சங்கீதம் 13:1-6

சங்கீதம் 13:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்துவிடுவீர்? எப்பொழுதுமே மறந்துவிடுவீரோ? நீர் எவ்வளவு காலத்திற்கு என்னிடமிருந்து உமது முகத்தை மறைத்துக்கொள்வீர்? எவ்வளவு காலத்திற்கு நான் என் எண்ணங்களுடன் போராட வேண்டும்? எவ்வளவு காலத்திற்கு அனுதினமும் என் இருதயத்தில் துக்கத்தோடு இருக்கவேண்டும்? என் பகைவன் எவ்வளவு காலத்திற்கு என்னை வெற்றிகொள்வான்? என் இறைவனாகிய யெகோவாவே, என்னை நோக்கிப்பாரும்; எனக்குப் பதில் கொடும். என் கண்களுக்கு ஒளியைத் தாரும்; அல்லது நான் மரணத்தில் உறங்கி விடுவேன். அப்பொழுது என் பகைவன், “நான் அவனை மேற்கொண்டேன்” என்பான்; நான் விழும்போது என் எதிரிகளும் மகிழ்வார்கள். ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்; என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது. யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார், அதினால் நான் அவருக்குத் துதி பாடுவேன்.

சங்கீதம் 13:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

சங்கீதம் 13:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்? என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்? எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர். என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்? எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்? எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்! எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்! இல்லையெனில் நான் மடிவேன். அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான். என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான். கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன். நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர். கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.

சங்கீதம் 13:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர் எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்? எது வரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்? என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவி கொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும். அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும். நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.