ரோமர் 1:21-32
ரோமர் 1:21-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவர்கள் இறைவனை அறிந்தும்கூட, அவரை இறைவனாக மகிமைப்படுத்தவில்லை, அவருக்கு நன்றி செலுத்தவும் இல்லை. மாறாக அவர்களுடைய சிந்தனை பயனற்றதாகி, அவர்களுடைய உணர்வற்ற இருதயங்கள் இருளடைந்தன. தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டாலும், அவர்கள் மூடர்கள் ஆனார்கள். அவர்கள் அழியாமையுடைய மகிமையான இறைவனை வழிபடாமல், மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் உயிரினங்கள் போன்ற உருவங்களில் செய்யப்பட்ட அழிந்துபோகும் சிலைகளை வழிபட்டனர். ஆகவே இறைவன் அவர்களை அவர்களுடைய பாவ ஆசைகளுக்கு விட்டுவிட்டார். எனவே அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்தும் அசுத்தமான பாலுறவுகளில் ஈடுபட்டார்கள். அவர்கள் இறைவனைப்பற்றிய சத்தியத்தைப் புறக்கணித்துப் பொய்யை ஏற்றுக்கொண்டு, படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபட்டு, அவைகளுக்கே பணிசெய்தார்கள். படைத்தவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென். இதனால், இறைவன் அவர்களை வெட்கக்கேடான காம ஆசைகளுக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்களுடைய பெண்களுங்கூட இயல்பான பாலுறவை கைவிட்டு, இயல்புக்கு விரோதமான உறவுகளில் ஈடுபட்டார்கள். அவ்விதமாகவே ஆண்களும், இயல்பான பெண்களுடனான பாலுறவை விட்டுவிட்டு, ஆணுடன் ஆண் உறவுகொள்ளும்படியான காமவேட்கை கொண்டார்கள். ஆண்களுடன் ஆண்கள் அசிங்கமான செயல்களில் ஈடுபட்டார்கள். தங்களுடைய முறைகேடான செயல்களுக்கு ஏற்ற தண்டனையைத் தங்களிலேயேப் பெற்றுக்கொண்டார்கள். மேலும், அவர்கள் இறைவனைப்பற்றிய அறிவைக் காத்துக்கொள்வதை ஒரு தகுதியான செயலாக எண்ணவில்லை. இதனால் அவர்கள் செய்யத் தகாதவைகளைச் செய்யும்படி, இறைவன் அவர்களைச் சீர்கெட்ட சிந்தைக்கும் விட்டுவிட்டார். அவர்கள் எல்லாவித அநியாயத்தினாலும், தீமையினாலும், பேராசையினாலும், சீர்கேட்டினாலும் நிறைந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் பொறாமையினாலும், கொலையினாலும், சண்டையினாலும், வஞ்சனையினாலும், பகையினாலும் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் அவதூறு பேசுவோராயும், தூற்றுகிறவர்களாகவும், இறைவனை வெறுக்கிறவர்களாகவும், அவமரியாதை செய்கிறவர்களாகவும், இறுமாப்புக் கொண்டவர்களாகவும், பெருமை பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தீமைசெய்யும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். அவர்கள் உணர்வில்லாதவர்கள், உண்மை இல்லாதவர்கள், அன்பில்லாதவர்கள், இரக்கம் இல்லாதவர்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்துக்கேத் தகுதியானவர்கள் என்ற இறைவனுடைய நீதியான நியமத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும்கூட, இந்தக் காரியங்களைத் தாங்கள் தொடர்ந்து செய்கிறதுமல்லாமல், இவைகளைச் செய்கிறவர்களையும் பாராட்டுகிறார்கள்.
