சங்கீத புத்தகம் 78:40-72

சங்கீத புத்தகம் 78:40-72 TAERV

ஓ! அந்த ஜனங்கள் பாலைவனத்தில் தேவனுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தினார்கள்! அவருக்கு மிகுந்த விசனமடையச் செய்தார்கள். மீண்டும், மீண்டும் அந்த ஜனங்கள் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரை அவர்கள் உண்மையாகவே புண்படுத்தினார்கள். தேவனுடைய வல்லமையை அந்த ஜனங்கள் மறந்துவிட்டார்கள். பகைவரிடமிருந்து பலமுறை தேவன் அவர்களைக் காத்தார் என்பதை அவர்கள் மறந்தார்கள். எகிப்தில் ஆண்டவர் நடத்திய அற்புதங்களையும், சோவானின் களங்களில் (வயல்களில்) நடந்த அற்புதங்களையும் அவர்கள் மறந்தார்கள். தேவன் ஆறுகளை இரத்தமாக்கினார். எகிப்தியர்கள் அந்த தண்ணீரைப் பருக முடியவில்லை. தேவன் கூட்டமாக வண்டுகளை அனுப்பினார், அவை எகிப்தியரைக் கடித்தன. தேவன் தவளைகளை அனுப்பினார். அவை எகிப்தியரின் வாழ்க்கையைக் கெடுத்தன. தேவன் அவர்கள் பயிர்களைப் புழு பூச்சிகளுக்குக் கொடுத்தார். அவர்களின் பிற தாவரங்களை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார். தேவன் அவர்களின் திராட்சைக் கொடிகளைக் கல்மழையால் அழித்தார். அவர்களின் மரங்களை அழிக்கப் பெருங்கல்மழையைப் பயன்படுத்தினார். கல்மழையால் தேவன் அவர்கள் விலங்குகளைக் கொன்றார். அவர்கள் மந்தைகள் (ஆடு, மாடுகள்) மின்னலால் தாக்குண்டு மடிந்தன. தேவன் எகிப்தியருக்கு அவரது கோபத்தைக் காண்பித்தார். அவர்களுக்கு எதிராக அழிக்கும் தேவதூதர்களை அனுப்பினார். தேவன் தமது கோபத்தைக் காட்ட ஒரு வழியைக் கண்டார். அவர் அந்த ஜனங்கள் வாழ அனுமதிக்கவில்லை. கொடிய நோயால் அவர்கள் மடியச் செய்தார். எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகளை தேவன் கொன்றார். காமின் குடும்பத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் அவர் கொன்றார். அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார். அவர் தமது ஜனங்களை மந்தைகளைப் போல் பாலைவனத்தினூடே வழிநடத்திச் சென்றார். அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழிகாட்டி நடத்தினார். தேவனுடைய ஜனங்கள் அஞ்ச வேண்டியது எதுவுமில்லை. தேவன் அவர்களது பகைவர்களைச் செங்கடலில் அமிழச் செய்தார். தேவன் அவரது ஜனங்களை அவரது பரிசுத்த தேசத்திற்கு வழிநடத்தினார். தமது வல்லமையால் எடுத்துக்கொண்ட மலைக்கு அவர்களை அழைத்துச் சென்றார். பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார். தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார். தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார். ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள். அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள். எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள். இஸ்ரவேலர் உயர்ந்த பீடங்களைக் கட்டி, தேவனை கோபமடையச் செய்தார்கள். அவர்கள் பொய் தெய்வங்களுக்குச் சிலைகளை எழுப்பி, தேவனை பொறாமை அடையச் செய்தார்கள். தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார். அவர் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளினார். தேவன் சீலோவிலுள்ள பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நீக்கினார். ஜனங்களோடு கூட தேவன் அக்கூடாரத்தில் வாழ்ந்திருந்தார். பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார். பகைவர்கள் தேவனுடைய “அழகிய நகையை” எடுத்துக்கொண்டார்கள். தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார். அவர்கள் போரில் கொல்லப்படும்படியாக அனுமதித்தார். இளைஞர்கள் மரணமடையும்படியாக எரிக்கப்பட்டார்கள். அவர்கள் மணக்க வேண்டிய இளம் பெண்கள் திருமணப்பாடல் எதையும் பாடவில்லை. ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை. இறுதியாக, தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப்போல நம் ஆண்டவர் எழுந்திருந்தார். அவர் மிகுதியாகத் திராட்சைரசத்தைப் பருகிய வீரனைப்போல காணப்பட்டார். தேவன் தமது பகைவர்களை பின்வாங்கச் செய்து, அவர்களை முறியடித்தார். தேவன் தமது பகைவர்களைத் தோற்கடித்து, என்றென்றும் அவர்கள் அவமானமுறும்படி செய்தார். ஆனால் தேவன் யோசேப்பின் குடும்பத்தை நிராகரித்தார். எப்பிராயீமின் குடும்பத்தாரை தேவன் ஏற்கவில்லை. இல்லை, தேவன் யூதாவின் கோத்திரத்தினரைத் தேர்ந்தெடுத்தார். தேவன், தாம் நேசிக்கும் சீயோன் மலையைத் தேர்ந்துக் கொண்டார். அம்மலையின் மேல் உயரத்தில் தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார். பூமியைப் போல என்றென்றும் இருக்கும்படியாக தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார். தனது விசேஷ பணியாளாக தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்தார். தாவீது ஆட்டுத் தொழுவங்களைக் காத்துக்கொண்டிருந்தான். ஆனால் தேவன் அவனை அப்பணியிலிருந்து அகற்றினார். தாவீது மந்தை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஆனால் தேவன் அவனை அவ்வேலையிலிருந்து அகற்றினார். தேவன் அவரது ஜனங்களைக் கவனிக்கும் வேலையை தாவீதுக்குக் கொடுத்தார். தேவனுடைய சொத்தாகிய யாக்கோபின் ஜனங்களையும் இஸ்ரவேலரின் ஜனங்களையும் கவனிக்கும் பொறுப்பை அவனுக்கு அளித்தார். தாவீது அவர்களை பரிசுத்த இருதயத்தோடும், மிகுந்த ஞானத்தோடும் வழிநடத்தினான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீத புத்தகம் 78:40-72