சங்கீதம் 14:1-7

சங்கீதம் 14:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறதில்லை. அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே. சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம் பண்ணினீர்கள். சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதம் 14:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“இறைவன் இல்லை” என்று மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான். அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. யெகோவா பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை. தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை. அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்; ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார். தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்; ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம். சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!

சங்கீதம் 14:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார். எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை. அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே. ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள். சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதம் 14:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

“தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான். கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள். அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை. கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார். ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார். (ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.) ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள். எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை. தீயோர் என் ஜனங்களை அழித்தனர். அத்தீயோர் தேவனை அறியார்கள். தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு. கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை. ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள். ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான். தேவன் நல்லவர்களோடு இருப்பார். எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள். சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும். கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்! கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர். ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார். அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும்.