சேர்ந்தவனே, நான் ஆபிரகாமின் சந்ததியில் பென்யமீன் கோத்திரத்தில் பிறந்தவன். தாம் முன்னறிந்த தம்முடைய மக்களை இறைவன் புறக்கணிக்கவில்லை. எலியாவைப்பற்றி சொல்கின்ற இடத்திலே, வேதவசனம் என்ன சொல்கிறது என்றும், அவன் எவ்விதம் இஸ்ரயேலுக்கு விரோதமாக இறைவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினான் என்றும் அறியாதிருக்கிறீர்களா? அவன், “கர்த்தாவே அவர்கள் உம்முடைய இறைவாக்கினரைக் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரமே மீதியாயிருக்கிறேன். அவர்கள் என்னையும் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்” என்றான். அதற்கு இறைவன், அவனுக்குக் கூறிய பதில் என்ன? “இல்லை, நீ மட்டுமல்ல; பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத, ஏழாயிரம் பேர்களை அவர்களுக்குள் நான் எனக்கென்று வைத்திருக்கிறேன்” என்றார். அப்படியே தற்காலத்திலும் கிருபையினால் தெரிந்துகொள்ளப்பட்ட மீதியானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிருபையினால் தெரிந்துகொள்ளப்பட்டார்கள் என்றால், அது இனியும் நற்செயல்களினால் இராதே. அவர்களின் நற்செயல்களினால் தெரிந்துகொள்கிறார் என்றால், இறைவனின் கிருபை உண்மையான கிருபையாயிராதே. ஆகையால் என்ன? இஸ்ரயேலர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தேடியதை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களில் இறைவன் தெரிந்துகொண்ட சிலரே அதைப் பெற்றுக்கொண்டார்கள். மற்றவர்களோ மனம் கடினப்பட்டவர்கள் ஆனார்கள். இது வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “இறைவன் அவர்களுக்கு ஒரு மந்தமுள்ள ஆவியைக் கொடுத்தார். இதனால் இன்றுவரை அவர்கள் தங்களுடைய கண்களினால் காணமுடியாதவர்களாயும், காதுகளால் கேட்க முடியாதவர்களாயும் இருக்கிறார்கள்.” தாவீது இவர்களைக்குறித்து: “அவர்களுடைய விருந்துகள், அவர்களுக்குக் கண்ணியாகவும், பொறியாகவும், தடுமாறும் கல்லாகவும், தங்களுக்குரிய தண்டனையாகவும் இருக்கட்டும். அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும், அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும்” என்கிறான். நான் மீண்டும் கேட்கின்றேன்: இஸ்ரயேலர் விழுந்துபோவதற்காக இடறினார்களா? இல்லவே இல்லை, இஸ்ரயேலர்களுடைய மீறுதலினாலேயே, யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு வந்தது. இதைக்கண்டு இஸ்ரயேலர்கள் பொறாமைப்பட்டு இரட்சிப்பைத் தேடவேண்டுமென்பதே, இறைவனுடைய நோக்கமாயிருந்தது. இஸ்ரயேலர்களுடைய மீறுதல் உலகத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொடுத்ததே; அவர்களுடைய இழப்பு யூதரல்லாத மக்களுக்கு ஆசீர்வாதமாயிற்று என்றால், அவர்கள் எல்லோரும் மீட்படைந்தால் இன்னும் எவ்வளவு பெரிதான ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். இப்பொழுது யூதரல்லாதவர்களாகிய உங்களோடு நான் பேசுகிறேன். நான் உங்களுக்கு அப்போஸ்தலனாய் இருப்பதனால், என்னுடைய ஊழியத்தைக்குறித்துப் பெருமிதம் அடைகிறேன். யூதர்களாகிய என் மக்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரையாவது இரட்சிக்க விரும்புகிறேன். ஏனெனில் இஸ்ரயேலர்களைப் புறக்கணிப்பட்டபோதே உலகம் இறைவனுடன் ஒப்புரவாகுமானால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்போது எப்படி இருக்கும்? அது மரித்தோருக்கு உயிர் கிடைப்பதுபோல் இருக்குமல்லவா? பிசையப்பட்ட மாவிலிருந்து முதற்பலனாகக் கொடுக்கப்படும் பகுதி பரிசுத்தமாய் இருக்குமாயின், மீதியான பிசைந்தமாவு முழுவதுமே பரிசுத்தமானதே; மரத்தின் வேர் பரிசுத்தமானதாய் இருந்தால், அதன் கிளைகளும் பரிசுத்தமானவைகளே. நல்ல ஒலிவமரத்திலிருந்து சில கிளைகள் முறிக்கப்பட்டு, அவ்விடங்களில் காட்டு ஒலிவமரத்தின் கிளைகளாகிய நீங்கள் ஒட்டப்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது நல்ல ஒலிவமரத்தின் வேரிலிருந்து வரும் சாரத்திலே நீங்களும் பங்குபெறுகிறீர்கள். எனவே முறிக்கப்பட்ட அந்தக் கிளைகளைப் பார்த்து இகழ்ந்து, நீங்கள் பெருமைகொள்ள வேண்டாம். அப்படி நீங்கள் பெருமைப்பட்டால், நீங்கள் வேரைத் தாங்குகிறவர்கள் அல்ல, வேரே உங்களைத் தாங்குகிறது என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.