ரோமர் 1:21-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக, கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக, உணர்வு இல்லாதவர்களுமாக, உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக, சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக, இணங்காதவர்களுமாக, இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
ரோமர் 1:21-32 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனைப் பற்றி மக்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதில்லை; அவருக்கு நன்றி சொல்வதும் இல்லை. மக்கள் எண்ணங்களில் பயனற்றுப் போயினர். அவர்களின் அறிவீனமான நினைவுகளில் இருள் நிறைந்திருக்கிறது. மக்கள் தம்மைப் புத்திசாலிகள் என்று கூறிக்கொண்டே அறிவற்றோராக விளங்குகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் நிலைத்திருக்கும் தேவனின் மகிமையை விட்டொழிந்தார்கள். மக்கள் அந்த மகிமையை சாதாரண மண்ணுலக மக்களைப் போன்றும், பறவைகள், மிருகங்கள், பாம்புகள் ஆகியன போன்றும் உள்ள உருவ வழிபாட்டுக்கு மாற்றிவிட்டார்கள். மக்கள் பாவங்களால் நிறைந்து, கெட்டவற்றைச் செய்யவே விரும்பினர். எனவே தேவன் அவர்களை விட்டு விலகி, பாவ வழியிலேயே அவர்கள் தொடர்ந்து செல்ல விட்டுவிட்டார். அதனால் மக்கள் ஒவ்வொருவரும் தம் சரீரங்களை அவமானப்படுத்தி முறையற்ற வாழ்வில் தம்மைக் கெடுத்தனர். தேவனுடைய உண்மையை அவர்கள் பொய்யாக மாற்றிவிட்டார்கள். அவர்கள் தேவனை வணங்கவில்லை. அவர் அவர்களைப் படைத்தவர்! தேவன் என்றென்றும் புகழப்படுவதற்குரியவர். ஆமென். மக்கள் அவ்விதமான காரியங்களைச் செய்ததால், அவர்கள் அவமானத்துக்குரியவற்றில் ஈடுபட்டனர். தேவன் அவர்களை விட்டு விலகிவிட்டார். பெண்கள் ஆண்களோடு கொள்ளவேண்டிய இயற்கையான பாலுறவை விட்டு, விட்டு இயல்பற்ற வகையில் பிற பெண்களோடு பாலுறவு கொள்ளத் தொடங்கினர். அவ்வாறே ஆண்களும் இயல்பான முறையில் பெண்களோடு உறவு கொள்வதை விட்டு விட்டனர். அதனால் தவறான காமவெறியினால் ஆண்களோடு ஆண்கள் அவலட்சணமாக உறவு கொண்டதால் அந்த அக்கிரமத்துக்குரிய தண்டனையையும் தம் சரீரத்தில் பெற்றுக்கொண்டனர். தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம் என்று மக்கள் நினைக்கவில்லை. எனவே தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டார். அவர்கள் தங்கள் பயனற்ற சிந்தனைகளில் அமிழ்ந்து கிடக்க அனுமதித்தார். எனவே அவர்கள் செய்யக் கூடாதவற்றையெல்லாம் செய்து வந்தனர். எல்லாவிதமான பாவம், தீமை, சுயநலம், வெறுப்பு போன்றவை அனைத்தும் அவர்களிடம் நிறைந்து காணப்பட்டன. அவர்கள் பொறாமை, கொலை, சண்டை, பொய், வம்பு ஆகியவற்றைக் கொண்டவர்களாய் விளங்கினர். ஒருவரைப் பற்றி ஒருவர் கெட்ட செய்தியைப் பரப்பிக்கொண்டனர். அவர்கள் தேவனை வெறுத்தனர். அவர்கள் முரடர்களாகவும், அகந்தையுள்ளவர்களாகவும், தம்மைப்பற்றி வீண் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர். தீய காரியங்களைச் செய்யப் புதுப்புது வழிகளைக் கண்டு பிடித்தனர். தம் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தனர். அவர்கள் முட்டாள்களாய் இருந்தனர். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறினர். அவர்கள் மற்றவர்களிடம் இரக்கமும், கருணையும் காட்டியதே இல்லை. அவர்களுக்கு தேவனுடைய சட்டம் தெரியும். இதுபோல் பாவம் செய்கிறவர்கள் மரணத்துக்கு உரியவராவார் என்பதையும் அவர்கள் அறிவர். ஆனால் அவர்கள் அத்தகைய பாவங்களையே தொடர்ந்து செய்தனர். அதோடு இவ்வாறு பாவம் செய்கிற மற்றவர்களையும் பாராட்டி வந்தனர்.
ரோமர் 1:21-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.