சங்கீத புத்தகம் 69
69
“லீலிப் பூக்கள்” என்ற இசையில் பாடும்படி இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்.
1தேவனே, எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என் வாய்வரை வெள்ளம் நிரம்பியுள்ளது.
2நான் நிற்பதற்கு இடமில்லை.
சேற்றுக்குள் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன்.
ஆழமான தண்ணீரினுள் இருக்கிறேன்.
அலைகள் என்னைச் சுற்றிலும் மோதிக்கொண்டிருக்கின்றன.
நான் அமிழும் நிலையில் உள்ளேன்.
3உதவி வேண்டிக் கூப்பிடுவதால் நான் சோர்ந்து போகிறேன்.
என் தொண்டை புண்ணாகிவிட்டது.
நான் காத்திருக்கிறேன், என் கண்கள் நோகும்வரை
உமது உதவிக்காக நோக்கியிருக்கிறேன்.
4என் தலையின் முடிகளைக் காட்டிலும் எனக்கு அதிகமான பகைவர்கள் இருக்கிறார்கள்.
எக்காரணமுமின்றி அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
என்னை அழிப்பதற்கு அவர்கள் மிகவும் முயன்றார்கள்.
என் பகைவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைப் பேசுகிறார்கள்.
நான் திருடியதாக அவர்கள் பொய்களைக் கூறினார்கள்.
நான் திருடாத பொருள்களுக்கு அபராதம் செலுத்தும்படி அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள்.
5தேவனே, என் பாவங்களை நீர் அறிவீர்.
நான் உம்மிடமிருந்து எனது பாவங்களை மறைக்க முடியாது.
6என் ஆண்டவரே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைக் கண்டு வெட்கப்படாதபடி செய்யும்.
இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தொழுதுகொள்வோர் என்னால் அவமானப்படாதபடிச் செய்யும்.
7என் முகம் வெட்கத்தால் மூடப்பட்டிருக்கிறது.
உமக்காக இவ்வெட்கத்தை நான் சுமக்கிறேன்.
8என் சகோதரர்கள் என்னை ஒரு அந்நியனைப் போல நடத்துகிறார்கள்.
என் தாயின் பிள்ளைகள் என்னை ஒரு அயல் நாட்டவனைப்போல நடத்துகிறார்கள்.
9உமது ஆலயத்தின் மீது கொண்ட என் ஆழ்ந்த உணர்ச்சிகள் என்னை அழித்துக் கொண்டிருக்கின்றன.
உம்மைக் கேலி செய்யும் ஜனங்களின் அவதூறுகளை நான் ஏற்கிறேன்.
10நான் அழுது, உபவாசம் மேற்கொண்டேன்.
அவர்கள் என்னைக் கேலி செய்தார்கள்.
11துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முரட்டு ஆடைகளை உடுத்துகிறேன்.
ஜனங்கள் என்னைக் குறித்து வேடிக்கை பேசுகிறார்கள்.
12பொது இடங்களில் அவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.
குடிக்காரர்கள் என்னைப்பற்றிப் பாடல்களைப் பாடுகிறார்கள்.
13ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம்.
நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
தேவனே, அன்போடு நீர் எனக்குப் பதில் அளிப்பீரென எதிர்ப்பார்க்கிறேன்.
நான் மீட்படைவதற்கு உம்மீது நம்பிக்கை வைக்க முடியுமென நான் அறிவேன்.
14என்னைச் சேற்றிலிருந்து இழுத்து வெளியேற்றும்.
நான் சேற்றில் அமிழ்ந்து போகாதபடி செய்யும்.
என்னைப் பகைக்கும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
ஆழமான தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
15அலைகள் என்னை அமிழ்த்தாதபடிச் செய்யும்.
ஆழத்தின் குழி என்னை விழுங்காதபடிச் செய்யும்.
கல்லறை என் மீது தன் வாயை அடைத்துக்கொள்ளாதபடிச் செய்யும்.
16கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும்.
உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்!
17உமது பணியாளிடமிருந்து விலகிப் போய்விடாதேயும்.
