சங்கீதம் 78:40-72

சங்கீதம் 78:40-72 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தர வெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள். அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள். அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள். அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக்கூடாதபடி செய்தார். அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக் கொடுத்தார். தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக்காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து; தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப் போல் கூட்டிக்கொண்டுபோய்; அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது. அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலது கரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக் கொண்டுவந்து, அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார். ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய், தங்கள் பிதாக்களைப்போல வழி விலகி, துரோகம்பண்ணி, மோசம் போக்கும் வில்லைப்போல் துவண்டு, தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து, தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி, தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார். அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள். அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை. அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப் போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப் போலவும் விழித்து, தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார். அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்து கொள்ளாமல், யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்து கொண்டார். தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப் போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத் தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும், தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டு வந்தார். இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.

சங்கீதம் 78:40-72 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் எத்தனை முறை பாலைவனத்திலே அவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; பாழ்நிலத்திலே அவரைத் துக்கப்படுத்தினார்கள். அவர்கள் திரும்பத்திரும்ப இறைவனைச் சோதித்தார்கள்; அவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை வேதனைப்படுத்தினார்கள். அவர்கள் அவருடைய வல்லமையையும், ஒடுக்கியவனிடமிருந்து அவர் தங்களை மீட்ட நாளையும் நினைவில்கொள்ளவில்லை. அந்நாளில் எகிப்திலே அவர் அடையாளங்களையும், சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார். அவர் அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாறப்பண்ணினார்; அவர்களுடைய நீரோடைகளிலிருந்து அவர்களால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. அவர் பறக்கும் வண்டு கூட்டங்களை அனுப்பினார், அவைகள் அவர்களை தாக்கின. அவர் தவளைகளை அனுப்பினார், அவைகள் அவர்களைப் பாழாக்கின. அவர் அவர்களுடைய பயிர்களைப் பச்சைப் புழுக்களுக்கும், அவர்களுடைய விளைச்சல்களை வெட்டுக்கிளிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். அவர் அவர்களுடைய திராட்சைக் கொடிகளை பனிக்கட்டி மழையாலும், அவர்களுடைய காட்டத்தி மரங்களை கல்மழையாலும் அழித்தார். அவர் அவர்களுடைய மாடுகளை பனிக்கட்டி மழைக்கும், அவர்களுடைய