சங்கீதம் 22:14-24

சங்கீதம் 22:14-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது; என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின; என் இருதயம் மெழுகு போலாகி எனக்குள்ளே உருகிப் போயிற்று. என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று; என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது; என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன; தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது; என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள். என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்; மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள். அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு, என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள். ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். என்னை வாளுக்குத் தப்புவியும்; என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும். சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்; காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும். அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன், திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன். யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள். ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை, அலட்சியம் பண்ணவுமில்லை அவமதிக்கவுமில்லை. அவனிடத்திலிருந்து தமது முகத்தை மறைத்துக் கொள்ளவுமில்லை; ஆனால் அவன் உதவிகேட்டுக் கதறுகையில் அவர் செவிகொடுத்தார்.

சங்கீதம் 22:14-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, என்னுடைய குடல்களின் நடுவே உருகினது. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூசியிலே போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள். என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள். ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும். என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்கும் தப்புவியும். என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும். உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள். உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார்.

சங்கீதம் 22:14-24 பரிசுத்த பைபிள் (TAERV)

நிலத்தில் ஊற்றப்பட்ட நீரைப்போன்று என் வலிமை அகன்றது. என் எலும்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. என் தைரியம் மறைந்தது. உடைந்த மண்பாண்டத்தின் துண்டைப் போன்று என் வாய் உலர்ந்து போயிற்று. என் வாயின் மேலண்ணத்தில் என் நாவு ஒட்டிக் கொண்டது. “மரணத் தூளில்” நீர் என்னைப் போட்டீர். “நாய்கள்” என்னைச் சூழ்ந்திருக்கின்றன. தீயோர் கூட்டத்தின் கண்ணியில் விழுந்தேன். சிங்கத்தைப்போன்று என் கைகளையும் கால்களையும் அவர்கள் கிழித்தெறிந்தார்கள். என் எலும்புகளை நான் காண்கிறேன். ஜனங்கள் என்னை முறைத்தனர்! அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள்! அந்த ஜனங்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். என் அங்கியின் பொருட்டு சீட்டெழுதிப் போடுகின்றார்கள். கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்! கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும். அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும். சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும். காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும். கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன். பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன். கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே! அவரைத் தொழுதுகொள்ளுங்கள். இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள். தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார். கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை. கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை. கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.

சங்கீதம் 22:14-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக் கொண்டது; என்னை மரணத் தூளிலே போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போடுகிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக் கொள்ளும். என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும். என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டா மிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர். உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள். உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.