சங்கீதம் 14:1-7

சங்கீதம் 14:1-7 TCV

“இறைவன் இல்லை” என்று மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான். அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. யெகோவா பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை. தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை. அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்; ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார். தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்; ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம். சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!