சங்கீதம் 69:1-36

சங்கீதம் 69:1-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப் போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்க வேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்க வேண்டியதாயிற்று. தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக. உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று. என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது. என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது. இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன். வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம் பண்ணுகிறவர்களின் பாடலானேன். ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும். நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும். ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக் கொள்ளாமலும் இருப்பதாக. கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும். உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும். நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும். தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன். என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது. அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும். உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக. அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக. தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே. அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக. ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப் போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும். கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிறயாவும் அவரைத் துதிக்கக்கடவது. தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.

சங்கீதம் 69:1-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவனே, என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் என் கழுத்துமட்டும் வந்துவிட்டது. கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்; ஆழமான வெள்ளத்தில் நான் அகப்பட்டு விட்டேன்; வெள்ளம் என்னை மூடுகிறது. சத்தமிட்டுக் கூப்பிட்டு நான் களைத்துப் போனேன்; என் தொண்டையும் வறண்டுபோயிற்று; என் இறைவனைத் தேடி என் கண்கள் மங்கிப்போயின. காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள் என் தலைமுடியைவிட அதிகமாய் இருக்கிறார்கள்; அநேகர் காரணமில்லாமல் எனக்குப் பகைவர்களாய் இருக்கிறார்கள்; அவர்கள் என்னை அழிக்கத் தேடுகிறார்கள். நான் திருடாததைத் திருப்பிக் கொடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறேன். இறைவனே, என் புத்தியீனத்தை நீர் அறிந்திருக்கிறீர்; என் குற்றம் உமக்கு மறைக்கப்பட்டிருக்கவில்லை. சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என் நிமித்தம் அவமானம் அடையாதிருப்பார்களாக; இஸ்ரயேலின் இறைவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என் நிமித்தம் வெட்கம் அடையாதிருப்பார்களாக. உமக்காக நான் நிந்தையை சகித்திருக்கிறேன்; வெட்கம் என் முகத்தை மூடியிருக்கிறது நான் என் சகோதரர்களுக்கு வேறுநாட்டைச் சேர்ந்தவனாகவும் என் சொந்தத் தாயின் மகன்களுக்கு அறியாதவனாகவும் இருக்கிறேன். ஏனெனில் உமது ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் என்னை எரித்துவிடுகிறது; உம்மை இகழ்கிறவர்களின் இகழ்ச்சி என்மேல் விழுகிறது. நான் அழுது உபவாசித்தபோது, அவர்கள் என்னை நிந்தித்தார்கள். நான் துக்கவுடை உடுத்தும் போது, அவர்களுக்குப் பழமொழியானேன். நகர வாசலில் அமர்ந்திருக்கிறவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்; நான் குடிகாரரின் பாடலாக இருக்கிறேன். ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே, நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் நிச்சயமான உமது மீட்பைத் தந்து பதிலளியும். சேற்றிலிருந்து என்னைத் தப்புவியும், என்னை மூழ்கிப்போக விடாதேயும்; என்னை வெறுக்கிறவர்களிடம் இருந்தும் ஆழ்கடலினின்றும் என்னை விடுவியும். வெள்ளப்பெருக்கு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்; ஆழங்கள் என்னை விழுங்க விடாதேயும்; சவக்குழி என்மீது தன் வாயை மூடிக்கொள்ள விடாதேயும். யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது; உமது பெரிதான இரக்கத்தால் என்னிடம் திரும்பும். உமது முகத்தை அடியேனுக்கு மறையாதிரும், விரைவாய் எனக்குப் பதில் தாரும்; நான் துயரத்தில் இருக்கிறேன். என்னருகே வந்து என்னைத் தப்புவியும்; என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும். என் நிந்தையும் என் அவமானமும் என் இழிவும் உமக்குத் தெரியும்; என் பகைவர் எல்லோருமே உமக்கு முன்பாக இருக்கிறார்கள். நிந்தை என் உள்ளத்தை நொறுக்கியதால் நான் களைத்துப் போனேன். நான் அனுதாபத்தைத் தேடினேன், அது கிடைக்கவில்லை; ஆறுதல்படுத்துகிறவர்களைத் தேடினேன், ஆனால் ஒருவரையும் நான் காணவில்லை. அவர்கள் என் உணவில் கசப்பான நஞ்சைக் கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் குடிக்க எனக்கு காடியைக் கொடுத்தார்கள். அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும் அவர்களுடைய செல்வம் அவர்களுக்குப் பொறியாயும் இருப்பதாக. அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும், அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும். உமது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உமது சினம் அவர்களைப் பின்தொடர்வதாக. அவர்களுடைய இருப்பிடங்கள் பாழடைவதாக; அவர்களுடைய கூடாரங்களில் யாரும் குடியேறாதிருப்பார்களாக. ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி, நீர் காயப்படுத்தியவர்களின் வேதனையைக் குறித்து தூற்றிப் பேசுகிறார்கள். அவர்களுடைய அநீதியின்மேல் அநீதியை சுமத்தும்; அவர்கள் உமது இரட்சிப்பில் பங்குபெற இடமளியாதேயும். வாழ்வின் புத்தகத்திலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுப் போவார்களாக; நீதிமான்களின் பெயர்ப்பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படாதிருப்பார்களாக. நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்; இறைவனே, உமது இரட்சிப்பு என்னைப் பாதுகாப்பதாக. நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன். காணிக்கையாகக் கொடுக்கும் கொம்பும், விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, மகிமைப்படுத்துவதே யெகோவாவுக்கு அதிக மகிழ்வைக் கொடுக்கும். இதைக்கண்டு ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள்; இறைவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழ்வடைவதாக! யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்; சிறைப்பட்ட தமது மக்களை அவர் இழிவாகக் கருதுவதில்லை. வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்; கடலும் அவற்றில் வாழும் அனைத்தும் அவரைத் துதிக்கட்டும். இறைவன் சீயோனை மீட்டு, யூதாவின் பட்டணங்களை மீண்டும் கட்டுவார்; அப்பொழுது அவருடைய மக்கள் அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள். அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்; அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அங்கே குடியிருப்பார்கள்.

சங்கீதம் 69:1-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனே, என்னைக் காப்பாற்றும்; வெள்ளங்கள் என்னுடைய ஆத்துமாவரை பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, ஆழமான தண்ணீரில் இருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என்னுடைய தொண்டை வறண்டுபோனது; என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது, என்னுடைய கண்கள் பூத்துப்போனது. காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்; வீணாக எனக்கு எதிரிகளாகி என்னை அழிக்கவேண்டும் என்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதானது. தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என்னுடைய குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னால் வெட்கப்பட்டுப் போகாமலிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் வெட்கமடையாதிருப்பார்களாக. உமக்காக நிந்தையைச் சகித்தேன்; அவமானம் என்னுடைய முகத்தை மூடினது. என்னுடைய சகோதரர்களுக்கு வேற்று மனிதனும், என்னுடைய தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது. என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாக முடிந்தது. சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன். வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்; மதுபானம் குடிக்கிறவர்களின் பாடலானேன். ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும். நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களிடத்திலிருந்தும் ஆழமான தண்ணீர்களில் இருந்தும் நான் நீங்கும்படி செய்யும். வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன்னுடைய வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக. யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கண்ணோக்கியருளும். உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாகச் செவிகொடுத்தருளும். நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைசெய்யும்; என்னுடைய எதிரிகளுக்காக என்னை மீட்டுவிடும். தேவனே நீர் என்னுடைய நிந்தையையும் என்னுடைய வெட்கத்தையும் என்னுடைய அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என்னுடைய எதிரிகள் எல்லோரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனும் இல்லை. என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், என்னுடைய தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும். அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடச்செய்யும். உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக. அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக. தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே. அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக. ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பெயரோடே அவர்கள் பெயர் எழுதப்படாதிருப்பதாக. நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, அவரை நன்றி சொல்லி மகிமைப்படுத்துவேன். கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, இதுவே யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கும். சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இருதயம் வாழும். யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணிக்கமாட்டார். வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும். தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள். அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்; அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அதில் குடியிருப்பார்கள்.

