ரோமர் 1:21-32

ரோமர் 1:21-32 TCV

அவர்கள் இறைவனை அறிந்தும்கூட, அவரை இறைவனாக மகிமைப்படுத்தவில்லை, அவருக்கு நன்றி செலுத்தவும் இல்லை. மாறாக அவர்களுடைய சிந்தனை பயனற்றதாகி, அவர்களுடைய உணர்வற்ற இருதயங்கள் இருளடைந்தன. தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டாலும், அவர்கள் மூடர்கள் ஆனார்கள். அவர்கள் அழியாமையுடைய மகிமையான இறைவனை வழிபடாமல், மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் உயிரினங்கள் போன்ற உருவங்களில் செய்யப்பட்ட அழிந்துபோகும் சிலைகளை வழிபட்டனர். ஆகவே இறைவன் அவர்களை அவர்களுடைய பாவ ஆசைகளுக்கு விட்டுவிட்டார். எனவே அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்தும் அசுத்தமான பாலுறவுகளில் ஈடுபட்டார்கள். அவர்கள் இறைவனைப்பற்றிய சத்தியத்தைப் புறக்கணித்துப் பொய்யை ஏற்றுக்கொண்டு, படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபட்டு, அவைகளுக்கே பணிசெய்தார்கள். படைத்தவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென். இதனால், இறைவன் அவர்களை வெட்கக்கேடான காம ஆசைகளுக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்களுடைய பெண்களுங்கூட இயல்பான பாலுறவை கைவிட்டு, இயல்புக்கு விரோதமான உறவுகளில் ஈடுபட்டார்கள். அவ்விதமாகவே ஆண்களும், இயல்பான பெண்களுடனான பாலுறவை விட்டுவிட்டு, ஆணுடன் ஆண் உறவுகொள்ளும்படியான காமவேட்கை கொண்டார்கள். ஆண்களுடன் ஆண்கள் அசிங்கமான செயல்களில் ஈடுபட்டார்கள். தங்களுடைய முறைகேடான செயல்களுக்கு ஏற்ற தண்டனையைத் தங்களிலேயேப் பெற்றுக்கொண்டார்கள். மேலும், அவர்கள் இறைவனைப்பற்றிய அறிவைக் காத்துக்கொள்வதை ஒரு தகுதியான செயலாக எண்ணவில்லை. இதனால் அவர்கள் செய்யத் தகாதவைகளைச் செய்யும்படி, இறைவன் அவர்களைச் சீர்கெட்ட சிந்தைக்கும் விட்டுவிட்டார். அவர்கள் எல்லாவித அநியாயத்தினாலும், தீமையினாலும், பேராசையினாலும், சீர்கேட்டினாலும் நிறைந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் பொறாமையினாலும், கொலையினாலும், சண்டையினாலும், வஞ்சனையினாலும், பகையினாலும் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் அவதூறு பேசுவோராயும், தூற்றுகிறவர்களாகவும், இறைவனை வெறுக்கிறவர்களாகவும், அவமரியாதை செய்கிறவர்களாகவும், இறுமாப்புக் கொண்டவர்களாகவும், பெருமை பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தீமைசெய்யும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். அவர்கள் உணர்வில்லாதவர்கள், உண்மை இல்லாதவர்கள், அன்பில்லாதவர்கள், இரக்கம் இல்லாதவர்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்துக்கேத் தகுதியானவர்கள் என்ற இறைவனுடைய நீதியான நியமத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும்கூட, இந்தக் காரியங்களைத் தாங்கள் தொடர்ந்து செய்கிறதுமல்லாமல், இவைகளைச் செய்கிறவர்களையும் பாராட்டுகிறார்கள்.

ரோமர் 1:21-32 க்கான வீடியோ