சங்கீதம் 66:1-20

சங்கீதம் 66:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்! அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள். இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! உமது வல்லமை பெரிதானது; அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள், அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.” இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை. அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; வாருங்கள், அவரில் களிகூருவோம். அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும். எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக. அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார். இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர். எங்களைச் சிறைபிடித்து, எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர். மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர். நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். நான் துன்பத்திலிருந்தபோது என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன். நான் கொழுத்த மிருகங்களையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்; நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன். இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவருடைய துதி என் நாவில் இருந்தது. என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்; இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, என் மன்றாட்டின் குரலைக் கேட்டார். என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.

சங்கீதம் 66:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாகப் பாடுங்கள். அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய பெயரைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா) தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர். கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம். அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா) மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள். அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார். தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். எங்களை வலையில் அகப்படுத்தி, எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர். சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்; என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து, என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா) தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்; அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார். என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார். மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும்.

சங்கீதம் 66:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)

பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும். அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்! துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்! அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்! தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது! உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள். அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள். உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும். ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும். தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்! அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும். தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார். மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள். தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார். எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார். ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது. ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள், உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள். தேவன் நமக்கு உயிரைத் தந்தார். தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார். ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார். தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர். கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர். எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர். நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர். ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர். எனவே நான் உமது ஆலயத்திற்குப் பலிகளைக் கொண்டுவருவேன். நான் தொல்லையில் சிக்குண்டபோது உதவிக்காக உம்மைக் கேட்டேன். உமக்குப் பல பொருத்தனைகளைப் பண்ணினேன். இப்போது, நான் பொருத்தனைப் பண்ணினதை உமக்குக் கொடுக்கிறேன். நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன். நான் ஆட்டுக்கடாக்களோடு நறுமணப்பொருட்களைப் புகையிடுவேன். நான் உமக்குக் காளைகளையும் செம்மறி ஆடுகளையும் தருவேன். தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள். தேவன் எனக்குச் செய்தவற்றை உங்களுக்குக் கூறுவேன். நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன். என் இருதயம் தூய்மையாயிருந்தது. எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார். தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார். தேவன் என் ஜெபத்தைக் கேட்டார். தேவனைத் துதியுங்கள், தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார். தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார்.

சங்கீதம் 66:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள். பூமியின்மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா) தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர். கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம். அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா) ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ் சத்தத்தைக் கேட்கப் பண்ணுங்கள். அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்துவிட்டீர். சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்; என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா) தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார். என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். மெய்யாய்த் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்