சங்கீதம் 44:1-26
சங்கீதம் 44:1-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனே, வெகுகாலத்திற்குமுன் எங்கள் முன்னோர்களின் நாட்களில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்; அவற்றை நாங்கள் எங்கள் காதுகளால் கேட்டிருக்கிறோம். நீர் உமது கரத்தால் நாடுகளை வெளியே துரத்தி, எங்கள் முன்னோர்களைக் குடியமர்த்தினீர்; நீர் அந்நாட்டினரை தண்டித்து, எங்கள் முன்னோரைச் செழிக்கப் பண்ணினீர். அவர்கள் தங்கள் வாளினால் நாட்டை உடைமையாக்கவும் இல்லை, அவர்களுடைய புயத்தால் அவர்கள் வெற்றிகொள்ளவும் இல்லை; நீர் அவர்களில் பிரியம் கொள்வதினால் உமது வலதுகரமும் உமது வலிய புயமும் உமது முகத்தின் ஒளியுமே வெற்றிகொள்ளச் செய்தது. இறைவனே, நீரே என் அரசன்; யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே. உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி, உமது பெயராலே எங்கள் எதிரிகளை மிதிப்போம். என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை, என் வாள் வெற்றியைக் கொடுப்பதில்லை; ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து, எங்கள் விரோதிகளை வெட்கப்படுத்துகிறீர். நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்; நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம். இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்; நீர் எங்கள் இராணுவத்துடன் செல்வதுமில்லை. எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்; எங்கள் விரோதிகள் எங்களைச் சூறையாடி விட்டார்கள். செம்மறியாடுகளைப்போல் நீர் எங்களை இரையாகக் விட்டுக்கொடுத்தீர்; நாடுகளுக்கு மத்தியில் எங்களைச் சிதறடித்தீர். நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்; அவர்களை எவ்வித இலாபமுமின்றி விற்றுப்போட்டீரே. எங்கள் அயலவருக்கு எங்களை ஒரு நிந்தையாக்கி விட்டீர்; எங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு எங்களை இகழ்ச்சியும் ஏளனமும் ஆக்கினீர். நீர் எங்களைப் நாடுகளுக்கு நடுவில் ஒரு பழமொழியாக ஆக்கினீர்; மக்கள் கூட்டம் எங்களைப் பார்த்து ஏளனமாய்த் தங்கள் தலையை அசைக்கிறார்கள். நாள்தோறும் நான் அவமானத்தில் வாழ்கிறேன்; என் முகம் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கிறது. என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும் பகைவர்களின் நிந்தனைகளினாலேயே வெட்கப்படுகிறேன். நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்; உமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம்; ஆனாலும், இவையெல்லாம் எங்களுக்கு நடந்தன. எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை, எங்கள் பாதங்கள் உமது வழியைவிட்டு விலகவுமில்லை. ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்; காரிருளினால் எங்களை மூடினீர். எங்கள் இறைவனின் பெயரை நாங்கள் மறந்திருந்தால், அல்லது வேறுநாட்டின் தெய்வமல்லாததை நோக்கி எங்கள் கைகளை நீட்டியிருந்தால், இறைவன் அதைக் கண்டுபிடியாமல் இருந்திருப்பாரோ? அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிகிறவராய் இருக்கிறாரே. ஆனாலும் உமக்காகவே நாங்கள் நாள்முழுதும் மரணத்தை சந்திக்கிறோம்; அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம். யெகோவாவே, எழுந்தருளும்! ஏன் நித்திரை செய்கிறீர்? விழித்துக்கொள்ளும்! எங்களை என்றென்றும் புறக்கணியாதேயும். நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, எங்கள் துன்பத்தையும் நாங்கள் ஒடுக்கப்படுவதையும் மறந்துவிடுகிறீர்? நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்; எங்கள் உடல்கள் தரையோடு ஒட்டியிருக்கிறது. நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்; உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும்.
சங்கீதம் 44:1-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம். தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி; மக்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவச்செய்தீர். அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் கைகளும் அவர்களைப் பாதுகாக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாக இருந்தபடியால், உம்முடைய வலதுகையும், உம்முடைய கையும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. தேவனே, நீர் என்னுடைய ராஜா; யாக்கோபுக்கு ஜெயத்தை கட்டளையிடுவீராக. உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம். என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன், என்னுடைய வாள் என்னை பாதுகாப்பதில்லை. நீரே எங்களுடைய எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர். தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்; உமது பெயரை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா) நீர் எங்களைத் தள்ளிவிட்டு, வெட்கமடையச்செய்கிறீர்; எங்களுடைய படைகளுடனே செல்லாமலிருக்கிறீர். எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள். நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, தேசங்களுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர். நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே. எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்கு ஏளனத்திற்கும், பழிப்புகளுக்கும் வைக்கிறீர். நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும், மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர். நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும், பழிவாங்குகிறவர்னிமித்தமும், என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது; என்னுடைய முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது. இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை. நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும், எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை. நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால், தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே. உமக்காக எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம். ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும். ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்களுடைய துன்பத்தையும் எங்களுடைய நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்? எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது; எங்களுடைய வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.
சங்கீதம் 44:1-26 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். தேவனே, உமது மிகுந்த வல்லமையினால் பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர். அந்நியர்களை அழித்தீர். இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர். எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை. அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை. நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது. தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர். என் தேவனே, நீர் என் ராஜா. நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும். என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம். உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம். நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன். என் வாள் என்னைக் காப்பாற்றாது. தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர். எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர். தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம். உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்! ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர். நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர். யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை. எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர். எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர். உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர். தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர். தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர். நீர் எங்களை விலை பேசவுமில்லை. எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர். அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள். ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம். தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள். நான் நாணத்தால் மூடப்பட்டேன். நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன். என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர். என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள். தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை. ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர். உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை. தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை. உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை. ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர். மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர். தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா? பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை! உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார். எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார். தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம். கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம். என் ஆண்டவரே, எழுந்திரும்! ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்! எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும். தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்? எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா? நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம், தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம். தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும். உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும்.
சங்கீதம் 44:1-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம். தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர். அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலது கரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது. தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும். உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம். என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர். தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா) நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர். சத்துருவுக்கு நாங்கள் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள். நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர். நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே. எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர். நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர். நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும், என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது. இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை. நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும், எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை. நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால், தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே. உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம். ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரைபண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும். ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்? எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.