சங்கீதம் 55:16-23

சங்கீதம் 55:16-23 TCV

நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்; யெகோவா என்னைக் காப்பாற்றுவார். மாலையிலும் காலையிலும் மத்தியான வேளையிலும் நான் துயரத்தால் முறையிடுவேன்; அவர் என் குரலைக் கேட்பார். பலர் என்னை எதிர்த்தபோதும், எனக்கு விரோதமாய் நடத்தப்படும் யுத்தத்தில் இருந்து அவர் என்னைத் தீங்கின்றி மீட்டுக்கொண்டார். சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு, அவர்களைத் தாழ்த்திவிடுவார்; அவர்கள் இறைவனுக்குப் பயப்படவும் இல்லை, ஒருபோதும் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவுமில்லை. என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்; அவன் தன் உடன்படிக்கையையும் மீறுகிறான். அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது, ஆனாலும் அவனுடைய இருதயத்தில் யுத்தம் மறைந்திருக்கிறது; அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைப் பார்க்கிலும் மென்மையானவை, ஆனாலும் அவை கூர்மையான வாள்களைப்போல் இருக்கின்றன. உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்; அவர் உங்களைத் தாங்குவார்; நீதிமான்களை அவர் ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார். ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்த வெறியரும் ஏமாற்றுக்காரர்களும் தங்கள் ஆயுளின் பாதிநாட்கள்கூட உயிர் வாழமாட்டார்கள்.