சங்கீதம் 119:1-24

சங்கீதம் 119:1-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

குற்றமற்றவர்களாய் வாழ்ந்து, யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு, தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தவறு செய்யாமல் அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே நீர் அவைகளைக் கொடுத்தீர். ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும். உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது, நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன். நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்; என்னை முற்றிலும் கைவிடாதேயும். வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே. நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும். நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி, உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன். யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும் என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன். ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல், நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து, உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன். நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்; உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன். உமது அடியேனுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன். உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, என் கண்களைத் திறந்தருளும். பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும். உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால், என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது. அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்; அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள். நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால், பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும். ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும், உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன். உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன; அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன.

சங்கீதம் 119:1-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும். வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே. என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும். நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன். திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன். உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன். உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என்னுடைய கண்களைத் திறந்தருளும். பூமியிலே நான் அந்நியன்; உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும். உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது. உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர். நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன். அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது.

சங்கீதம் 119:1-24 பரிசுத்த பைபிள் (TAERV)

பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை. அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர். அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர். கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன். நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை. உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்! ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்? உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே. நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன். தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன். ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். உமது சட்டங்களை எனக்குப் போதியும். உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன். வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக் கற்பதில் களிப்படைவேன். நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன். உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன். நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன். உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன். உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும். அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும். கர்த்தாவே, எனது கண்களைத் திறவும். நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும், நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும். நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன். கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும். நான் எப்போதும் உமது நியாயங்களைக் கற்க விரும்புகிறேன். கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர். அவர்களுக்குத் தீமைகள் நேரிடும். அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும். நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன். தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள். ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன். உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது. அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.

சங்கீதம் 119:1-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தமமார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும். நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளை விட்டு வழிதப்பவிடாதேயும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன். திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன். உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். உமது பிரமாணங்களில் மன மகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும். உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது. உமது கற்பனைகளை விட்டு வழி விலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர். நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன். பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக் கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.

சங்கீதம் 119:1-24

சங்கீதம் 119:1-24 TAOVBSIசங்கீதம் 119:1-24 TAOVBSIசங்கீதம் 119:1-24 TAOVBSIசங்கீதம் 119:1-24 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்