மந்தை மிருகங்களை மின்னல் தாக்கத்திற்கும் ஒப்புக்கொடுத்தார். அவர் தமது கடுங்கோபத்தையும், சினத்தையும், எதிர்ப்பையும், இன்னலையும் அழிவின் தூதர் கூட்டமாக அவர்கள்மேல் கட்டவிழ்த்தார். அவர் தமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியை அமைத்தார்; அவர் அவர்களை மரணத்திலிருந்து தப்பவிடாமல், கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். அவர் எகிப்தின் எல்லா மூத்த மகன்களையும் காமின் கூடாரங்களில் அவர்களுக்கு பிறந்த மூத்த மகன்களையும் அழித்தார். ஆனால் அவர் தமது மக்களை செம்மறியாடுகளைப்போல் வெளியே கொண்டுவந்து, அவர்களை மந்தையைப்போல் பாலைவனத்தின் வழியே, பாதுகாப்பாய் அவர்களை அழைத்துச் சென்றபடியால், அவர்கள் பயப்படாதிருந்தார்கள்; ஆனால் அவர்களுடைய பகைவர்களையோ, கடல் மூடிப்போட்டது. இறைவன் தமது பரிசுத்த நாட்டின் எல்லைக்கு, தமது வலதுகரத்தினால் கைப்பற்றியிருந்த மலைநாட்டிற்கு, அவர்களைக் கொண்டுவந்தார். அவர் அவர்களுக்கு முன்பாகப் பிற நாட்டு மக்களைத் துரத்தி, அவர்களுடைய நிலங்களைப் பங்கிட்டு சொத்துரிமையாகப் பிரித்துக் கொடுத்தார்; அவர் இஸ்ரயேலின் கோத்திரங்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்தினார். ஆனால், அவர்களோ இறைவனைச் சோதித்து, உன்னதமானவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; அவர்கள் அவருடைய நியமங்களைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே வழிதவறி, துரோகம் செய்தார்கள்; இலக்குத் தவறும் வில்லைப்போல் நம்பமுடியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் தங்கள் வழிபாட்டு மேடைகளால் அவருக்குக் கோபமூட்டினார்கள்; அவர்கள் தங்களுடைய இறைவனல்லாதவைகளால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள். இறைவன் அவற்றைக் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டார்; அவர் இஸ்ரயேலரை முழுமையாகப் புறக்கணித்தார். மனிதர் மத்தியில் தாம் அமைத்திருந்த கூடாரமாகிய சீலோவின் இறைசமுகக் கூடாரத்தைவிட்டு அகன்றார். அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து, தமது மகிமையைப் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். அவர் தமது மக்களை வாளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அவர் தமது உரிமைச்சொத்தான அவர்கள்மீது மிகவும் கோபங்கொண்டார். அவர்களுடைய இளைஞரை நெருப்பு சுட்டெரித்தது; அவர்களுடைய இளம்பெண்களுக்குத் திருமணப் பாடல்கள் இல்லாமல் போனது. அவர்களுடைய ஆசாரியர்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; அவர்களுடைய விதவைகளினால் அழவும் முடியவில்லை. அதின்பின் யெகோவா நித்திரையிலிருந்து எழும்புவது போலவும், போர்வீரன் மதுமயக்கத்திலிருந்து எழும்புவது போலவும் விழித்தெழுந்தார். அவர் தமது பகைவர்களை விரட்டிப் பின்வாங்கச் செய்தார்; அவர்களை நித்திய வெட்கத்திற்கு உள்ளாக்கினார். அவர் யோசேப்பின் வம்சங்களைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவர் யூதா கோத்திரத்தையும், தாம் நேசித்த சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார். அவர் தாம் வாழும் தமது பரிசுத்த இடத்தை உயர்ந்த வானங்களைப் போலவும், நித்தியமாய் தாம் நிலைப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். அவர் தமது அடியானாகிய தாவீதைத் தெரிந்தெடுத்து, அவனை செம்மறியாட்டுத் தொழுவங்களிலிருந்து கொண்டுவந்தார். ஆடுகளை மேய்ப்பதைவிட்டுத் தமது மக்களாகிய யாக்கோபுக்கும், தமது உரிமைச்சொத்தான இஸ்ரயேலுக்கும் மேய்ப்பனாக இருக்கும்படியாக அவனைக் கொண்டுவந்தார். தாவீது அவர்களை தன் இருதயத்தின் உத்தமத்தோடு மேய்த்தான்; கைத்திறமையால் அவர்களை வழிநடத்தினான்.

