வெளிப்படுத்தல் 3:14-22

வெளிப்படுத்தல் 3:14-22 TCV

“லவோதிக்கேயா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது: வாக்குமாறாதவரும், சத்திய சாட்சியும். இறைவனின் படைப்பை ஆளுகை செய்கிறவரும், ஆமென் என்பவரின் வார்த்தைகள் இவைகளே. நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். நீ குளிராகவும் இல்லை, அனலாகவும் இல்லை. நீ குளிராகவோ அல்லது அனலாகவோ இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் நீயோ அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய் இருக்கிறபடியால் நான் உன்னை என்னுடைய வாயிலிருந்து உமிழ்ந்துவிடுவேன். நீயோ, ‘நான் செல்வந்தன்; நான் செல்வத்தைச் சம்பாதித்திருக்கிறேன், எனக்கு எவ்வித தேவையுமில்லை’ என்று சொல்கிறாய். ஆனால் நீயோ அவலமானவன், பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், உடையற்றவன் என்ற நிலையை உணராதவனாய் இருக்கிறாய். நீ என்னிடத்திலிருந்து நெருப்பில் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை விலைகொடுத்து வாங்கிக்கொள். அப்பொழுது நீ செல்வந்தனாவாய்; அணிந்துகொள்வதற்கு வெள்ளை உடைகளையும் வாங்கிக்கொள், அப்பொழுது உன்னுடைய வெட்கக்கேடான நிர்வாணத்தை நீ மறைத்துக்கொள்வாய். நீ பார்க்கும்படி உன் கண்களுக்குப் பூசிக்கொள்வதற்குத் தைலத்தையும் வாங்கிக்கொள், இதுவே, நான் உனக்குக் கொடுக்கும் ஆலோசனை. நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ, அவர்களைக் கடிந்துகொண்டு, கண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே வைராக்கியம் உள்ளவனாயிருந்து, மனந்திரும்பு. இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது என்னுடைய குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து, அவருடன் சாப்பிடுவேன், அவரும் என்னுடன் சாப்பிடுவார். நான் வெற்றி பெற்று, என் பிதாவினுடைய அரியணையில் அவருடன் வீற்றிருப்பது போல, வெற்றி பெறுகிறவர்களுக்கு என்னுடைய அரியணையில் என்னுடன் உட்காருவதற்கான உரிமையைக் கொடுப்பேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.”