சங்கீத புத்தகம் 22:14-24

சங்கீத புத்தகம் 22:14-24 TAERV

நிலத்தில் ஊற்றப்பட்ட நீரைப்போன்று என் வலிமை அகன்றது. என் எலும்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. என் தைரியம் மறைந்தது. உடைந்த மண்பாண்டத்தின் துண்டைப் போன்று என் வாய் உலர்ந்து போயிற்று. என் வாயின் மேலண்ணத்தில் என் நாவு ஒட்டிக் கொண்டது. “மரணத் தூளில்” நீர் என்னைப் போட்டீர். “நாய்கள்” என்னைச் சூழ்ந்திருக்கின்றன. தீயோர் கூட்டத்தின் கண்ணியில் விழுந்தேன். சிங்கத்தைப்போன்று என் கைகளையும் கால்களையும் அவர்கள் கிழித்தெறிந்தார்கள். என் எலும்புகளை நான் காண்கிறேன். ஜனங்கள் என்னை முறைத்தனர்! அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள்! அந்த ஜனங்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். என் அங்கியின் பொருட்டு சீட்டெழுதிப் போடுகின்றார்கள். கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்! கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும். அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும். சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும். காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும். கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன். பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன். கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே! அவரைத் தொழுதுகொள்ளுங்கள். இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள். தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார். கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை. கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை. கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.