ரோமர் 11:1-18

ரோமர் 11:1-18 IRVTAM

இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன். தேவன், தாம் முன்குறித்துக்கொண்ட தம்முடைய மக்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை தெரியாமல் இருக்கிறீர்களா? அவன் தேவனைப் பார்த்து: கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது, அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே. அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது. அது கிருபையினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிருக்காது; அப்படியில்லை என்றால், கிருபையானது கிருபை இல்லையே. அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாக இருக்காது; அப்படியில்லை என்றால் செய்கையானது செய்கை இல்லையே. அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றைய நாள்வரை கடினப்பட்டிருக்கிறார்கள். தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது. அன்றியும், “அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்; பார்க்காதபடிக்கு அவர்களுடைய கண்கள் இருள் அடையட்டும்; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும்” என்று தாவீதும் சொல்லியிருக்கிறான். இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அவர்களுடைய தவறு உலகத்திற்கு செல்வமும், அவர்களுடைய குறைவு யூதரல்லாத மக்களுக்கு செல்வமாகவும் இருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும். யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன்; யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே, என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று, என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாக இருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் எப்படி இருக்கும்? மரித்தோருக்கு ஜீவன் உண்டானதுபோல இருக்கும் அல்லவோ? மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும். சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால், நீ அந்தக் கிளைகளுக்கு எதிராகப் பெருமைப்படாதே; பெருமைப்பட்டால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறது என்று நினைத்துக்கொள்.

ரோமர் 11:1-18 க்கான வீடியோ