யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 17:1-7

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 17:1-7 TAERV

ஏழு தூதர்களில் ஒரு தூதன் வந்து என்னிடம் பேசினான். ஏழு கிண்ணம் வைத்திருந்த ஏழு தூதர்களில் இத்தூதனும் ஒருவன். அவன், “வா. ஒரு பிரசித்தி பெற்ற வேசிக்கு வரப்போகும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். அவள் திரளான தண்ணீர்களின்மேல் உட்கார்ந்திருக்கிறவள். பூமியில் உள்ள ராஜாக்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான். ஆவியானவரால் என்னைப் பாலைவனத்துக்கு அத்தூதன் கொண்டுபோனான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மிருகத்தின்மேல் தீய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. இரத்த வண்ணத்தில் சிவப்பும் இரத்தாம்பரமுமான ஆடை அந்தப் பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டது. அவள் பொன்னாலும் நகைகளாலும், முத்துக்களாலும் தன்னை அலங்கரித்திருந்தாள். அவள் கையில் ஒரு பொன் கோப்பையை வைத்திருந்தாள். இக்கோப்பை அருவருப்பாலும், வேசித்தனமாகிய அசிங்கத்தாலும் நிறைந்திருந்தது. அவளது நெற்றியில் அவளுக்குரிய பட்டப்பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பட்டப் பெயருக்கு ஒரு மறைபொருளும் உண்டு. எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்: மகா பாபிலோன் வேசிகளுக்கும் பூமியில் உள்ள அருவருப்புகளுக்கும் தாய்! அப்பெண் குடித்திருந்ததை நான் பார்த்தேன். அவள் தேவனின் பரிசுத்தமான மக்களின் இரத்தத்தாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தாலும் நிலைதடுமாறி இருந்தாள். அவளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. அப்போது தூதன் என்னைப் பார்த்து, “ஏன் அதிசயப்படுகிறாய்? நான் இவளுடைய இரகசியத்தையும், இவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் கொண்ட அம்மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்