சங்கீதம் 69:1-36 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனே, எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னைக் காப்பாற்றும். என் வாய்வரை வெள்ளம் நிரம்பியுள்ளது. நான் நிற்பதற்கு இடமில்லை. சேற்றுக்குள் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன். ஆழமான தண்ணீரினுள் இருக்கிறேன். அலைகள் என்னைச் சுற்றிலும் மோதிக்கொண்டிருக்கின்றன. நான் அமிழும் நிலையில் உள்ளேன். உதவி வேண்டிக் கூப்பிடுவதால் நான் சோர்ந்து போகிறேன். என் தொண்டை புண்ணாகிவிட்டது. நான் காத்திருக்கிறேன், என் கண்கள் நோகும்வரை உமது உதவிக்காக நோக்கியிருக்கிறேன். என் தலையின் முடிகளைக் காட்டிலும் எனக்கு அதிகமான பகைவர்கள் இருக்கிறார்கள். எக்காரணமுமின்றி அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். என்னை அழிப்பதற்கு அவர்கள் மிகவும் முயன்றார்கள். என் பகைவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைப் பேசுகிறார்கள். நான் திருடியதாக அவர்கள் பொய்களைக் கூறினார்கள். நான் திருடாத பொருள்களுக்கு அபராதம் செலுத்தும்படி அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். தேவனே, என் பாவங்களை நீர் அறிவீர். நான் உம்மிடமிருந்து எனது பாவங்களை மறைக்க முடியாது. என் ஆண்டவரே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைக் கண்டு வெட்கப்படாதபடி செய்யும். இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தொழுதுகொள்வோர் என்னால் அவமானப்படாதபடிச் செய்யும். என் முகம் வெட்கத்தால் மூடப்பட்டிருக்கிறது. உமக்காக இவ்வெட்கத்தை நான் சுமக்கிறேன். என் சகோதரர்கள் என்னை ஒரு அந்நியனைப் போல நடத்துகிறார்கள். என் தாயின் பிள்ளைகள் என்னை ஒரு அயல் நாட்டவனைப்போல நடத்துகிறார்கள். உமது ஆலயத்தின் மீது கொண்ட என் ஆழ்ந்த உணர்ச்சிகள் என்னை அழித்துக் கொண்டிருக்கின்றன. உம்மைக் கேலி செய்யும் ஜனங்களின் அவதூறுகளை நான் ஏற்கிறேன். நான் அழுது, உபவாசம் மேற்கொண்டேன். அவர்கள் என்னைக் கேலி செய்தார்கள். துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முரட்டு ஆடைகளை உடுத்துகிறேன். ஜனங்கள் என்னைக் குறித்து வேடிக்கை பேசுகிறார்கள். பொது இடங்களில் அவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். குடிக்காரர்கள் என்னைப்பற்றிப் பாடல்களைப் பாடுகிறார்கள். ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம். நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். தேவனே, அன்போடு நீர் எனக்குப் பதில் அளிப்பீரென எதிர்ப்பார்க்கிறேன். நான் மீட்படைவதற்கு உம்மீது நம்பிக்கை வைக்க முடியுமென நான் அறிவேன். என்னைச் சேற்றிலிருந்து இழுத்து வெளியேற்றும். நான் சேற்றில் அமிழ்ந்து போகாதபடி செய்யும். என்னைப் பகைக்கும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். ஆழமான தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும். அலைகள் என்னை அமிழ்த்தாதபடிச் செய்யும். ஆழத்தின் குழி என்னை விழுங்காதபடிச் செய்யும். கல்லறை