சங்கீதம் 45:5-17

சங்கீதம் 45:5-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உமது கூர்மையான அம்புகள் அரசனின் பகைவருடைய இருதயத்திற்குள் பாயட்டும்; நாடுகள் உமது பாதத்தின்கீழ் வீழ்ச்சியடையட்டும். இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்; நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்; ஆகையால் இறைவனே, உமது இறைவன் உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து, உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார். உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கம் ஆகியவற்றின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது. யானைத் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகளிலிருந்து வரும், கம்பியிசைக் கருவிகளின் இசை உம்மை மகிழ்விக்கிறது. உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள். அரச மணமகளோ, ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள். மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி: உன் மக்களையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அரசர் உன் அழகில் பிரியப்படுவார்; அவரே உனது யெகோவா, ஆதலால் அவரை கனம்பண்ணு. தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்; செல்வந்தர் உன் தயவை நாடுவார்கள். இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்; அவளுடைய உடை தங்கச் சரிகையாயிருக்கிறது. அவள் அலங்கார வேலைப்பாடு கொண்ட உடைகளோடு அரசனிடம் அழைத்துச் செல்லப்படுகிறாள்; அவளுடைய தோழியர்களாகிய கன்னியர்கள் அவளைத் தொடர்ந்து உம்மிடம் அழைத்து வருகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் அவர்கள் அரசனின் அரண்மனைக்குள் வருகிறார்கள். உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்; அவர்களை நீர் நாடு முழுவதிலும் இளவரசர்களாகும்படி செய்வீர். நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும் உம்மைக் குறித்த நினைவுகளை நிலைபெறச் செய்வேன்; அதினால் மக்கள் கூட்டம் உம்மை என்றென்றைக்கும் துதிப்பார்கள்.

சங்கீதம் 45:5-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும். உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார். தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது, நீர் மகிழும்படி உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது. உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு, இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள். மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்; அவர் உன்னுடைய ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள். தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்; மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள். இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவளுடைய உடை பொற்சரிகையாக இருக்கிறது. வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக, ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து, ராஜ அரண்மனைக்குள் நுழைவார்கள். உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர். உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்; இதற்காக மக்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் துதிப்பார்கள்.

சங்கீதம் 45:5-17 பரிசுத்த பைபிள் (TAERV)

உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன. நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது ராஜாவாயிரும். தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும். நன்மையே உமது செங்கோலாகும். நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர். எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை ராஜாவாக்கினார். வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும். தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும். மணத்தோழியரே ராஜாவின் குமாரத்திகள் ஆவர். உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள். மகளே, கேள், கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய். உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு. ராஜா உன் அழகை விரும்புகிறார். அவர் உன் புது மணமகன். நீ அவரைப் பெருமைப்படுத்துவாய். தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள். அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள். அரச குமாரத்தி பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள். மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள். மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர். அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர். மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர். ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள். தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர். உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன். என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.

சங்கீதம் 45:5-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள். தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார். தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது. உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள். குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள். தீரு குமாரத்தி காணிக்கை கொண்டு வருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள். ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள். உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர். உமது நாமத்தை எல்லாத் தலை முறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.