நீதிமொழிகள் 30:21-31

நீதிமொழிகள் 30:21-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை, நான்காவது காரியத்தையோ அதினால் தாங்க முடியவில்லை: அரசனாகிவிடும் வேலைக்காரன், மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும், யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண், தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே. “பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு, ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை: எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன; குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே; ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன. வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை, ஆனாலும் அவை ஒன்றாய் அணிவகுத்துச் செல்கின்றன; பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம், ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது. “வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை, கம்பீரத் தோற்றமுடைய நான்காவதும் உண்டு: மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை; கர்வத்துடன் நடக்கும் சேவல், வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்; தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே.

நீதிமொழிகள் 30:21-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமுடியாது. அரசாளுகிற அடிமைக்காகவும், உணவால் திருப்தியான மூடனுக்காகவும், பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே. பூமியில் சிறியவைகளாக இருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு. அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும், பெலமில்லாத உயிரினமாக இருந்தும், தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும், ராஜா இல்லாமல் இருந்தும், கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே. விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு. அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும், பெருமையாய் நடக்கிற சேவலும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.

நீதிமொழிகள் 30:21-31 பரிசுத்த பைபிள் (TAERV)

பூமியில் தொல்லை விளைவிக்கக் கூடியவை மூன்று உண்டு. உண்மையில் பூமியால் தாங்க முடியாதவை நான்கு. ராஜாவாகிவிட்ட அடிமை, தனக்குத் தேவைப்படுகிற அனைத்துமுடைய முட்டாள், மனதில் முழுமை வெறுப்புடையவளாயிருந்தும் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்படும் பெண், தான் வேலை செய்த எஜமானிக்கே எஜமானியாகிற வேலைக்காரப் பெண் ஆகிய நால்வரையும் பூமி தாங்காது. உலகில் உள்ள மிகச் சிறியவை நான்கு, ஆனால் இவை மிகவும் ஞானமுடையவை. எறும்புகள் மிகச் சிறியவை, பலவீனமானவை. எனினும் அவை தங்களுக்குத் தேவையான உணவைக் கோடைக்காலம் முழுவதும் சேகரித்துக்கொள்ளும். குழி முயல்கள் மிகச்சிறிய மிருகம், ஆனாலும் இதுதன் வீட்டைப் பாறைகளுக்கு இடையில் கட்டிக்கொள்ளும். வெட்டுக்கிளிகளுக்கு ராஜா இல்லை. எனினும் அவை சேர்ந்து வேலைச்செய்கின்றன. பல்லி மிகச் சிறிது. அவற்றை நம் கையால் பிடித்துக்கொள்ளலாம். எனினும் அவை அரண்மனையிலும் வசிக்கின்றன. நடக்கும்போது முக்கியமானவைகளாகத் தோன்றுபவை மூன்று. உண்மையில் அவைகள் நான்காகும். சிங்கம் எல்லா மிருகங்களைவிடவும் மிகவும் பலம் பொருந்தியது. அது எதைக் கண்டும் ஓடுவதில்லை. பெருமையோடு நடக்கும் சேவல், வெள்ளாடு, தம் ஜனங்களிடையே இருக்கும் ஒரு ராஜா.

நீதிமொழிகள் 30:21-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது. அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும், பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப் பெண்ணினிமித்தமுமே. பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும், சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும், ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே. விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு. அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும். போர்க்குதிரையும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாத ராஜாவுமே.