வெளிப்படுத்தின விசேஷம் 21:10-21

வெளிப்படுத்தின விசேஷம் 21:10-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது. அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது. அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:10-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது, அந்த இறைத்தூதன் என்னை ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு பெரிய உயர்ந்த மலைக்குக் கொண்டுபோனான். அவன் இறைவனிடமிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே வந்துகொண்டிருந்த, பரிசுத்த நகரமாகிய எருசலேமை எனக்குக் காண்பித்தான். அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. அது விலையுயர்ந்த மாணிக்கக்கல்லின் பிரகாசத்தைப்போலும், படிகைக் கல்லைப்போலும் பளிங்குக் கல்லைப்போலும் மின்னியது. அந்த நகரத்திற்கு, பெரிய உயர்ந்த மதில் இருந்தது. அந்த மதிலில், பன்னிரண்டு வாசல்கள் இருந்தன. பன்னிரண்டு இறைத்தூதர்கள் அந்த வாசல்களில் நின்றார்கள். அந்த வாசல்களில், இஸ்ரயேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த நகரத்தின் கிழக்குப் பக்கத்தில் மூன்றும், வடக்குப் பக்கத்தில் மூன்றும், தெற்குப் பக்கத்தில் மூன்றும், மேற்குப் பக்கத்தில் மூன்றுமாக, வாசல்கள் இருந்தன. அந்த நகரத்தின் மதில் பன்னிரண்டு அஸ்திபாரங்களின்மேல் கட்டப்பட்டிருந்தது. அவைகளின்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. என்னுடன் பேசிய தூதன், அந்த நகரத்தையும், அதன் வாசல்களையும், அதன் மதில்களையும் அளப்பதற்கென தங்கத்திலான ஒரு அளவுகோலை வைத்திருந்தான். அந்த நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் நீளமும் அகலமும் சம அளவாயிருந்தன. அவன் அந்த அளவுகோலினால் அந்த நகரத்தை அளந்தான். அது 2,200 கிலோமீட்டர் நீளமாய் இருந்தது. அதன் அகலமும் அதன் உயரமும்கூட அதே அளவாகவே இருந்தன. அவன் அந்த நகரத்தின் மதிலையும் அளந்தான். அந்த மதிலின் உயரம் சுமார் 65 மீட்டர் அளவாய் இருந்தது. மனிதர் பயன்படுத்தும் அளவுகோலையே, அந்த இறைத்தூதனும் பயன்படுத்தினான். அந்த மதில் படிகைக் கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரம் சுத்த தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது. அந்தத் தங்கம் கண்ணாடியைப்போல் தூய்மையாய் இருந்தது. அந்த நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவித மாணிக்கக் கற்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முதலாவது அஸ்திபாரக்கல் படிகைக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கக்கல், நான்காவது மரகதக்கல், ஐந்தாவது கோமேதகக்கல், ஆறாவது பதுமராகக்கல், ஏழாவது சுவர்ணரத்தினக்கல், எட்டாவது படிகைப் பச்சைக்கல், ஒன்பதாவது புஷ்பராகக்கல், பத்தாவது வைடூரியக்கல், பதினோராவது இந்திர நீலக்கல், பன்னிரெண்டாவது சுகந்திக்கல் ஆகியவைகளாயிருந்தன. பன்னிரண்டு வாசல்களும், பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒரு முத்தைக்கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்தின் பெரிய வீதி தெளிவுள்ள கண்ணாடியைப் போன்ற சுத்தத்தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:10-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் வம்சத்தில் உள்ள பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன. என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது. அவன் அதின் மதிலை அளந்தபோது, மனித அளவின்படியே அது நூற்றுநாற்பத்துநான்கு முழமாக இருந்தது. அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாக இருந்தது. நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:10-21 பரிசுத்த பைபிள் (TAERV)

அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது. அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது. அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனின் கைகளில் நகரையும் அதன் வாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்காகப் பொன்னாலான ஒரு அளவு கோல் இருந்தது. அந்நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீளம் அகலத்துக்குச் சமமாக இருந்தது. அத்தூதன் நகரத்தைத் தன் கோலால் அளந்தான். அது 12,000 ஸ்தாதி நீளமும் 12,000 ஸ்தாதி அகலமும் கொண்ட அளவுடையதாய் இருந்தது. அதன் உயரமும் அவ்வாறே 12,000 ஸ்தாதி அளவுடையதாயிருந்தது. அத்தூதன் மதிலையும் அளந்தான். அது மனித அளவின்படி அதாவது தூதனுடைய முன்னங்கையால் 144 முழ உயரம் இருந்தது. அச்சுவர் வைரக்கல்லால் ஆனது. நகரம் தூய பளிங்கு போன்ற தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது. நகரத்தின் சுவர்களுக்கான அஸ்திபாரக் கற்கள் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் அஸ்திபாரக்கல் வைரக்கல். இரண்டாவது கல் இந்திரநீலம். மூன்றாவது சந்திர காந்தம். நான்காவது மரகதம். ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம். ஏழாவது சுவர்ணரத்தினம். எட்டாவது படிகப்பச்சை. ஒன்பதாவது புஷ்பராகம். பத்தாவது வைடூரியம். பதினோராவது கல் சுநீரம். பன்னிரண்டாவது சுகந்தி. பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாய் இருந்தது. அந்த நகரத் தெரு தூய பொன்னால் ஆக்கப்பட்டது. கண்ணாடியைப்போல அந்தப் பொன் சுத்தமாயிருந்தது.