சங்கீத புத்தகம் 10:1-9

சங்கீத புத்தகம் 10:1-9 TAERV

கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்? தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது. பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள். தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள். பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாக கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள். தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள். தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள். தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள். அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை. தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள். தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள். அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள். அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள். அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள். அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள். ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள். ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள். மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள். ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள்.