யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 21:10-21

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 21:10-21 TAERV

அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது. அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது. அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனின் கைகளில் நகரையும் அதன் வாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்காகப் பொன்னாலான ஒரு அளவு கோல் இருந்தது. அந்நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீளம் அகலத்துக்குச் சமமாக இருந்தது. அத்தூதன் நகரத்தைத் தன் கோலால் அளந்தான். அது 12,000 ஸ்தாதி நீளமும் 12,000 ஸ்தாதி அகலமும் கொண்ட அளவுடையதாய் இருந்தது. அதன் உயரமும் அவ்வாறே 12,000 ஸ்தாதி அளவுடையதாயிருந்தது. அத்தூதன் மதிலையும் அளந்தான். அது மனித அளவின்படி அதாவது தூதனுடைய முன்னங்கையால் 144 முழ உயரம் இருந்தது. அச்சுவர் வைரக்கல்லால் ஆனது. நகரம் தூய பளிங்கு போன்ற தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது. நகரத்தின் சுவர்களுக்கான அஸ்திபாரக் கற்கள் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் அஸ்திபாரக்கல் வைரக்கல். இரண்டாவது கல் இந்திரநீலம். மூன்றாவது சந்திர காந்தம். நான்காவது மரகதம். ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம். ஏழாவது சுவர்ணரத்தினம். எட்டாவது படிகப்பச்சை. ஒன்பதாவது புஷ்பராகம். பத்தாவது வைடூரியம். பதினோராவது கல் சுநீரம். பன்னிரண்டாவது சுகந்தி. பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாய் இருந்தது. அந்த நகரத் தெரு தூய பொன்னால் ஆக்கப்பட்டது. கண்ணாடியைப்போல அந்தப் பொன் சுத்தமாயிருந்தது.

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 21:10-21 க்கான வீடியோ