சங்கீதம் 71:15-24

சங்கீதம் 71:15-24 TCV

எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்; உமது இரட்சிப்பின் செயல்களை நான் அறியாதிருந்த போதிலும், அதைப்பற்றி நாள்தோறும் என் வாய் சொல்லும். ஆண்டவராகிய யெகோவாவே, நான் உமது வல்லமையான செயல்களை எடுத்துச்சொல்வேன்; நான் உம்முடைய நீதியை மட்டுமே பிரசித்தம் பண்ணுவேன். இறைவனே, என் இளமையிலிருந்தே நீர் எனக்குப் போதித்திருக்கிறீர்; நான் உமது அற்புதமான செயல்களை இன்றுவரை அறிவித்து வருகிறேன். இறைவனே, வரப்போகும் எல்லோருக்கும் அடுத்த தலைமுறைக்கும் உமது ஆற்றலையும் உம்முடைய வல்லமையையும் அறிவிக்குமளவும் நான் முதிர்வயதாகும்போதும் என் தலைமுடி நரைக்கும்போதும், என்னைக் கைவிடாதேயும். பெரிய காரியங்களைச் செய்த இறைவனே, உமது நீதி ஆகாயங்களை எட்டுகிறது; இறைவனே, உம்மைப்போல் யாருண்டு? நீர் என்னை அநேக கசப்பான துன்பங்களையும் காணச் செய்திருந்தாலும் என் வாழ்வை மீண்டும் புதுப்பிப்பீர்; பூமியின் ஆழங்களில் இருந்து நீர் என்னை மறுபடியும் மேலே கொண்டுவருவீர். நீர் என் மேன்மையைப் பெருகப்பண்ணி, மீண்டும் என்னைத் தேற்றுவீர். என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி வீணை இசைத்து உம்மைத் துதிப்பேன்; இஸ்ரயேலின் பரிசுத்தரே, யாழ் இசைத்து நான் உமக்குத் துதி பாடுவேன். உம்மால் மீட்கப்பட்ட நான் உமக்குத் துதிபாடும்போது, என் உதடுகளும் கம்பீரித்து மகிழும். என் நாவு நாள்முழுவதும் உமது நீதியின் செயல்களைப் பற்றிச் சொல்லும்; ஏனெனில் எனக்குத் தீங்குசெய்ய விரும்பியவர்கள் வெட்கத்திற்கும் கலக்கத்திற்கும் உள்ளானார்கள்.