இதற்குப் பின்பு, நான் பரலோகத்தில் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பெரியதொரு மக்கள் கூட்டத்தின் இரைச்சலைப்போல் இருந்தது: “அல்லேலூயா! இரட்சிப்பும், மகிமையும், வல்லமையும் நம்முடைய இறைவனுக்கே உரியவை. ஏனெனில் அவருடைய நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை. தனது விபசாரத்தினால் பூமியைச் சீர்கெடுத்த அந்தப் பெரிய வேசிக்கு, இறைவன் தண்டனைத்தீர்ப்பு வழங்கிவிட்டார். தனது ஊழியரின் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக, அவர் அவளைப் பழிவாங்கினார்.” மேலும் அவர்கள் சத்தமிட்டு: “அல்லேலூயா! அவள் எரிக்கப்படுவதால் எழும்பும் புகை என்றென்றுமாய் மேல்நோக்கி எழும்புகிறது” என்றார்கள். அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் நான்கு உயிரினங்களும் கீழே விழுந்து, அரியணையில் அமர்ந்திருந்த இறைவனை வழிபட்டார்கள். அவர்கள் சத்தமிட்டு, “ஆமென் அல்லேலூயா!” என்றார்கள். அப்பொழுது அரியணையில் இருந்த ஒரு குரல்: “இறைவனுடைய எல்லா ஊழியரே, அவருக்குப் பயப்படுகிறவர்களே, சிறியோர், பெரியோர் யாவருமாய் நீங்கள் நம்முடைய இறைவனைத் துதியுங்கள்!” என்றது. பின்பு நான், ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பெரியதொரு மக்கள் கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், பாய்ந்து செல்லும் வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், இடிமுழக்கத்தின் பெரும் ஓசையைப்போலவும் இருந்தது. அது சத்தமிட்டுக் கூறினதாவது: “அல்லேலூயா! எல்லாம் வல்ல இறைவனாகிய நமது கர்த்தர் ஆளுகை செய்கிறார். நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருப்போம்; அவருக்கே மகிமையைச் செலுத்துவோம். ஏனெனில், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது. அவருக்குரிய மணமகள் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள். அவள் உடுத்திக்கொள்ளும்படி, துலக்கமானதும், தூய்மையானதுமான மென்பட்டு அவளுக்குக் கொடுக்கப்பட்டது.” பரிசுத்தவான்களின் நீதி செயல்களையே மென்பட்டு குறிக்கின்றது. அப்பொழுது அந்த இறைத்தூதன் என்னிடம், “ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எழுது!” என்றான். அவன் மேலும், “இது இறைவனுடைய சத்திய வார்த்தைகள்” என்றும் சொன்னான்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் வெளிப்படுத்தல் 19
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: வெளிப்படுத்தல் 19:1-9
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்