சங்கீதம் 90:1-14

சங்கீதம் 90:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, தலைமுறைதோறும் நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர். மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும் உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும், நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர். நீர் மனிதனை மீண்டும் தூசிக்குத் திருப்பி, “மனுமக்களே, தூசியாகுங்கள்” என்கிறீர். உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள் கழிந்துபோன ஒரு நாளைப் போலவும், இரவின் ஒரு சாமத்தைப் போலவும் இருக்கின்றன. ஆனாலும் மரண நித்திரையில் நீர் மானிடரை வெள்ளம்போல வாரிக்கொண்டு போகிறீர்; அவர்கள் காலையில் முளைக்கும் பசும்புல்லைப்போல் இருக்கிறார்கள்: அது காலையில் புதிதாக முளைத்துப் பூத்தாலும், மாலையாகும்போது உலர்ந்து வாடிப்போகும். நாங்கள் உமது கோபத்தால் சோர்ந்துபோகிறோம், உமது கடுங்கோபத்தால் திகிலடைகிறோம். நீர் எங்கள் அநியாயங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் இரகசிய பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். எங்கள் நாட்கள் எல்லாம் உமது கடுங்கோபத்தால் கடந்துபோய்விட்டது; நாங்கள் எங்களுடைய வருடங்களைப் புலம்பலோடே முடிக்கின்றோம். எங்கள் வாழ்நாட்கள் எழுபது வருடங்களே; நாங்கள் பெலனுள்ளவர்களாய் இருந்தால், அது எண்பது வருடங்களாகவும் இருக்கலாம், ஆனாலும் அவை கஷ்டமும் துன்பமும் நிறைந்தவையாகவே இருக்கின்றன; எங்கள் வாழ்நாட்கள் விரைவாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். உமது கோபத்தின் வல்லமையை யார் அறிவார்? உமக்குப் பயப்படத்தக்கதாய் உமது கோபத்தை யார் அறிவார்? எங்கள் நாட்களை சரியாகக் கணக்கிட எங்களுக்குப் போதியும், அதினால் நாங்கள் ஞானமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்வோம். யெகோவாவே, மனமிரங்கும்; எவ்வளவு காலத்திற்கு இந்த நிலை? உமது பணியாளர்கள்மேல் கருணையாய் இரும். காலையிலே எங்களை உமது உடன்படிக்கையின் அன்பினால் திருப்தியாக்கும்; அப்பொழுது நாங்கள் இன்பமாய்ப் பாடி, எங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாய் இருப்போம்.

சங்கீதம் 90:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர். மலைகள் தோன்றுமுன்பும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். நீர் மனிதர்களைத் தூளாக்கி, மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர். உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது. அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும். நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம். எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம். எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம். உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்? நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? உமது அடியார்களுக்காகப் பரிதபியும். நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

சங்கீதம் 90:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம். தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன். தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்! நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர், நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர். ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும் கடந்த இரவைப் போலவும் இருக்கும். நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர். எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம். நாங்கள் புல்லைப் போன்றவர்கள். காலையில் புல் வளரும், மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும். தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம். உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது! எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர். தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர். உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும். காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும். நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும். பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம். எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை. திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்! நாங்கள் பறந்து மறைவோம். தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார். ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை. நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும். கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும். உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும். ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும். நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.

சங்கீதம் 90:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர். பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர். உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது. அவர்களை வெள்ளம்போல் வாரிக் கொண்டு போகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம். நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம். எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம். எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்? நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும். நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.