சங்கீதம் 10:1-9

சங்கீதம் 10:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கொடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமை பாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டை பண்ணுகிறான். துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே. அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார் மேலும் சீறுகிறான். நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக் கொண்டிருக்கிறது. தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப் போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக் கொள்ளுகிறான்.

சங்கீதம் 10:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்ப நேரங்களில் நீர் ஏன் மறைந்துகொள்கிறீர்? கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்; அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்; அவன் பேராசைக்காரரை வாழ்த்தி யெகோவாவை நிந்திக்கிறான். கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை; அவனுடைய சிந்தனைகளிலெல்லாம் அவருக்கு இடமேயில்லை. அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன; உமது நீதிநெறிகளை அவன் ஒதுக்கி வைத்துள்ளான்; தன் பகைவர் அனைவரையும் ஏளனம் செய்கிறான். அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை, எனக்குத் தலைமுறை தலைமுறைதோறும் கஷ்டம் வராது” என்று சொல்லிக்கொள்கிறான். அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது; அவனுடைய நாவின்கீழே பிரச்சனையும் தீமையும் இருக்கின்றன. அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்; பதுங்கியிருந்து குற்றமற்றவனைக் கொலைசெய்கிறான். திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே கண்ணோக்கமாயிருந்து, பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான். அவன் ஆதரவற்றோரைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறான்; அவன் உதவியற்றோரைப் பிடித்து தன் வலையில் இழுத்துக்கொள்கிறான்.

சங்கீதம் 10:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான். துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன; தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான். நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து, மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன. தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

சங்கீதம் 10:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்? தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது. பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள். தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள். பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாக கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள். தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள். தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள். தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள். அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை. தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள். தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள். அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள். அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள். அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள். அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள். ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள். ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள். மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள். ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள்.