ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 1:8-17

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 1:8-17 TAERV

முதலில் நான் உங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் உலகின் பல பகுதிகளிலுள்ள மக்களும் உங்களது பெரிய விசுவாசத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் உங்களை நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இது உண்மை என தேவனுக்குத் தெரியும். மக்களிடம் தேவனுடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதன் மூலம் தேவன் ஒருவருக்கே நான் எனது ஆவியின் வழியே சேவை செய்கிறேன். உங்களிடம் வர அனுமதிக்குமாறு தேவனிடம் பிரார்த்திக்கிறேன். தேவன் விரும்பினால் இது நிகழும். நான் உங்களைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குத் தர நான் விரும்புகிறேன். நம்மிடம் உள்ள விசுவாசத்தின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது விசுவாசம் உங்களுக்கும், உங்கள் விசுவாசம் எனக்கும் உதவியாக இருக்கும். சகோதர, சகோதரிகளே, உங்களிடம் வருவதற்காக நான் பலமுறை திட்டமிட்டேன். ஆனால் இப்போதுவரை நான் வரத் தடைசெய்யப்பட்டேன். நீங்கள் ஆத்தும வளர்ச்சியைப் பெறுவதற்காக நான் அங்கே வர விரும்புகிறேன். யூதர் அல்லாத மக்களுக்கு நான் உதவியது போலவே நான் உங்களுக்கும் உதவ விரும்புகிறேன். கிரேக்கர்களுக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், அறிவுள்ளவர்களுக்கும், அறிவற்றோருக்கும் நான் சேவை செய்யக் கடனாளியாயிருக்கிறேன். அதனால் தான் நான் ரோமிலுள்ள உங்களுக்கும் நற்செய்தியைப் போதிக்க விரும்புகிறேன். நான் நற்செய்தியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். விசுவாசமுள்ள அனைவரையும் இரட்சிக்கவும், முதலில் யூதர்களையும் பின்னர் யூதர் அல்லாதவர்களையும் இரட்சிக்கவும் தேவன் பயன்படுத்திய வல்லமை இந்த நற்செய்தியே ஆகும். தேவன் எவ்வாறு நீதிமான்களை உருவாக்குகிறார் என்று நற்செய்தி காட்டுகிறது. மக்களை நீதிமான்களாக தேவன் உருவாக்கும் வழிமுறையானது விசுவாசத்திலேயே தொடங்கி முடிகிறது. எழுதியிருக்கிறபடி “தேவன் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான் என்றென்றும் வாழ்ந்திருப்பான்.”

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 1:8-17 க்கான வீடியோ