சங்கீதம் 71:15-24

சங்கீதம் 71:15-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்; உமது இரட்சிப்பின் செயல்களை நான் அறியாதிருந்த போதிலும், அதைப்பற்றி நாள்தோறும் என் வாய் சொல்லும். ஆண்டவராகிய யெகோவாவே, நான் உமது வல்லமையான செயல்களை எடுத்துச்சொல்வேன்; நான் உம்முடைய நீதியை மட்டுமே பிரசித்தம் பண்ணுவேன். இறைவனே, என் இளமையிலிருந்தே நீர் எனக்குப் போதித்திருக்கிறீர்; நான் உமது அற்புதமான செயல்களை இன்றுவரை அறிவித்து வருகிறேன். இறைவனே, வரப்போகும் எல்லோருக்கும் அடுத்த தலைமுறைக்கும் உமது ஆற்றலையும் உம்முடைய வல்லமையையும் அறிவிக்குமளவும் நான் முதிர்வயதாகும்போதும் என் தலைமுடி நரைக்கும்போதும், என்னைக் கைவிடாதேயும். பெரிய காரியங்களைச் செய்த இறைவனே, உமது நீதி ஆகாயங்களை எட்டுகிறது; இறைவனே, உம்மைப்போல் யாருண்டு? நீர் என்னை அநேக கசப்பான துன்பங்களையும் காணச் செய்திருந்தாலும் என் வாழ்வை மீண்டும் புதுப்பிப்பீர்; பூமியின் ஆழங்களில் இருந்து நீர் என்னை மறுபடியும் மேலே கொண்டுவருவீர். நீர் என் மேன்மையைப் பெருகப்பண்ணி, மீண்டும் என்னைத் தேற்றுவீர். என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி வீணை இசைத்து உம்மைத் துதிப்பேன்; இஸ்ரயேலின் பரிசுத்தரே, யாழ் இசைத்து நான் உமக்குத் துதி பாடுவேன். உம்மால் மீட்கப்பட்ட நான் உமக்குத் துதிபாடும்போது, என் உதடுகளும் கம்பீரித்து மகிழும். என் நாவு நாள்முழுவதும் உமது நீதியின் செயல்களைப் பற்றிச் சொல்லும்; ஏனெனில் எனக்குத் தீங்குசெய்ய விரும்பியவர்கள் வெட்கத்திற்கும் கலக்கத்திற்கும் உள்ளானார்கள்.

சங்கீதம் 71:15-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியவில்லை. யெகோவா ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன். தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும், வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை, முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக. தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர். என்னுடைய மேன்மையைப் பெருகச்செய்து, என்னை மறுபடியும் தேற்றுவீர். என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன். நான் பாடும்போது என்னுடைய உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும். எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால், நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

சங்கீதம் 71:15-24 பரிசுத்த பைபிள் (TAERV)

நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன். நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன். எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன. என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன். உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன். தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர். இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன். இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது. ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன். உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன். தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது. தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை. நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர். ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர். எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர். முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும். தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும். வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன். என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன். இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக, என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன். நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும். என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன். எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும். என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.

சங்கீதம் 71:15-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன். கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மை பாராட்டுவேன். தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்து வந்தேன். இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக. தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர். என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர். என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும், உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன். நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும். எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.