வெளிப்படுத்தின விசேஷம் 17:1-7

வெளிப்படுத்தின விசேஷம் 17:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏழு கிண்ணங்களை வைத்திருந்த அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடம் வந்து, “நீ வா, அநேக நீர்நிலைகளின்மேல் உட்கார்ந்திருக்கிற மாபெரும் வேசிக்குக் கிடைக்கப்போகும் தண்டனையை நான் உனக்குக் காண்பிப்பேன். அவளுடன் பூமியின் அரசர்கள் எல்லாம் விபசாரம் செய்தார்கள்; பூமியில் குடியிருக்கிறவர்கள் அவளுடைய விபசாரத்தின் திராட்சை மதுவினால் போதையுற்றிருந்தார்கள்” என்றான். பின்பு தூதன் என்னை ஆவியானவரில் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், பாலைவனத்திற்குக் கொண்டுசென்றான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பான மிருகத்தின்மேல் உட்கார்ந்திருப்பதை நான் கண்டேன். அந்த மிருகம் இறைவனை அவமதிக்கும் பெயர்களால் மூடப்பட்டிருந்தது. அந்த மிருகத்திற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. அந்தப் பெண் ஊதாநிற உடையையும், சிவப்புநிற உடையையும் உடுத்தியிருந்தாள். தங்கத்தினாலும், மாணிக்கக் கற்களினாலும், முத்துக்களினாலும் அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அருவருப்பான காரியங்களினாலும், அவளுடைய விபசாரத்தின் அசிங்கங்களினாலும் நிறைந்த ஒரு தங்கக் கிண்ணத்தை அவள் தனது கையில் வைத்திருந்தாள். அவளுடைய நெற்றியிலே எழுதப்பட்டிருந்த பெயர் ஒரு இரகசியமாயிருந்தது: மாபெரும் பாபிலோன், வேசிகளுக்கும் பூமியின் எல்லா அருவருப்புகளுக்கும் தாய். அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறிகொண்டிருந்ததை நான் கண்டேன். அதாவது இயேசுவுக்கு சாட்சிகளாய் இருந்தவர்களின் இரத்தமே. நான் அவளைக் கண்டு மிகவும் வியப்படைந்தேன். அப்பொழுது அந்தத் இறைத்தூதன் என்னிடம்: “நீ ஏன் வியப்படைகிறாய்? அந்தப் பெண்ணையும், அவள் ஏறியிருக்கிற ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளுமுள்ள மிருகத்தையும் பற்றிய இரகசியத்தை நான் உனக்கு விளக்கிச்சொல்லுவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே; அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி; ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன். அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

ஏழு தூதர்களில் ஒரு தூதன் வந்து என்னிடம் பேசினான். ஏழு கிண்ணம் வைத்திருந்த ஏழு தூதர்களில் இத்தூதனும் ஒருவன். அவன், “வா. ஒரு பிரசித்தி பெற்ற வேசிக்கு வரப்போகும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். அவள் திரளான தண்ணீர்களின்மேல் உட்கார்ந்திருக்கிறவள். பூமியில் உள்ள ராஜாக்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான். ஆவியானவரால் என்னைப் பாலைவனத்துக்கு அத்தூதன் கொண்டுபோனான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மிருகத்தின்மேல் தீய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. இரத்த வண்ணத்தில் சிவப்பும் இரத்தாம்பரமுமான ஆடை அந்தப் பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டது. அவள் பொன்னாலும் நகைகளாலும், முத்துக்களாலும் தன்னை அலங்கரித்திருந்தாள். அவள் கையில் ஒரு பொன் கோப்பையை வைத்திருந்தாள். இக்கோப்பை அருவருப்பாலும், வேசித்தனமாகிய அசிங்கத்தாலும் நிறைந்திருந்தது. அவளது நெற்றியில் அவளுக்குரிய பட்டப்பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பட்டப் பெயருக்கு ஒரு மறைபொருளும் உண்டு. எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்: மகா பாபிலோன் வேசிகளுக்கும் பூமியில் உள்ள அருவருப்புகளுக்கும் தாய்! அப்பெண் குடித்திருந்ததை நான் பார்த்தேன். அவள் தேவனின் பரிசுத்தமான மக்களின் இரத்தத்தாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தாலும் நிலைதடுமாறி இருந்தாள். அவளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. அப்போது தூதன் என்னைப் பார்த்து, “ஏன் அதிசயப்படுகிறாய்? நான் இவளுடைய இரகசியத்தையும், இவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் கொண்ட அம்மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி; ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவுப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன். அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்