சங்கீத புத்தகம் 90:1-14

சங்கீத புத்தகம் 90:1-14 TAERV

ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம். தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன். தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்! நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர், நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர். ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும் கடந்த இரவைப் போலவும் இருக்கும். நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர். எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம். நாங்கள் புல்லைப் போன்றவர்கள். காலையில் புல் வளரும், மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும். தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம். உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது! எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர். தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர். உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும். காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும். நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும். பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம். எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை. திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்! நாங்கள் பறந்து மறைவோம். தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார். ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை. நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும். கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும். உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும். ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும். நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.