வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22

வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“லவோதிக்கேயா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது: வாக்குமாறாதவரும், சத்திய சாட்சியும். இறைவனின் படைப்பை ஆளுகை செய்கிறவரும், ஆமென் என்பவரின் வார்த்தைகள் இவைகளே. நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். நீ குளிராகவும் இல்லை, அனலாகவும் இல்லை. நீ குளிராகவோ அல்லது அனலாகவோ இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் நீயோ அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய் இருக்கிறபடியால் நான் உன்னை என்னுடைய வாயிலிருந்து உமிழ்ந்துவிடுவேன். நீயோ, ‘நான் செல்வந்தன்; நான் செல்வத்தைச் சம்பாதித்திருக்கிறேன், எனக்கு எவ்வித தேவையுமில்லை’ என்று சொல்கிறாய். ஆனால் நீயோ அவலமானவன், பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், உடையற்றவன் என்ற நிலையை உணராதவனாய் இருக்கிறாய். நீ என்னிடத்திலிருந்து நெருப்பில் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை விலைகொடுத்து வாங்கிக்கொள். அப்பொழுது நீ செல்வந்தனாவாய்; அணிந்துகொள்வதற்கு வெள்ளை உடைகளையும் வாங்கிக்கொள், அப்பொழுது உன்னுடைய வெட்கக்கேடான நிர்வாணத்தை நீ மறைத்துக்கொள்வாய். நீ பார்க்கும்படி உன் கண்களுக்குப் பூசிக்கொள்வதற்குத் தைலத்தையும் வாங்கிக்கொள், இதுவே, நான் உனக்குக் கொடுக்கும் ஆலோசனை. நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ, அவர்களைக் கடிந்துகொண்டு, கண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே வைராக்கியம் உள்ளவனாயிருந்து, மனந்திரும்பு. இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது என்னுடைய குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து, அவருடன் சாப்பிடுவேன், அவரும் என்னுடன் சாப்பிடுவார். நான் வெற்றி பெற்று, என் பிதாவினுடைய அரியணையில் அவருடன் வீற்றிருப்பது போல, வெற்றி பெறுகிறவர்களுக்கு என்னுடைய அரியணையில் என்னுடன் உட்காருவதற்கான உரிமையைக் கொடுப்பேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.”

வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: உண்மையும் சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய படைப்பிற்கு ஆதியுமாக இருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிரும் இல்லை அனலும் இல்லை; நீ குளிராக அல்லது அனலாக இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன். நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்; நான்: நீ ஐசுவரியவானாவதற்காக நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தெரியாதபடி நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்மையான ஆடைகளையும் என்னிடம் வாங்கிக்கொள்ளவும், நீ பார்வை பெறுவதற்காக உன் கண்களுக்கு மருந்து போடவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், நான் அவன் வீட்டிற்குள் சென்று, அவனோடுகூட உணவு உண்பேன், அவனும் என்னோடு உண்பான். நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22 பரிசுத்த பைபிள் (TAERV)

“லவோதிக்கேயா சபைக்கு எழுத வேண்டியது: “ஆமென் என்பவர் உங்களுக்கு இவற்றைக் கூறுகிறார். அவரே உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சி. தேவனால் படைக்கப்பட்டவற்றையெல்லாம் ஆள்பவர் அவர். “அவர் கூறுவது: நீ செய்பவற்றை நான் அறிவேன். நீ அனலானவனும் அல்ல, குளிர்ந்தவனும் அல்ல. ஆனால் நீ குளிராகவோ அனலாகவோ இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நீ வெப்பமாக மட்டுமே உள்ளாய். நீ அனலாகவோ குளிராகவோ இல்லை. எனவே உன்னைத் துப்பி விடத் தயாராக உள்ளேன். உன்னைச் செல்வன் என்று நீ சொல்லிக்கொள்கிறாய். உன்னிடம் எல்லாம் உள்ளது. உனக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் நீ பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், நிர்வாணி. நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட தங்கத்தை என்னிடமிருந்து வாங்குமாறு உனக்கு நான் அறிவுறுத்துகிறேன். பின்னரே நீ உண்மையான செல்வந்தன் ஆவாய். வெண்ணிற ஆடையை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நிர்வாணத்தை மூடிக்கொள்ளலாம். உங்கள் கண்களுக்கான மருந்தை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு உங்களால் உண்மையாகப் பார்க்க முடியும். “நான் நேசிக்கிற மக்களைத் திருத்துவேன், தண்டிப்பேன். எனவே கடினமாய் முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளுங்கள். இதோ நான் கதவருகில் நின்று தட்டுகிறேன். எனது குரலைக் கேட்டு ஒருவன் கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து அவனோடு உணவு உண்பேன். அவனும் என்னோடு உணவு உண்பான். “வெற்றி பெறுகிற ஒவ்வொருவனையும் என் சிம்மாசனத்தில் என்னோடு அமரச் செய்வேன். அதுபோலவே நான் வெற்றிகொண்டு என் பிதாவோடு சிம்மாசனத்தில் உட்கார்ந்தேன். கேட்கிற சக்திகொண்ட ஒவ்வொருவனும் ஆவியானவர் சபைகளுக்குக் கூறுவதைக் கேட்பானாக.”

வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.