ரோமர் 11:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன். தேவன், தாம் முன்குறித்துக்கொண்ட தம்முடைய மக்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை தெரியாமல் இருக்கிறீர்களா? அவன் தேவனைப் பார்த்து: கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது, அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே. அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது. அது கிருபையினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிருக்காது; அப்படியில்லை என்றால், கிருபையானது கிருபை இல்லையே. அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாக இருக்காது; அப்படியில்லை என்றால் செய்கையானது செய்கை இல்லையே. அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றைய நாள்வரை கடினப்பட்டிருக்கிறார்கள். தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது. அன்றியும், “அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்; பார்க்காதபடிக்கு அவர்களுடைய கண்கள் இருள் அடையட்டும்; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும்” என்று தாவீதும் சொல்லியிருக்கிறான். இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அவர்களுடைய தவறு உலகத்திற்கு செல்வமும், அவர்களுடைய குறைவு யூதரல்லாத மக்களுக்கு செல்வமாகவும் இருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும். யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன்; யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே, என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று, என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாக இருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் எப்படி இருக்கும்? மரித்தோருக்கு ஜீவன் உண்டானதுபோல இருக்கும் அல்லவோ? மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும். சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால், நீ அந்தக் கிளைகளுக்கு எதிராகப் பெருமைப்படாதே; பெருமைப்பட்டால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறது என்று நினைத்துக்கொள்.

ரோமர் 11:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

“தேவன் தன் மக்களைத் தூரமாகத் தள்ளி விட்டாரா?” என்று நான் கேட்கிறேன். இல்லை. நானும் ஒரு யூதன் தான். நான் ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து வந்துள்ளேன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இஸ்ரவேல் மக்கள் பிறப்பதற்கு முன்னரே அவர்களைத் தம் மக்களாக தேவன் தேர்ந்தெடுத்து விட்டார். தேவன் அவர்களைத் தூரத் தள்ளிவிடவில்லை. எலியாவைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்கள். இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக எலியா தேவனிடம் வேண்டினார். “கர்த்தரே! இந்த மக்கள் உமது தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். உமது பலிபீடங்களை அழித்தனர். நான் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன். இப்பொழுது அவர்கள் என்னையும் கொன்று போட முயற்சி செய்கின்றனர்” என்றார் எலியா. இதற்கு தேவன் என்ன பதில் சொன்னார் தெரியுமா? “பாகால் என்னும் தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு வணங்காத 7,000 பேரை நான் எனக்காக மீதியாய் வைத்திருக்கிறேன்” என்றார். இப்பொழுதும் அதேபோலத்தான். தேவன் சிலரைக் கருணையால் தேர்ந்தெடுத்துள்ளார். தேவன் தன் மக்களைக் கருணையால் தேர்ந்தெடுத்துள்ளதால் அது அவர்களது செய்கைகளால் அல்ல என்றாகிறது. தேவன் மக்களை அவர் தம் செய்கைகளால் தேர்ந்தெடுத்திருந்தால் அது கருணையால் அல்ல என்றும், செயல்களினிமித்தம் காட்டப்படும் கருணை உண்மையான பரிசாகாது என்றும் தெரிகிறது. அப்படியானால் நடந்தது இதுதான். இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கேற்ற நீதிமான்களாக முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் தோல்வியுற்றனர். