சங்கீதம் 55:16-23
சங்கீதம் 55:16-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்; யெகோவா என்னைக் காப்பாற்றுவார். மாலையிலும் காலையிலும் மத்தியான வேளையிலும் நான் துயரத்தால் முறையிடுவேன்; அவர் என் குரலைக் கேட்பார். பலர் என்னை எதிர்த்தபோதும், எனக்கு விரோதமாய் நடத்தப்படும் யுத்தத்தில் இருந்து அவர் என்னைத் தீங்கின்றி மீட்டுக்கொண்டார். சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு, அவர்களைத் தாழ்த்திவிடுவார்; அவர்கள் இறைவனுக்குப் பயப்படவும் இல்லை, ஒருபோதும் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவுமில்லை. என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்; அவன் தன் உடன்படிக்கையையும் மீறுகிறான். அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது, ஆனாலும் அவனுடைய இருதயத்தில் யுத்தம் மறைந்திருக்கிறது; அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைப் பார்க்கிலும் மென்மையானவை, ஆனாலும் அவை கூர்மையான வாள்களைப்போல் இருக்கின்றன. உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்; அவர் உங்களைத் தாங்குவார்; நீதிமான்களை அவர் ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார். ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்த வெறியரும் ஏமாற்றுக்காரர்களும் தங்கள் ஆயுளின் பாதிநாட்கள்கூட உயிர் வாழமாட்டார்கள்.
சங்கீதம் 55:16-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; யெகோவா என்னை காப்பாற்றுவார். காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்; அவர் என்னுடைய சத்தத்தைக் கேட்பார். திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி, என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்படாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா) அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத் தன்னுடைய கையை நீட்டி தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான். அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவனுடைய இருதயமோ யுத்தம்; அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார். தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்; இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 55:16-23 பரிசுத்த பைபிள் (TAERV)
உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன். கர்த்தர் எனக்குப் பதில் தருவார். நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன். என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்! நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன். ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார். தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார். நித்திய ராஜா எனக்கு உதவுவார். என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள். அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள். என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள். அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள். என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள். அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை. ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை. உங்கள் கவலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்கு கர்த்தர் அனுமதியார். உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்! உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன்.
சங்கீதம் 55:16-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார். அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார். திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற் போகிறார்கள். (சேலா) அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான். அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும், சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதி வரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.