என் மீது தன் வாயை அடைத்துக்கொள்ளாதபடிச் செய்யும். கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும். உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்! உமது பணியாளிடமிருந்து விலகிப் போய்விடாதேயும். நான் தொல்லையில் சிக்கியிருக்கிறேன்! விரைந்து எனக்கு உதவும். வந்து, என் ஆத்துமாவைக் காப்பாற்றும். என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும். நான் அடைந்த வெட்கத்தை நீர் அறிந்திருக்கிறீர். என் பகைவர்கள் என்னை அவமானப்படுத்தியதை நீர் அறிகிறீர். அவர்கள் எனக்கு அக்காரியங்களைச் செய்ததை நீர் கண்டீர். வெட்கம் என்னை நசுக்கிற்று! வெட்கத்தால் நான் இறக்கும் நிலைக்கு ஆளானேன். எனக்காகப் பரிதபிப்பவர்களுக்காகக் காத்திருந்தேன். ஆனால் ஒருவரையும் நான் பார்க்க முடியவில்லை. எனக்கு ஆறுதல் கூறுவோருக்காக நான் காத்திருந்தேன். ஆனால் ஒருவரும் வரவில்லை. அவர்கள் எனக்கு உணவையல்ல, விஷத்தைக் கொடுத்தார்கள். அவர்கள் எனக்குத் திராட்சை ரசத்தையல்ல, காடியைக் கொடுத்தார்கள். அவர்கள் மேசைகள் உணவால் நிரம்பியிருந்தன. ஐக்கிய பந்திக்கான உணவு வகைகள் நிரம்பியிருந்தன. அந்த உணவுகளே அவர்களை அழிக்குமென நம்புகிறேன். அவர்கள் குருடாகி, அவர்கள் முதுகுகள் தளர்ந்துபோகும் என நான் நம்புகிறேன். உமது கோபத்தை அவர்கள் உணரட்டும். அவர்கள் வீடுகள் வெறுமையடையச் செய்யும். யாரும் அங்கு வாழவிடாதேயும். அவர்களைத் தண்டியும், அவர்கள் ஓடிப் போவார்கள். அப்போது அவர்கள் பேசிக்கொள்ளும்படியாக அவர்களுக்கு வலியும் காயங்களும் உண்டாகும். அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களைத் தண்டியும். நீர் எவ்வளவு நல்லவர் என்பதை அவர்களுக்குக் காட்டாதேயும். ஜீவ புத்தகத்திலிருந்து அவர்கள் பெயர்களை எடுத்துப்போடும். நல்லோரின் பெயர்களோடு அவர்கள் பெயர்களை அப்புத்தகத்தில் எழுதாதேயும். நான் கவலையும் புண்பட்டவனுமானேன். தேவனே, என்னைத் தூக்கிவிடும், என்னைக் காப்பாற்றும். நான் தேவனுடைய நாமத்தைப் பாடல்களால் துதிப்பேன். நான் அவரை நன்றி நிறைந்த பாடல்களால் துதிப்பேன். இது தேவனை சந்தோஷப்படுத்தும்! ஒரு காளையைக் கொன்று, அதனை முழுமையாகப் பலி செலுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது. ஏழை ஜனங்களே, நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ள வந்தீர்கள். நீங்கள் இக்காரியங்களை அறிந்துக்கொண்டு மகிழ்வீர்கள். கர்த்தர் ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் செவிசாய்க்கிறார். சிறைப்பட்ட ஜனங்களையும் கர்த்தர் விரும்புகிறார். பரலோகமும், பூமியும் தேவனைத் துதிக்கட்டும். கடலும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிக்கட்டும். கர்த்தர் சீயோனை மீட்பார். கர்த்தர் யூதாவின் நகரங்களை கட்டியெழுப்புவார். நிலத்தின் சொந்தக்காரர்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள். அவரது பணியாட்களின் தலைமுறையினர் அத்தேசத்தைப் பெறுவார்கள். அவரது நாமத்தை நேசிக்கும் ஜனங்கள் அங்கு வாழ்வார்கள்.