நான் தொல்லையில் சிக்கியிருக்கிறேன்!
விரைந்து எனக்கு உதவும்.
18வந்து, என் ஆத்துமாவைக் காப்பாற்றும்.
என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
19நான் அடைந்த வெட்கத்தை நீர் அறிந்திருக்கிறீர்.
என் பகைவர்கள் என்னை அவமானப்படுத்தியதை நீர் அறிகிறீர்.
அவர்கள் எனக்கு அக்காரியங்களைச் செய்ததை நீர் கண்டீர்.
20வெட்கம் என்னை நசுக்கிற்று!
வெட்கத்தால் நான் இறக்கும் நிலைக்கு ஆளானேன்.
எனக்காகப் பரிதபிப்பவர்களுக்காகக் காத்திருந்தேன்.
ஆனால் ஒருவரையும் நான் பார்க்க முடியவில்லை.
எனக்கு ஆறுதல் கூறுவோருக்காக நான் காத்திருந்தேன்.
ஆனால் ஒருவரும் வரவில்லை.
21அவர்கள் எனக்கு உணவையல்ல, விஷத்தைக் கொடுத்தார்கள்.
அவர்கள் எனக்குத் திராட்சை ரசத்தையல்ல, காடியைக் கொடுத்தார்கள்.
22அவர்கள் மேசைகள் உணவால் நிரம்பியிருந்தன.
ஐக்கிய பந்திக்கான உணவு வகைகள் நிரம்பியிருந்தன.
அந்த உணவுகளே அவர்களை அழிக்குமென நம்புகிறேன்.
23அவர்கள் குருடாகி, அவர்கள் முதுகுகள் தளர்ந்துபோகும் என நான் நம்புகிறேன்.
24உமது கோபத்தை அவர்கள் உணரட்டும்.
25அவர்கள் வீடுகள் வெறுமையடையச் செய்யும்.
யாரும் அங்கு வாழவிடாதேயும்.
26அவர்களைத் தண்டியும், அவர்கள் ஓடிப் போவார்கள்.
அப்போது அவர்கள் பேசிக்கொள்ளும்படியாக அவர்களுக்கு வலியும் காயங்களும் உண்டாகும்.
27அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை அவர்களுக்குக் காட்டாதேயும்.
28ஜீவ புத்தகத்திலிருந்து அவர்கள் பெயர்களை எடுத்துப்போடும்.
நல்லோரின் பெயர்களோடு அவர்கள் பெயர்களை அப்புத்தகத்தில் எழுதாதேயும்.
29நான் கவலையும் புண்பட்டவனுமானேன்.
தேவனே, என்னைத் தூக்கிவிடும், என்னைக் காப்பாற்றும்.
30நான் தேவனுடைய நாமத்தைப் பாடல்களால் துதிப்பேன்.
நான் அவரை நன்றி நிறைந்த பாடல்களால் துதிப்பேன்.
31இது தேவனை சந்தோஷப்படுத்தும்!
ஒரு காளையைக் கொன்று, அதனை முழுமையாகப் பலி செலுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது.
32ஏழை ஜனங்களே, நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ள வந்தீர்கள்.
நீங்கள் இக்காரியங்களை அறிந்துக்கொண்டு மகிழ்வீர்கள்.
33கர்த்தர் ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் செவிசாய்க்கிறார்.
சிறைப்பட்ட ஜனங்களையும் கர்த்தர் விரும்புகிறார்.
34பரலோகமும், பூமியும் தேவனைத் துதிக்கட்டும்.
கடலும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிக்கட்டும்.
35கர்த்தர் சீயோனை மீட்பார்.
கர்த்தர் யூதாவின் நகரங்களை கட்டியெழுப்புவார்.
நிலத்தின் சொந்தக்காரர்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள்.
36அவரது பணியாட்களின் தலைமுறையினர் அத்தேசத்தைப் பெறுவார்கள்.
அவரது நாமத்தை நேசிக்கும் ஜனங்கள் அங்கு வாழ்வார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங்கீத புத்தகம் 69: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International