சங்கீதம் 78:40-72 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள். அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள். அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள். அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார். அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து; தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்; அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது. அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து, அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார். ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய், தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி, துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு, தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து, தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி, தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார். அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள். அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை. அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து, தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார். அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல், யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார். தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார். இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.

சங்கீதம் 78:40-72 பரிசுத்த பைபிள் (TAERV)

ஓ! அந்த ஜனங்கள் பாலைவனத்தில் தேவனுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தினார்கள்! அவருக்கு மிகுந்த விசனமடையச் செய்தார்கள். மீண்டும், மீண்டும் அந்த ஜனங்கள் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரை அவர்கள் உண்மையாகவே புண்படுத்தினார்கள். தேவனுடைய வல்லமையை அந்த ஜனங்கள் மறந்துவிட்டார்கள். பகைவரிடமிருந்து பலமுறை தேவன் அவர்களைக் காத்தார் என்பதை அவர்கள் மறந்தார்கள். எகிப்தில் ஆண்டவர் நடத்திய அற்புதங்களையும், சோவானின் களங்களில் (வயல்களில்) நடந்த அற்புதங்களையும் அவர்கள் மறந்தார்கள். தேவன் ஆறுகளை இரத்தமாக்கினார். எகிப்தியர்கள் அந்த தண்ணீரைப் பருக முடியவில்லை. தேவன் கூட்டமாக வண்டுகளை அனுப்பினார், அவை எகிப்தியரைக் கடித்தன. தேவன் தவளைகளை அனுப்பினார். அவை எகிப்தியரின் வாழ்க்கையைக் கெடுத்தன. தேவன் அவர்கள் பயிர்களைப் புழு பூச்சிகளுக்குக் கொடுத்தார். அவர்களின் பிற தாவரங்களை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார். தேவன் அவர்களின் திராட்சைக் கொடிகளைக் கல்மழையால் அழித்தார். அவர்களின் மரங்களை அழிக்கப் பெருங்கல்மழையைப் பயன்படுத்தினார். கல்மழையால் தேவன் அவர்கள் விலங்குகளைக் கொன்றார். அவர்கள் மந்தைகள் (ஆடு, மாடுகள்) மின்னலால் தாக்குண்டு மடிந்தன. தேவன் எகிப்தியருக்கு அவரது கோபத்தைக் காண்பித்தார். அவர்களுக்கு எதிராக அழிக்கும் தேவதூதர்களை அனுப்பினார். தேவன் தமது கோபத்தைக் காட்ட ஒரு வழியைக் கண்டார். அவர் அந்த ஜனங்கள் வாழ அனுமதிக்கவில்லை. கொடிய நோயால் அவர்கள் மடியச் செய்தார். எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகளை தேவன் கொன்றார். காமின் குடும்பத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் அவர் கொன்றார். அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார். அவர் தமது ஜனங்களை மந்தைகளைப் போல் பாலைவனத்தினூடே வழிநடத்திச் சென்றார். அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழிகாட்டி நடத்தினார். தேவனுடைய ஜனங்கள் அஞ்ச வேண்டியது எதுவுமில்லை. தேவன் அவர்களது பகைவர்களைச் செங்கடலில் அமிழச் செய்தார். தேவன் அவரது ஜனங்களை அவரது பரிசுத்த தேசத்திற்கு வழிநடத்தினார். தமது வல்லமையால் எடுத்துக்கொண்ட மலைக்கு அவர்களை அழைத்துச் சென்றார். பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார். தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார். தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார். ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள். அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள். எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள். இஸ்ரவேலர் உயர்ந்த பீடங்களைக் கட்டி, தேவனை கோபமடையச் செய்தார்கள். அவர்கள் பொய் தெய்வங்களுக்குச் சிலைகளை எழுப்பி, தேவனை பொறாமை அடையச் செய்தார்கள். தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார். அவர் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளினார். தேவன் சீலோவிலுள்ள பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நீக்கினார். ஜனங்களோடு கூட தேவன் அக்கூடாரத்தில் வாழ்ந்திருந்தார். பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார். பகைவர்கள் தேவனுடைய “அழகிய நகையை” எடுத்துக்கொண்டார்கள். தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார். அவர்கள் போரில் கொல்லப்படும்படியாக அனுமதித்தார். இளைஞர்கள் மரணமடையும்படியாக எரிக்கப்பட்டார்கள். அவர்கள் மணக்க வேண்டிய இளம் பெண்கள் திருமணப்பாடல் எதையும் பாடவில்லை. ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை. இறுதியாக, தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப்போல நம் ஆண்டவர் எழுந்திருந்தார். அவர் மிகுதியாகத் திராட்சைரசத்தைப் பருகிய வீரனைப்போல காணப்பட்டார். தேவன் தமது பகைவர்களை பின்வாங்கச் செய்து, அவர்களை முறியடித்தார். தேவன் தமது பகைவர்களைத் தோற்கடித்து, என்றென்றும் அவர்கள் அவமானமுறும்படி செய்தார். ஆனால் தேவன் யோசேப்பின் குடும்பத்தை நிராகரித்தார். எப்பிராயீமின் குடும்பத்தாரை தேவன் ஏற்கவில்லை. இல்லை, தேவன் யூதாவின் கோத்திரத்தினரைத் தேர்ந்தெடுத்தார். தேவன், தாம் நேசிக்கும் சீயோன் மலையைத் தேர்ந்துக் கொண்டார். அம்மலையின் மேல் உயரத்தில் தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார். பூமியைப் போல என்றென்றும் இருக்கும்படியாக தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார். தனது விசேஷ பணியாளாக தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்தார். தாவீது ஆட்டுத் தொழுவங்களைக் காத்துக்கொண்டிருந்தான். ஆனால் தேவன் அவனை அப்பணியிலிருந்து அகற்றினார். தாவீது மந்தை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஆனால் தேவன் அவனை அவ்வேலையிலிருந்து அகற்றினார். தேவன் அவரது ஜனங்களைக் கவனிக்கும் வேலையை தாவீதுக்குக் கொடுத்தார். தேவனுடைய சொத்தாகிய யாக்கோபின் ஜனங்களையும் இஸ்ரவேலரின் ஜனங்களையும் கவனிக்கும் பொறுப்பை அவனுக்கு அளித்தார். தாவீது அவர்களை பரிசுத்த இருதயத்தோடும், மிகுந்த ஞானத்தோடும் வழிநடத்தினான்.