சங்கீதம் 19:7-14
சங்கீதம் 19:7-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது, அது ஆத்துமாவுக்குப் புத்துயிரளிக்கிறது. யெகோவாவினுடைய நியமங்கள் நம்பகமானவை, அவை பேதையை ஞானியாக்குகின்றன. யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை, அவை இருதயத்திற்கு மகிழ்வைக் கொடுக்கின்றன. யெகோவாவினுடைய கட்டளைகள் பிரகாசமானவை, அவை கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றன. யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது, அது என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை, அவை முற்றிலும் நீதியானவை. அவை தங்கத்தைவிட, சுத்தத் தங்கத்தைவிட மிகுந்த விலையுயர்ந்தவை. அவை தேனைப் பார்க்கிலும், கூட்டிலிருந்து வடியும் தெளித்தேனைப் பார்க்கிலும் இனிமையானவை. அவைகளால் உமது அடியேன் எச்சரிப்படைகிறேன்; அவைகளைக் கைக்கொள்வதால் மிகுந்த பலனுண்டு. தன் தவறுகளை அறிந்துணர யாரால் முடியும்? என் மறைவான குற்றங்களை எனக்கு மன்னியும். விரும்பி செய்யும் பாவங்களிலிருந்து உமது அடியேனைக் காத்துக்கொள்ளும்; அவைகள் என்னை ஆளுகை செய்யாதிருப்பதாக. அப்பொழுது நான் குற்றமற்றவனாயும், பெரும் மீறுதல்கள் அறியாதவனாயும் இருப்பேன். என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானமும் உமது பார்வையில் பிரியமாய் இருப்பதாக.
சங்கீதம் 19:7-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும். துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன். என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.
சங்கீதம் 19:7-14 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை. அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும். கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது. அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும். கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை. அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும். கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை. வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும். கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது. கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை. கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை. தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை. கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன. அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும். கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது. எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும். கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும். அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும். நீர் உதவினால் நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும். என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும். கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.
சங்கீதம் 19:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.