வெளிப்படுத்தின விசேஷம் 19:1-9

வெளிப்படுத்தின விசேஷம் 19:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்குப் பின்பு, நான் பரலோகத்தில் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பெரியதொரு மக்கள் கூட்டத்தின் இரைச்சலைப்போல் இருந்தது: “அல்லேலூயா! இரட்சிப்பும், மகிமையும், வல்லமையும் நம்முடைய இறைவனுக்கே உரியவை. ஏனெனில் அவருடைய நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை. தனது விபசாரத்தினால் பூமியைச் சீர்கெடுத்த அந்தப் பெரிய வேசிக்கு, இறைவன் தண்டனைத்தீர்ப்பு வழங்கிவிட்டார். தனது ஊழியரின் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக, அவர் அவளைப் பழிவாங்கினார்.” மேலும் அவர்கள் சத்தமிட்டு: “அல்லேலூயா! அவள் எரிக்கப்படுவதால் எழும்பும் புகை என்றென்றுமாய் மேல்நோக்கி எழும்புகிறது” என்றார்கள். அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் நான்கு உயிரினங்களும் கீழே விழுந்து, அரியணையில் அமர்ந்திருந்த இறைவனை வழிபட்டார்கள். அவர்கள் சத்தமிட்டு, “ஆமென் அல்லேலூயா!” என்றார்கள். அப்பொழுது அரியணையில் இருந்த ஒரு குரல்: “இறைவனுடைய எல்லா ஊழியரே, அவருக்குப் பயப்படுகிறவர்களே, சிறியோர், பெரியோர் யாவருமாய் நீங்கள் நம்முடைய இறைவனைத் துதியுங்கள்!” என்றது. பின்பு நான், ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பெரியதொரு மக்கள் கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், பாய்ந்து செல்லும் வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், இடிமுழக்கத்தின் பெரும் ஓசையைப்போலவும் இருந்தது. அது சத்தமிட்டுக் கூறினதாவது: “அல்லேலூயா! எல்லாம் வல்ல இறைவனாகிய நமது கர்த்தர் ஆளுகை செய்கிறார். நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருப்போம்; அவருக்கே மகிமையைச் செலுத்துவோம். ஏனெனில், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது. அவருக்குரிய மணமகள் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள். அவள் உடுத்திக்கொள்ளும்படி, துலக்கமானதும், தூய்மையானதுமான மென்பட்டு அவளுக்குக் கொடுக்கப்பட்டது.” பரிசுத்தவான்களின் நீதி செயல்களையே மென்பட்டு குறிக்கின்றது. அப்பொழுது அந்த இறைத்தூதன் என்னிடம், “ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எழுது!” என்றான். அவன் மேலும், “இது இறைவனுடைய சத்திய வார்த்தைகள்” என்றும் சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்: “அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள். மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் முகங்குப்புறவிழுந்து: ஆமென், அல்லேலூயா,” என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள். மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே, அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்” என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது. அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும், பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே. பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

இதற்குப்பிறகு பரலோகத்தில் உள்ள ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன், அவர்கள், “அல்லேலூயா! தேவனைத் துதியுங்கள், வெற்றியும், மகிமையும், வல்லமையும் நம் தேவனுக்கு உரியது. அவரது நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நேர்மையுமானவை. நமது தேவன் மாபெரும் வேசியைத் தண்டித்துவிட்டார். இந்த உலகத்தை தன் வேசித்தனத்தால் கெடுத்தவள் அவளே. அவள் கொன்ற தமது ஊழியர்களின் இரத்தத்துக்கு தேவன் பழிவாங்கினார்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பரலோகத்திலுள்ள மக்கள், “அல்லேலூயா! அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்றும் சொன்னார்கள். பிறகு இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் பணிந்து வணங்கி, சிம்மாசனத்தில் வீற்றிருந்த தேவனை வழிபட்டனர். “ஆமென் அல்லேலூயா” என அவர்கள் சொன்னார்கள். பின்னர் சிம்மாசனத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அது, “நமது தேவனுக்கு சேவை செய்யும் அனைத்து மக்களே, அவரைத் துதியுங்கள். நமது தேவனுக்கு மகிமையளிக்கும் பெரியோரும் சிறியோருமான மக்களே, நமது தேவனைத் துதியுங்கள்!” என்று கூறியது. அதற்குப் பிறகு ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன். அது பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியோசை போலவும் கேட்டது. அவர்கள் சொன்னார்கள்: “அல்லேலூயா! நமது தேவனாகிய கர்த்தர் ஆளுகிறார். அவரே சர்வ வல்லமையுள்ளவர். நாம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம். தேவனுக்கு மகிமையைக் கொடுப்போம்! ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்தது. ஆட்டுக்குட்டியானவரின் மணமகள் தன்னைத் தயாராக்கிக்கொண்டாள். மெல்லிய ஆடைகள் அவள் அணியும்படியாகத் தரப்பட்டன. அந்த ஆடைகள் பளபளப்பானவை, சுத்தமானவை.” (மெல்லிய ஆடை என்பது தேவனுடைய பரிசுத்தமான மக்களின் நற்செயலைக் குறிக்கும்.) பிறகு அத்தூதன், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் விருந்துண்ண அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனை எழுதி வைத்துக்கொள்” என்றான். “இவை தேவனுடைய உண்மையான வார்த்தைகள்” என்றும் சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள். மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது. அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.