சங்கீத புத்தகம் 44
44
கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் பாடல்.
1தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
2தேவனே, உமது மிகுந்த வல்லமையினால்
பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அந்நியர்களை அழித்தீர்.
இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர்.
3எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை.
அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை.
நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது.
தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர்.
4என் தேவனே, நீர் என் ராஜா.
நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.
5என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம்.
உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம்.
6நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன்.
என் வாள் என்னைக் காப்பாற்றாது.
7தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர்.
எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர்.
8தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம்.
உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!
9ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர்.
நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர்.
யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை.
10எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர்.
எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர்.
11உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர்.
தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர்.
12தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர்.
நீர் எங்களை விலை பேசவுமில்லை.
13எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர்.
அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள்.
14ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம்.
தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள்.
15நான் நாணத்தால் மூடப்பட்டேன்.
நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன்.
16என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர்.
என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.
17தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை.
ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர்.
உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை.
18தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை.
உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
19ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர்.
மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர்.
20தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா?
பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை!
21உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார்.
எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.
22தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்.
கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம்.
23என் ஆண்டவரே, எழுந்திரும்!
ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்!
எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும்.
24தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்?
எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா?
25நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம்,
தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம்.
26தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும்.
உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங்கீத புத்தகம் 44: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International