ரோமர் 1:8-17
ரோமர் 1:8-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார். நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே, எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்கு தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்ததுபோல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
ரோமர் 1:8-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
முதலாவதாக, உங்கள் விசுவாசம் உலகம் எங்கும் அறியப்படுகிறதினாலே, உங்கள் எல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்துமூலமாய், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எல்லா வேளைகளிலும், என்னுடைய மன்றாட்டுகளில் உங்களை எப்படித் தொடர்ந்து நினைவுகூருகிறேன் என்பதற்கு இறைவனே சாட்சியாய் இருக்கிறார். நான் இறைவனுடைய மகனைப்பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கிறதினாலே, என் ஆவியில் இறைவனுக்கு ஊழியம் செய்கிறேன். இறைவனுடைய சித்தத்தின்படி நான் உங்களிடத்தில் வருவதற்கான வழி இப்பொழுதாவது திறக்கப்பட வேண்டுமென்று மன்றாடுகிறேன். உங்களைப் பெலப்படுத்துவதற்காக, நான் ஆவிக்குரிய வரங்களில் சிலவற்றை உங்களுக்குக் கொடுக்கும்படி, உங்களைக் காண ஆவலாயிருக்கிறேன். இதனால் உங்களுடைய விசுவாசத்தினாலே நானும், என்னுடைய விசுவாசத்தினாலே நீங்களுமாக நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ளலாம். பிரியமானவர்களே, யூதரல்லாத மக்களின் மத்தியில் நான் அறுவடை செய்ததுபோலவே, உங்கள் மத்தியிலும் அறுவடை செய்யும்படி, நான் உங்களிடத்தில் வருவதற்குப் பலமுறை திட்டமிட்டேன்; ஆனாலும் இதுவரைக்கும் வரமுடியாதபடி தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை. நான் கிரேக்கருக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். அதனாலேயே ரோம் நகரில் இருக்கிற உங்களுக்குங்கூட நற்செய்தியைப் பிரசங்கிக்க இவ்வளவு ஆவலாயிருக்கிறேன். ஏனெனில் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படவில்லை. அதுவே விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இறைவனுடைய இரட்சிப்பைக் கொடுக்கின்ற வல்லமையாய் இருக்கிறது. அந்த நற்செய்தி முதலாவது யூதர்களுக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்த நற்செய்தியில்தான், இறைவனிடமிருந்து வரும் நீதி வெளிப்படுத்தப்படுகிறது. “நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறபடி, நீதி தொடக்கத்திலிருந்து முடிவுவரை அந்த விசுவாசத்தினாலே வருகிறது.
ரோமர் 1:8-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உங்களுடைய விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தேவகுமாரனுடைய நற்செய்தியினாலே என் ஆவியோடு நான் வணங்குகிற தேவன் எனக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுப்பதற்காகவும், உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் உள்ள விசுவாசத்தினால் உங்களோடு நானும் ஆறுதல் அடைவதற்கும், உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறதினாலே, நான் எப்படியாவது உங்களிடம் வருகிறதற்கு தேவனுடைய விருப்பத்தினாலே எனக்கு நல்ல பயணம் சீக்கிரத்தில் அமையவேண்டும் என்று ஜெபித்துக்கொள்கிறேன். சகோதரர்களே, யூதரல்லாதவர்களாகிய மற்றவர்களுக்குள்ளே நான் அநேகரை இரட்சிப்பிற்குள் வழிநடத்தினதுபோல உங்களுக்குள்ளும் சிலரை இரட்சிப்பிற்குள் வழிநடத்துவதற்காக, உங்களிடம் வருவதற்காக பலமுறை நான் யோசனையாக இருந்தேன், ஆனாலும் இதுவரைக்கும் எனக்குத் தடை உண்டானது என்று நீங்கள் அறியாமல் இருக்க எனக்கு மனமில்லை. கிரேக்கர்களுக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் நான் கடனாளியாக இருக்கிறேன். எனவே, ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கும் என்னால் முடிந்தவரை நற்செய்தியைப் பிரசங்கம்பண்ண விரும்புகிறேன். கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது. “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த நற்செய்தியினால் வெளிப்படுத்தப்படுகிறது.
ரோமர் 1:8-17 பரிசுத்த பைபிள் (TAERV)
முதலில் நான் உங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் உலகின் பல பகுதிகளிலுள்ள மக்களும் உங்களது பெரிய விசுவாசத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் உங்களை நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இது உண்மை என தேவனுக்குத் தெரியும். மக்களிடம் தேவனுடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதன் மூலம் தேவன் ஒருவருக்கே நான் எனது ஆவியின் வழியே சேவை செய்கிறேன். உங்களிடம் வர அனுமதிக்குமாறு தேவனிடம் பிரார்த்திக்கிறேன். தேவன் விரும்பினால் இது நிகழும். நான் உங்களைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குத் தர நான் விரும்புகிறேன். நம்மிடம் உள்ள விசுவாசத்தின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது விசுவாசம் உங்களுக்கும், உங்கள் விசுவாசம் எனக்கும் உதவியாக இருக்கும். சகோதர, சகோதரிகளே, உங்களிடம் வருவதற்காக நான் பலமுறை திட்டமிட்டேன். ஆனால் இப்போதுவரை நான் வரத் தடைசெய்யப்பட்டேன். நீங்கள் ஆத்தும வளர்ச்சியைப் பெறுவதற்காக நான் அங்கே வர விரும்புகிறேன். யூதர் அல்லாத மக்களுக்கு நான் உதவியது போலவே நான் உங்களுக்கும் உதவ விரும்புகிறேன். கிரேக்கர்களுக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், அறிவுள்ளவர்களுக்கும், அறிவற்றோருக்கும் நான் சேவை செய்யக் கடனாளியாயிருக்கிறேன். அதனால் தான் நான் ரோமிலுள்ள உங்களுக்கும் நற்செய்தியைப் போதிக்க விரும்புகிறேன். நான் நற்செய்தியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். விசுவாசமுள்ள அனைவரையும் இரட்சிக்கவும், முதலில் யூதர்களையும் பின்னர் யூதர் அல்லாதவர்களையும் இரட்சிக்கவும் தேவன் பயன்படுத்திய வல்லமை இந்த நற்செய்தியே ஆகும். தேவன் எவ்வாறு நீதிமான்களை உருவாக்குகிறார் என்று நற்செய்தி காட்டுகிறது. மக்களை நீதிமான்களாக தேவன் உருவாக்கும் வழிமுறையானது விசுவாசத்திலேயே தொடங்கி முடிகிறது. எழுதியிருக்கிறபடி “தேவன் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான் என்றென்றும் வாழ்ந்திருப்பான்.”