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதிமான்களாகச் செயல்புரிகிறார்கள். மற்றவர்களோ முரடர்களாகவும், தேவனுடைய வார்த்தைகளைக் கவனிக்க மறுப்பவர்களாகவும் உள்ளனர். “மக்களின் உணர்ச்சியை தேவன் மறக்கச் செய்தார்” என்றும் அதனால், “தேவன் அவர்களின் கண்களை மூடினார்.” “அதனால் அவர்களால் உண்மையைப் பார்க்க முடியவில்லை. தேவன் அவர்களின் காதுகளை மூடினார். அதனால் அவர்களால் உண்மையாகக் கேட்க முடியவில்லை. இது இன்றும் தொடர்கிறது.” என்றும் எழுதப்பட்டிருக்கிறது. “அவர்களின் சொந்த விருந்துகளே அவர்கள் வலையாகவும், கண்ணியாகவும் ஆகட்டும். அவர்கள் விழுந்து தண்டிக்கப்படட்டும். உண்மையைக் காண இயலாதபடி அவர்களின் கண்கள் மூடிப் போகட்டும். அவர்கள் என்றென்றைக்கும் துன்பத்தில் இருக்கட்டும்” என்று தாவீது கூறியிருக்கிறார். “யூதர்கள் அழிந்துபோகிற அளவுக்கா தடுக்கிவிழுந்தார்கள்?” என்று கேட்கிறேன். இல்லை. அவர்களின் தவறுகள் மற்ற யூதர் அல்லாதவர்களுக்கு இரட்சிப்பாயிற்று. இதனால் யூதர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. யூதர்களின் தவறு உலகத்துக்கு அதிக ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது. அவர்களின் குறைவு யூதரல்லாதவர்களுக்கு அதிக ஆசீர்வாதமாய் ஆயிற்று. யூதர்கள் தேவனுக்கேற்றவர்களாக ஆகும்வரை இன்னும் எவ்வளவு ஆசீர்வாதங்கள் வரும் எனக் கற்பனை செய்யுங்கள். நான் இப்போது யூதரல்லாத மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நான் யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன். என்னால் முடிந்தவரை என் வேலைகளை முடிக்க வேண்டும். நான் என் நாட்டு மக்களை வைராக்கியம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். இந்த வழியில் அவர்களில் சிலரையாவது இரட்சிப்பிற்குள் கொண்டுவர உதவமுடியும். தேவன் யூதர்களிடமிருந்து விலகிக்கொண்டார். உலகிலுள்ள மற்றவர்களுக்கு அவர் நெருக்கமானார். அவர் யூதர்களை ஏற்றுக்கொள்ளும்போது, அவரது மக்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவது உறுதியாக இருக்கும். ஒரு அப்பத்தின் முதல் துண்டு தேவனுக்குப் படைக்கப்படுமானால் மற்றக் முழுதும் புனிதமாகிவிடும். ஒரு மரத்தின் வேர்கள் புனிதமாய் இருந்தால் மற்ற கிளைகளும்கூட புனிதமாகிவிடும். ஒலிவ மரத்தின் சில கிளைகளை ஒடித்தெறிந்து விட்டு அந்த இடத்தில் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகளை ஒட்ட வைத்தால் எப்படி இருக்ககுமோ அப்படி இருக்கிறீர்கள். யூதரல்லாத நீங்கள் காட்டு ஒலிவ மரத்தைப் போன்றவர்கள். யூதரல்லாத நீங்கள் யூதர்களோடு இணைத்து வைக்கப்பட்டு, நீங்களும் அதே வேர்களைப் பங்கிட்டு, மரச் சாற்றிலிருந்து குடிக்கிறீர்கள். யூதர்களின் பலனையும் பெறுகின்றீர்கள். நீங்கள் அந்தக் கிளைகளைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். அதற்கான எந்தக் காரணமும் உங்களுக்கு இல்லை. நீங்கள் வேர்களுக்கு உயிர்கொடுக்கவில்லை. வேர்களே உங்களுக்கு உயிரைக் கொடுக்கின்றன.

ரோமர் 11:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன். தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி: கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது, அவனுக்கு உண்டான தேவ உத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாகவைத்தேன் என்பதே. அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது. அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால் கிரியையானது கிரியையல்லவே. அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள். கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது; காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான். இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும். புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று, என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவோ? மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.