சங்கீதம் 66:1-20

சங்கீதம் 66:1-20 TCV

பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்! அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள். இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! உமது வல்லமை பெரிதானது; அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள், அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.” இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை. அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; வாருங்கள், அவரில் களிகூருவோம். அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும். எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக. அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார். இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர். எங்களைச் சிறைபிடித்து, எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர். மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர். நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். நான் துன்பத்திலிருந்தபோது என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன். நான் கொழுத்த மிருகங்களையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்; நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன். இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவருடைய துதி என் நாவில் இருந்தது. என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்; இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, என் மன்றாட்டின் குரலைக் கேட்டார். என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.